இராகவன் கருப்பையா- ஜொகூர் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்து என்ன, என்று சிந்திக்கும் போது மிகப் பெரிய சுமையைத் தன் தலையில் சுமந்து நிற்கும் பிரதமர் சப்ரியின் மீதுதான் தற்போது எல்லாருடைய பார்வையும் திரும்பியுள்ளது.
நாடாளுமன்றத்தைக் களைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி விட வேண்டும் என்று பல கோணங்களிலிருந்தும் நெருக்குதல்கள் வலுத்து வரும் வேளையில் சப்ரி இன்னமும் மௌனமாகவே இருக்கிறார்.
முள்ளின் மேல் நடப்பதைப் போல மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள அவர் கடுகளவும் பதற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் தற்போது உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சற்றும் எதிர்பாராமல் ‘ஜெக்பொட’ அடித்ததைப்போல வந்து அமைந்த பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து இந்தோனேசியா, சிங்கப்பூர், புரூணய், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் காட்டார் ஆகிய மொத்தம் 7 நாடுகளுக்கு அவர் அதிகாரத்துவப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். அநேகமாக மிகக் குறுகிய காலத்தில் இத்தனை நாடுகளுக்குப் பயணித்த ஒரே மலேசியப் பிரதமர் சப்ரியாகத்தான் இருக்கும்.
மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசானுக்கு மகத்தான வெற்றிகள் கிடைத்ததைத் தொடர்ந்து சூட்டோடு சூடாகப் பொதுத் தேர்தலையும் நடத்திவிட வேண்டும் என அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் தலைமையிலான ஒரு கூட்டம் உள்நாட்டில் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் சப்ரி மட்டும் சாவகாசமாக வானில் பறந்து திரிவது வியப்பாகவே உள்ளது.
அடுத்த பொதுத் தேர்தல் வரையில் மட்டும்தான் பிரதமர் பதவியை அலங்கரிக்க முடியும் எனும் யதார்த்தத்தை நன்கு உணர்ந்துள்ள அவர் அந்நிலையை மாற்றியமைப்பதற்கான வியூகங்களைத் தற்போது வரைந்து வருவதாக நம்பப்படுகிறது.
அம்னோவில், தான் இல்லையெனில் ஒரு அணுவும் அசையாது எனும் மாயையான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி அதில் குளிர்காயப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிபோடு ஸாஹிட்டும் கட்சியின் துணைத் தலைவர் முஹமட் ஹசானும் பிரதமர் பதவிக்கான முன் வரிசையில் உள்ளனர். பாரிசான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இவை.
இம்மூவரையும் பின்தள்ளிப் பிரதமர் பதவியில் சப்ரி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் கட்சித் தேர்தலில் அவர் தலைமை பீடத்தை அடைய வேண்டும். அவ்வாறு கட்சிக்கு அவர் தலைவராகிவிட்டால் ஊழல் வழக்குகளைக் காரணம் காட்டி நஜிபையும் ஸாஹிட்டையும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாமல் கூட அவரால் செய்துவிட முடியும். சட்ட விதிகளின் படி அம்னோவின் தேர்தல் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் பதவி தனக்கு வழங்கியுள்ள அதிகாரப் பலத்தையும் பணப் பலத்தையும் பயன்படுத்திக் கட்சியைச் சப்ரி கைப்பற்றிவிடுவாரோ எனும் அச்சத்தில் அவ்விருவரும் தூக்கத்தைத் தொலைத்துள்ளதாகத் தெரிகிறது. அதனால்தான் கட்சித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் உக்கிரமாகப் போராடி வருகின்றனர். பொதுத் தேர்தலுக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூலை மாதமாகும்.
அம்னோவின் மொத்தம் 190 பிரிவுகளில் குறைந்தது 186 பிரிவுகள் கட்சித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன என்று ஸாஹிட் அறிவித்துள்ள போதிலும் சப்ரி அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
பொதுத் தேர்தல் முதலில் நடைபெற்றால் அம்னோ தலைவர் என்ற வகையில் ஸாஹிட் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சப்ரியின் அரசியல் வாழ்க்கையையே ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
‘அண்மைய மாநிலத் தேர்தல்கள் அம்னோவுக்குச் சாதகமான அலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் வலுவிழந்து காணப்படுகின்றன. எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்று காரணம் காட்டி முஹமட் ஹசானும் பொதுத் தேர்தலுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
பிரதமர் பதவி மீது குறி வைத்திருக்கும் அவருக்கும் சப்ரி ஒரு மிரட்டலாகத்தான் உள்ளார். முதல் முறையாக அம்னோவின் துணைத் தலைவர் பதவி வரையில் உயர்ந்துள்ள அவர், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ’ எனும் அச்சத்தில் அவதியுறுவதைப் போலவும் தெரிகிறது.
எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றினால்தான் தங்களுடைய மேகா ஊழல் வழக்குகளிலிருந்து விடுபட வழி பிறக்கும் என அம்னோ தலைவர்கள் கங்கணம் கட்டிக் காய்களை நகர்த்தி வரும் வேளையில் பிரதமர் பதவி மீது ‘ருசி கண்ட பூனை’யாகச் சப்ரியும் சுலபத்தில் அதனை விட்டுக் கொடுக்கமாட்டார் என்பது உறுதி.
பக்காத்தானுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை அமலில் இருக்கும் வரையில் தனது ஆட்சிக்கு ஆபத்தில்லை எனும் துணிச்சலில் கிடைத்துள்ள அவகாசத்தைப் பயன்படுத்தித் திரை மறைவில் சப்ரி திட்டம் தீட்டி வருவதாக நம்பப்படுகிறது.
இவர்கள் எல்லாருமே ஆட்சியைக் கைப்பற்றித் தங்களுடைய நிலைகளைத்தான் வலுப்படுத்திக் கொள்ளத் துடிக்கிறார்களே தவிர விலைவாசி உயர்வுகளினாலும் வறுமையிலும் வேலையின்மையாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுச் சொல்லொண்ணாத் துயரில் வாடும் பொது மக்களின் கண்ணீரைத் துடைக்க என்னதான் வழி?