இராகவன் கருப்பையா –நாட்டில் கடந்த இரு வாரகால அரசியல் நடப்புகளை வைத்துப் பார்த்தால் முஹிடினின் பெர்சத்துவும் மகாதீரின் பெஜுவாங் கட்சியும் வாழ்வா சாவா எனும் விளிம்பில் பரிதவித்துக் கொண்டிருப்பது மிகத் தெளிவாக ஊர்ஜிதமாகியுள்ளது.
நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுமே படுதோல்வியைத் தழுவியதானது மக்களிடையே அவற்றுக்கு எவ்வாறான வரவேற்பு உள்ளது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பக்காத்தான் கூட்டணிக்குத் துரோகமிழைத்துச் சில அரசியல் தவளைகளின் ஆதரவோடு கொல்லைப்புற ஆட்சியமைத்த முஹிடினை மக்கள் மன்னிக்கத் தயாராய் இல்லை.
அதே போல ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்ட மகாதீரின் அரசியல் வாழ்வும் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஒன்றுமே சாதிக்க இயலாது எனும் சூழலை நன்கு உணர்ந்துள்ள அவ்விருவரும் தேர்தலுக்குத் தயாராகும் பொருட்டு யாருடனாவது கூட்டணி அமைக்க முடியுமா எனும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இருந்த போதிலும் அவர்களுடைய வறட்டுக் கௌரவம் இந்த நிலைப்பாட்டை ஒப்பு கொள்ள மறுக்கிறது. ‘கூட்டணி அமைக்க முஹிடின் என்னை அழைத்தார்’ என்று மகாதீர் சொல்ல, ‘நான் மகாதீரை அழைக்கவில்லை, அவர்தான் என்னை அழைத்தார்’ என்று முஹிடின் மறுக்க, சிறு பிள்ளைகளைப் போல இவ்விரு முன்னாள் பிரதமர்களும் வாதம் செய்வதைப் பார்க்கக் கூத்தாகத்தான் உள்ளது.
தனது தந்தை மகாதீரைச் சந்திப்பதற்கு முஹீடின் தூது அனுப்பினார் என்றும் அதன்படி அவ்விருவரும் மார்ச் மாத மத்தியில் சந்தித்தனர் எனவும் பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் கடந்த மாத இறுதியில் அம்பலப்படுத்தினார்.
அது குறித்துப் பிறகு கருத்துரைத்த மகாதீர், மீண்டும் பிரதமர் பதவியில் அமருவதற்கு முஹிடின் துடிப்பதாகவும் அதற்கு உதவும்படி தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார். பிரதமராக இருந்த அந்தக் குறுகிய காலத்தில் மக்களுக்கு அவரைப் பிடிக்காமல் போய்விட்டது என்றும் நாட்டை அவர் சிறப்பாக நிர்வாகம் செய்திருந்தால் எங்களுடைய உதவி இல்லாமலேயே அவர் மீண்டும் பிரதமராக முடியும் என மகாதீர் குறிப்பிடுவதும் நியாயமான கருத்துதான்.
ஆனால் மகாதீரைச் சந்திப்பதற்குத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் பெஜுவாங் உள்பட மற்ற கட்சிகள்தான் தன்னை அணுகியதாகவும் முஹிடின் வெளியிட்ட அறிக்கை வேடிக்கையான ஒன்றைப் போல்தான் தெரிகிறது.
இதற்கிடையே மகாதீருடனான சந்திப்பு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து முஹிடின் தன்னயும் அழைத்ததாக வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி அப்டால் கூறினார். மீண்டும் பிரதமராவதற்கு உதவுமாறு முஹிடின் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அந்தப் பேச்சிக்கே இடமில்லை என மறுத்துவிட்டதாகவும் ஷாஃபி குறிப்பிட்டார்.
பிரதமர் பதவி மீது குறி வைத்திருப்பவர்களில் ஷாஃபியும் ஒருவர் என்பது நாடறிந்த உண்மை. இந்திலையில் அதே எண்ணத்தில் முஹிடின் அவரை அணுகியது வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது.
இதற்கிடையே ஜ.செ.க. தலைவர் லிம் குவான் எங்ஙும் அமானா தலைவர் முஹமட் சாபுவும் கூட ஒருமைப்பட்ட நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர்.
பக்காத்தான் கட்சிகளை முஹிடின் இதுவரையில் அணுகியதாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் பக்காத்தானுக்கு துரோகமிழைத்த முஹிடினுடன் ஒத்துழைப்புக்கான சாத்தியம் ஒரு போதும் இல்லை என இருவருமே திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.
இதனிடையே முஹிடினுக்குக் கொஞ்சம் கூடக் கண்ணியம் இல்லை என அம்னோவின் முன்னாள் அமைச்சர் நஸ்ரி சாடினார். யார் முதுகில் அவர் குத்தினாரோ தனது சுயநலத்திற்காக இப்போது அவர்களிடமே சென்று கெஞ்சிக் கொண்டிருக்கும் முஹிடின் நேர்மையில்லாத ஒருவர் எனப் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி விளாசினார்.
கடந்த ஆண்டு மத்தியில் கோறனி நச்சிலின் கொடூரத் தாக்கத்தில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருந்த வேளையிலும் கூடக் கடுகளவும் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் தனது பிரதமர் பதவியைத் தற்காப்பதில் மட்டுமே குறியாய் இருந்த முஹிடினை யார்தான் மன்னிப்பார்!
எது எப்படியோ மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைக் கரை சேர்க்கப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் மகாதீரும் முஹிடினும் உள்ளனர் இப்போது.
பாஸ் கட்சிக்கு வேறு வழியில்லாமல் பெர்சத்துவுடன் தொத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் பாஸ் கட்சியை மட்டுமே நம்பித் தனது இலக்கை அடைய முடியாது என்று முஹிடினுக்கும் தெரியும். அதனால்தான் வெட்கத்தை விட்டு எல்லாரிடமும் போய்க் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் அனைவருடைய நம்பிக்கையையும் முற்றாக இழந்துவிட்ட மகாதீரின் பெஜுவாங் கட்சியை யாரும் ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள் என்றே தெரிகிறது.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி கவிழ்வதற்கு இவ்விருவருமே முதுகெலும்பாகச் செயல்பட்ட அநியாயக் கோலங்கள் மக்கள் மனங்களில் மறையாமல் இருக்கும் வரையில் வாக்குரிமையின் வழி அவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி.