சொஸ்மா வாக்கெடுப்பில் வேண்டுமென்றே சதியா?

இராகவன் கருப்பையா –சொஸ்மா எனும் கொடூரச் சட்டத்தின் ஒரு துணை விதியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பாக இவ்வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற  வாக்கெடுப்பின் பின்னணியில் மாபெரும் சதித்திட்டம் ஒன்று அரங்கேறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டின் வரலாற்றில் அரசாங்கம் முன்மொழிந்த ஒரு சட்டத்திருத்தம் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசு தரப்பில் 84 வாக்குகளும் எதிர்த் தரப்பில் 86 வாக்குகளும் பதிவு செய்யப்பட்ட  நிலையில் அந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

‘அரசாங்கத்தின் முன்மொழிவை வெற்றிகரமாக தோற்கடித்துவிட்டோம்’ என எதிர்க்கட்சியினர் மார்தட்டிக் கொண்டாடுகிற போதிலும் ஆளும் கட்சிகளைச்  சேர்ந்த சிலர் வேண்டுமென்றே இந்தத் தோல்விக்கு வழிவகுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் உள்பட அரசுத் தரப்பைச் சேர்ந்த மொத்தம் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்ட ஒரு செயலா என்று மக்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு தற்போதைய அரசியல் சூழல் நிலவுகின்றது.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சிலருக்கு என் முகத்தைப் பிடிக்கவில்லை. அதனால்தான் வாக்களிக்க அவர்கள் வரவில்லை என சட்டத் திருத்தத்தை முன்மொழிந்த உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் நக்கலாகப் பேசியதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் கொண்டுவரும் ஒரு தீர்மானம் தோல்வியடைந்தால் ஆட்சி வலுவிழந்துள்ளது என்பதை இயல்பாகவே அது புலப்படுத்தும்.

அரசாங்கம் மிகவும் வலுவற்ற நிலையில் உள்ளதா. எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

பொதுத் தேர்தலை மிக விரைவில் நடத்தி எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என ஸாஹிட்டும் நஜிபும் ஏன் துடியாய்த் துடிக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை.

ஆனால் பக்காத்தானின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி கவிழக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதும் நமக்குத் தெரியும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் பதவியேற்ற இஸ்மாய்ல் சப்ரி, முதல் வேலையாக பக்காத்தானுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இவ்வாண்டு ஜூலை மாதம் வரையில் அமலில் இருக்கும். அது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முன்மொழிவு அடைந்த தோல்வியானது, பக்காத்தானுடனான அதன்  ஒப்பந்தத்தை எவ்வகையிலும் பாதிக்காது என எதிர்க்கட்சி தலைவர் அன்வார் உறுதிப்படுத்தினார். அதே போல்தான் ஜ.செ.க.வின்  புதிய தலைமைச் செயலாளர் லொக் சியூ ஃபூக்கும் கருத்துரைத்தார்.

ஆனால் அந்த உடன்படிக்கையை உடனே முறித்துக் கொள்ள வேண்டும் என எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கித் தவித்து கொண்டிருக்கும் ஸாஹிட் உக்கிரமாக வலியுறுத்தி வருகிறார்.

அம்னோவின் துணைத் தலைவர் முஹமட் ஹசான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்ற போதிலும், பொதுத் தேர்தலுக்காக அவரும் ஏன் துடிக்கிறார் என்பது வெள்ளிடை மலை. ஜூலை மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த ஒப்பந்தத்தை உடனே மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

எந்நேரத்திலும் சிறை வாசலை மிதிக்கும் தறுவாயில் இருக்கும் நஜிப் இது குறித்து நேரடியாகக் கருத்துரைக்கவில்லை என்ற போதிலும் ‘போஸ் கு’ எனும் அடைமொழியுடன் நாடளாவிய நிலையில் தனது புகழை மீண்டும் மீட்சி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆட்சியைக் கலைக்குமாறு பக்காத்தானே வலியுறுத்தும் என்று அநேகமாக இவர்கள் எதிர் பார்த்திருக்கக் கூடும்.

ஆனால் ஆட்சிக் கலைப்பு பற்றி அதன் முன்னணித் தலைவர்கள் யாரும் பேசாதது இவர்களுக்கு ஒரு வகையில் ஏமாற்றம்தான்.

உலகிலேயே, இப்போதைக்கு பொதுத் தேர்தல் வேண்டாம் என்று கூறும் ஒரே எதிர்க் கட்சி பக்காத்தானாகத்தான் இருக்கும் என்று சில தினங்களுக்கு முன் ஸாஹிட்  குறிப்பிட்டிருந்தார்.

சுயநல வேட்கையில் சொந்த ஆட்சியையே உலுக்கிக் கொண்டிருக்கும் இவர்களுடைய அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.