கி.சீலதாஸ் – அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூடவே பொது பதவி வகிப்பவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் பதவி விலக வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்குவாதம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினை அவ்வப்போது எழுந்து அடங்கிவருவது உண்டு.
அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் அல்லது குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை முதலில் கவனிப்போம். நீதிமன்றத்தால் தலைவர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால் அந்தத் தண்டனையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் விசாரணை நீதிமன்றத்திற்கு உண்டு. சட்டம் இதற்கு வகை செய்கிறது.
எனவே, தண்டனை நிறுத்தி வைக்கப்படுவது புதினமல்ல. ஆனால், இந்த விருப்புரிமை அதிகாரத்தை, தண்டனையை நிறுத்தி வைக்கும் நீதிமன்றம் முரண்பாடற்ற தராதரத்தைக் கொண்டிருப்பதோடு குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டோர் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டுமே அன்றி, தீர்ப்பு குற்றவாளியின் அந்தஸ்து அல்லது மற்ற பல காரணங்களால் நீதியின் பார்வையை மங்க செய்யக்கூடாது.
அவ்வாறு நிகழ்ந்தால் மக்களின் வெறுப்பை அது ஈர்க்கும். தண்டனையை நிறுத்தி வைக்கும்போது அது நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கும். நிபந்தனையற்ற நிறுத்திவைப்பு ஆபத்தான போக்கு என்றால் மிகையாகாது.
ஒரு கட்சியின் தலைவர் குற்றவியல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அக்கட்சியின் உறுப்பினர்களே அவர் தலைவராகத் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கட்சியின் தலைவராகத் தொடர்ந்தால் அது கட்சிக்கு நன்மை நல்குமா என்பதை அக்கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்யலாம்.
கட்சியின் பொறுப்பில் மட்டுமல்ல அரசு பதவியில் அவர் நீடிக்கலாமா என்பதைக் கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்யலாம். அதே சமயத்தில், கட்சித் தலைவர்களின் ஊழல்கள், பகிரங்கமான சட்டமுறை ஆட்சி மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்களை மூடிக் கொண்ட உறுப்பினர்களின் மனநிலையைக் காணுகையில் குற்றம் சாட்டப்பட்ட தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கப்பட்டால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இப்படிப்பட்ட போக்கைக் கட்சி ஒற்றுமை எனலாம் அல்லது இன, சமய உறவுமுறை, நட்புமுறை அல்லது மற்றும் பல காரணங்களால் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களைக் கண்டிக்காமல், அவர்கள்மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவரைப் பதவியிலிருந்து மட்டுமல்ல கட்சியில் இருந்தே நீக்காமல் அரவணைக்கும் மனோபாவத்தையும் காண்பது கண்கூடு.
சாதாரண மனிதனுக்கு இந்த அரசியல் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது. அக்கட்சியின் உறுப்பினர்கள் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும். எடுப்பார்களா? சந்தேகம்தான்!! அமைப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் பலனளிக்குமா என்பது சிக்கலான கேள்வியே!
அதே வேளையில், அரசியல் கட்சித் தலைவர் பொது பதவியையும் வகிப்பவர். குற்றவியல் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் அவர் அப்பதவியில் இருந்தும், நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும்படி கோர மக்களுக்கு உரிமை உண்டு. இக்காலத்து அரசியல் நிலைமையும், விரிவடைந்து வரும் அரசியல் ஊழல்களையும் பார்க்கும்போது குற்றம் சாட்டப்பட்ட தலைவர்கள் எளிதில் பதவி விலக மாட்டார்கள் என்பது புலனாகிவிட்டது.
பதவி துறப்பதுதான் நியாயம். காரணம், அவரால் மனப்பூர்வமாகக் கடமைகளைச் செய்ய இயலாது. தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெறும் வரை எந்தப் பொது பதவியிலும் அங்கம் வகிக்கக்கூடாது.
இங்கே நடைமுறையில் இருக்கும் விதிகளைக் கவனிப்போம். சட்டம் அரசு ஊழியர் ஒருவரைப் பொது அலுவலராகத்தான் ஏற்றுக்கொள்கிறது. அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் அவர் தமது பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவருக்கும், மக்கள் பிரதிநிதியாகப் பொது பதவிக்கு வந்தவர்க்கும் என்ன வித்தியாசம்? இருவரும் பொது சேவை ஊழியர்களே என்று முடிவு கொள்வதில் எந்தப் பிசகுமில்லை.
சட்டத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட உண்மை என்னவெனில் குற்றம் நிரூபிக்கும் வரை ஒருவர் நிரபராதி என்பதாகும். இன்று விஞ்ஞானம், கணினி போன்றவற்றின் பிரவேகம் யாவும் குற்றங்களை எளிதில், துரிதமாகப் புரிவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டிருப்பதைக் கவனிக்கும்போது பழைய சட்ட அணுகுமுறையில் சீர்த்திருத்தமும், மாற்றமும் தேவைப்படுகிறது.
சமுதாயம் மாறுகிறது. காலத்துக்கேற்றவாறு அது மாறிக்கொண்டே இருக்கும். சட்டத்தைத் துச்சமென நினைப்போர், நீதியை மதிக்க மறுப்போர், அதிகார அகங்காரத்தில் நம்பிக்கையுடையோரின் எண்ணிக்கை பெருகி வருவதைத் தடுக்கும் முயற்சியில் மக்கள் துணியாவிட்டால் இறுதியில் அவர்கள்தான் அவலத்தை அனுபவிக்க வேண்டும். வெள்ளம் வரும் முன் அணை போடுவதுதான் விவேகமான முடிவு.
மற்றுமொரு விஷயத்தையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் சற்றும் அக்கறை இல்லாத, பின்விளைவுகளைப் பற்றிக் கிஞ்சித்தும் அஞ்சாத, பழிவாங்கும் தன்மையுடைய அரசியல் நிலை பரவுகிறது. இதற்கும் ஒரு நல்ல தீர்வு காணும் பொறுப்பு மக்களுக்கு உண்டு.
புது விதமான பிரச்சினைகள் எழுந்துகொண்டே இருப்பதை மலேசியர்கள் உணர தொடங்கிவிட்டனர். உதாரணத்துக்கு, வெறுக்கத்தக்க கட்சித் தாவல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எத்தகைய கேடுகளை விளைவித்தது என்பதை மக்கள் உணருகின்றனர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல் கேவலம் பரவ தொடங்கியதிலிருந்து நிலையற்ற அரசியலைத்தான் பார்க்கிறோம். அதற்கு முடிவு கட்டும் வகையில் கட்சித் தாவல் தடை சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அதே முறையை, பொது பதவி வகிப்போர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் பதவி துறக்க வேண்டும் என்கின்ற சட்டம் உதவும். அதோடு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதற்குத் தடை விதிக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசியல் அநாகரீகத்தை நீக்க முடியும்.