ஜெர்மனியின் ஹிட்லர் அணியை எதிர்த்து நின்று போரிட்டு வெற்றி கண்ட கூட்டணி படைகள் இணைந்து இரஷ்யாவின் கம்யூனிஸ தத்துவம் பரவுவதைத் தடுக்க பல வியூகங்களைத் வகுத்தன.
அமெரிக்கா, பிரிட்டன், பிராஞ்சு, சியாங் காய்-ஷேக்கின் தலைமையிலான சீன குடியரசு (தைவான்) ஆகிய நாடுகள் இரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் இறங்கின.
அந்தக் காலகட்டத்தில், அதாவது இரண்டாம் போர் முடிவுற்ற பிறகு, காலனித்துவத்தில் கட்டுண்டு கிடக்கும் நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. “சுதந்திர உலகம் காண்போம்” எனப் பறைசாற்றினர் அமெரிக்க தலைவர்கள். அவர்களுக்கு ஜால்ரா அடிக்க பிரிட்டன் ஒருபோதும் தயங்கவில்லை.
சுதந்திர உலகம் என்றால் அது எதைக் குறிக்கிறது? அமெரிக்க தலைவர்களோடு ஏனைய மேற்கத்திய தலைவர்களும், கம்யூனிஸத்தை எதிர்க்கும் நாடுகள்தான் சுதந்திர நாடுகள் என்ற கொள்கையை வலியுறுத்தினர். இந்தக் கோட்பாட்டை ஊடுருவிப் பார்த்தால் அது இரஷ்யாவின் கம்யூனிஸத்தை எதிர்க்கும் சக்திகளை ஒன்று திரட்டும் அணியைப் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
அமெரிக்காவின் குறி என்ன? எல்லா ஜனநாயக நாடுகளும் ஒன்றுகூடி சர்வதிகார கோட்பாட்டைப் பரப்பவும், நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் இரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதே. ஜனநாயகத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் நாடுகளில் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து திண்டாடுகிறார்கள், அவலத்தில் ஊழலுகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. ஒருவேளை இது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நிகழ்ந்த கொடுமை என்று சொல்வோரும் உண்டு.
ஆனால், ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதாகச் சூளுரைத்த அமெரிக்காவும், பிரிட்டனும் ஜனநாயக ஆட்சி நிலைத்திட வழி கண்டனவா? வரலாறு அவர்களின் கொடுமையான சூழ்ச்சியை வெளிப்படுத்துகிறதே அன்றி அவர்களின் நாவும், மனசும் சுத்தம் கொண்டவை என்று சொல்வதற்கு வரலாறு தயங்கும். அமெரிக்காவும், பிரிட்டனும் சுதந்திர உலகுக்கு வித்திட்டார்கள் என்று புகழ் மாலை சூட்டினால் வரலாறு ஒப்பாரி வைக்கும்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா? மத்தியக் கிழக்கில் பிரச்சினைகள் தீராது இருக்க யார் காரணம்? கம்யூனிஸ்டுகளா அல்லது சமயவாதிகளா? கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகச் செயல்படத் தயங்காத அமெரிக்காவும், பிரிட்டனும் சமயவாத சக்திகளுக்கு ஆதரவு தந்து எங்கெல்லாம் குழப்பத்தை மூட்டிவிடுமோ அதில்தான் அவையும், அவற்றோடு இணைந்திருக்கும் நாடுகளின் சுதந்திர உலகம்.
எப்படி இருக்கிறது அமெரிக்கர்கள் காண நினைத்த சுதந்திர உலகம்? இன்றைய அமெரிக்க அதிபர் அந்தச் சுதந்திர உலகை நினைவுப்படுத்துவது வேடிக்கையே!
மலாயாவின் அரசியல் நிலை என்ன? ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவர்களில் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் அடங்கும். அக்கட்சியின் போர் காலப் பங்கினை அங்கீகரிக்கும் வகையில் அமைந்திருந்தது அக்கட்சியின் தலைவருக்குப் பிரிட்டிஷாரால் விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல, இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பூர்வமாக இயங்கவும் முடிந்தது.
ஆனால், அது நீடிக்கவில்லை. ஏன்? சுதந்திர உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகக் கோட்பாட்டை மதித்துப் பின்பற்றும் அரசு, மக்களுக்குப் புது வாழ்வைத் தரும் அரசு, புது அரசியல் வாழ்க்கை, சமுதாய நீதி, பொருளாதார நீதி, அப்பழுக்கற்ற நீதித்துறை, நல்லிணக்கம், நட்பு, பரஸ்பர நம்பிக்கை என இவையாவும் சுதந்திர உலகின் பரிசுகள் என்றார்கள். இந்த நாட்டில் கம்யூனிஸம் மரித்து, மாய்ந்துவிட்டது.
சுதந்திரம் வந்தது. கூடவே ஜனநாயகத்துக்குப் புது விதமான அர்த்தமும் பிறந்தது. பொருளாதார நீதி இல்லை! சமுதாய நீதி இல்லை! நீதித்துறை சஞ்சலத்தில் ஊசலாடுகிறது. இதுவா சுதந்திர உலகத்தின் இலட்சணம்?
மலேசியர்கள் கம்யூனிஸத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். அதற்காக முதலாளித்துவத்துக்கும், துரைத்தனத்துக்கும் அடங்கிக் கிடக்க வேண்டுமா? இந்த முதலாளித்துவ, துரைத்தனப் பித்தலாட்ட அரசியல் தொடர்கிறது. மலேசியர்கள் எவ்வளவு காலம்தான் சகித்துக் கொள்ள வேண்டும்?
முதலாளித்துவமும், துரைத்தனமும் நிலைத்திட இன, சமயப் பிரச்சினைகள் தேவை. இதைத்தான் சில சக்திகள் வளர்க்கின்றன. காரணம், இந்தப் பிரச்சினைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையை இருட்டடிப்புச் செய்துவிடுகிறது.
அன்று இருந்ததும், இன்று இருப்பதும் ஒரே பிரச்சனைதான்.
உள்ளார், இல்லார் என்ற பிளவுபட்ட நிலை. உள்ளார் தங்களின் செல்வத்தை வளப்படுத்த பாடுபடுகின்றனர். இல்லார் வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிட்டது என்பதை உணர்ந்தும் மவுனமாகத் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தக் குறையை நீக்க வேண்டும். எல்லா அரசு துறைகளிலும் திருத்தம் தேவை. மனித நேய அணுகுமுறை தேவை. சீர்த்திருத்தம் தேவை. இந்தக் குணாதிசயங்கள் நாட்டின் ஆட்சி நிர்வாகத் துறையில், பொருளாதாரத் துறையில், கல்வி துறையில், அமலாக்கத் துறைகள் யாவும் சீர்த்திருத்தம் காண வேண்டும். இதை கடமையாகக் கொள்ள வேண்டியது அரசியல் இயக்கங்களின் கடமையாகும்.
சுதந்திரத்துக்கு முன்பு இருந்த சூழ்நிலையை இன்றோடு ஒப்பிட இயலாது. இதுநாள் வரை ஏற்பட்டிருக்கும், இனிமேலும் ஏற்படக்கூடிய மாறுதல்களைக் கவனத்தில் கொள்வது நல்லது.
இந்த உண்மையை எல்லா கட்சியினரும், எல்லா இனத்தவர்களும், சமயத்தவர்களும் உணர வேண்டும். இன, மொழி, சமயப் பிரச்சினை இல்லாத நாடே இல்லை எனலாம்.
ஆனால், பொருளாதார அநீதி, சமுதாயத்தில் அநீதி தலைவிரித்தாடினால் அது விளைவிக்கும் கேடுகள் அதிகமாகவே இருக்கும் என்பதோடு அதிலிருந்து மீளுவது சிரமமே. அதிலும் ஊழல் கட்டுப்பாடற்ற தன்மையை அடைந்துவிட்டால் நாம் நம்பும் நீதியின் சக்தி வலுவற்றுவிடும். அதுதான் பெரும் ஆபத்து.
உள்ளார், இல்லார் என்ற நிலையைக் களைந்தால்தான் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும். உள்ளவன் ஊழலை ஆதரிக்கிறான், இல்லாதவன் கை நீட்டுகிறான்.
நமக்குத் தேவை சச்சரவுமிகு போலி சுதந்திர உலகம் அல்ல. இது அமெரிக்காவின் பித்தலாட்ட அரசியல் தத்துவம். நமக்குத் தேவை நியாயமான, நேர்மையான, உழைப்பை மதிக்கும் அரசு, மனிதநேயத்தை மதிக்கும் அரசு, மனிதர்களை மனிதர்களாக நடத்தும் அரசு.