தெரு சண்டைக்கு வந்தது அம்னோ – பாஸ் கூட்டணி

இராகவன் கருப்பையா- அம்னோ – பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் புரிந்துணர்வு எதிர்பார்த்ததை போலவே எந்நேரத்திலும் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்  உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அம்னோ மீது சினம் கொண்ட பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூண்டை விட்டுக் களைய ஆரம்பித்தன. அச்சமயத்தில் கொசுக் கட்சிகளாக  சுருங்கிய ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் வேறு வழியின்றி அம்னோவுடனேயே தொத்திக் கொண்டது எல்லாருக்கும் தெரியும்.

திடீரென தனிமரமாய் விடப்பட்ட அம்னோ மலாய்க்காரர்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு வேறு வழி தெரியாமல் பாஸ் கட்சியைப் போல பகிரங்கமாகவே இனத்தையும் மதத்தையும் முன்னிறுத்தித் தீவிரவாதக் கருத்துக்களை உமிழத் தொடங்கியது. தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ம.இ.கா. மற்றும் ம.சீ.ச.வின் உணர்வுகளைப் பற்றி அக்கட்சி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

அப்புறும் என்ன சொல்லவா வேண்டும்! அக்கட்சியின் திடீர் திசை மாற்றத்தினால் கொண்டாட்டமடைந்த பாஸ் கட்சியினர், ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக’ அம்னோவுடன் கூட்டுச் சேர்வது  என்று முடிவெடுத்தனர். அதன் விளைவாக அதற்கடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் தேதியன்று ‘முவாஃபாக்காட் நேஷனல்’ எனும்  ஒரு கூட்டணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற பல இடைத் தேர்தல்களில் இக்கூட்டணி புரிந்துணர்வோடு செயல்பட்ட போதிலும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்காத்தான் ஆட்சிக் கவிழ்ந்த பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற முஹிடினின் பெர்சத்துவுடன் பாஸ் கட்சி சோரம் போகத் தொடங்கியது.

ஏற்கெனவே பெர்சத்துவுடன் ‘எலியும் பூனையும் போல’ ஒரு உறவு முறையைக் கொண்டுள்ள அம்னோவுக்கு பாஸ் கட்சியின் போக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது உண்மைதான். பாஸ் நடந்து கொள்ளும் விதம் விலை மாதரைப் போல உள்ளது என அம்னோவின் மூத்தத் தலைவர் ரஸாலி ஹம்சா ஒரு முறை கடிந்து கொண்டதையும் நாம் இன்னும் மறக்கவில்லை.

‘முவாஃபாக்காட் நேஷனல்’ கூட்டணியை அவர்கள் இன்னும் முறித்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் அவ்விரு கட்சிகளுக்கு இடையிலான பகைமை கடந்த வாரம் நடைபெற்ற ஜொகூர் மாநில இடைத் தேர்தலின் போது உச்சத்தை எட்டியது என்றே சொல்ல வேண்டும்.

லஞ்சம், ஊழல், போன்ற முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டுமேயானால் அம்னோவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். அம்னோவுடன் அரசியல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹாடியே  அப்படி பேசியது வியப்பைத்தான் ஏற்படுத்தியது.

அம்னோ இல்லாத நாடுதான் வளர்ச்சியடையும். அம்னோ  இல்லதானால்தான் சிங்கப்பூர் மேம்பாடு கண்டுள்ளது என்று கூறிய பாஸ் கட்சியின் உதவித் தலைவர் முஹமட் அமார் ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல’ அம்னோ  தலைவர்களை மேலும் சீண்டினார்.

அதற்கு பதிலுரைத்த ஒரு கிளந்தான் மாநில அம்னோ தலைவர், முஹமட் அமார் கூறுவது முட்டாள்தனமான ஒரு கேலிக் கூத்து என்று சீறினார். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் கிளந்தானை பாஸ் ஆட்சி செய்து வருகிற போதிலும் அம்மாநிலம் இன்னமும் சீரழிந்துதான் கிடக்கிறது என்று அவர் சாடினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்படும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் சற்று இருமாப்போடு குறிப்பிட்டிருந்தார். பெர்சத்துவோடு சேர்ந்து தாங்களும் ஜொகூரில் மகத்தான வெற்றியடையும் எண்ணத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும்.

ஆனால் அங்குப் போட்டியிட்ட மொத்தம் 15 தொகுதியில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியடைந்த பாஸ் அவமானப்பட்டதுதான் மிச்சம்.

இந்நிலையில் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றியைத் தழுவிப் புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தில் மிதக்கும்  அம்னோ எந்நேரத்திலும் பாஸ் கட்சியைத் தூக்கி எறியக்கூடும். பாஸ் கட்சியின் உதவியோ ஆதரவோ இல்லாமல் தனித்தே நின்று வெற்றிக் கனியை பறிப்பதற்கான தன்னம்பிக்கை தற்போது அம்னோவுக்கு வலுவாகவே உள்ளது.

எனவே பாஸ் கட்சியின் உருட்டலும் மிரட்டலும் இனி பலிக்காத நிலையில் அம்னோவுடனான  அதன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  மிக விரைவில் முறியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சத்துவும் கிட்டதட்ட அஸ்தமனமாகும் தறுவாயில் இருப்பதால் பாஸ் கட்சியின் நிலை தற்போது ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதைதான்!