நிரபராதிக்கு வழக்குரைஞர் தேவையில்லை – கி. சீலதாஸ்

தனிப்பட்டவர்களிடையே அல்லது குடிமக்களுக்கும் மாநில, நடுவண் அரசுகளுடன் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே நாடெங்கும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்கள் தனிநபர்களுக்கு உரிமை பரிகாரம் வழங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த உரிமையியல் அதிகார வரம்பு ஒரு புறமிருக்க குற்றவியல் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டு. குற்ற நடவடிக்கை சமுதாயத்திற்கு எதிரானவை என்பதால் அரசே குற்றம் புரிந்தவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

பெரும்பான்மையான குற்றவியல் வழக்குகள் கீழ்நிலை நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை. எனினும், கடுமையான குற்றங்கள் யாவும் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும். மரண தண்டனை அல்லது ஆயுள் கால தண்டனைக்கு உட்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்துக்குப் போகும். இவையன்றி சில குற்றவியல் வழக்குகளில் முக்கியமான சட்ட நுணுக்கங்கள் உள்ளன என அரசின் தலைமை வழக்குரைஞர் சான்றிதழ் வழங்கினால் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு சிக்கல் நிறைந்தது. எனவே, உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டுமென மனு செய்தால் அதை ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் உயர் நீதிமன்றத்தைப் பொருத்ததாகும்.

வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கோருவதற்கான மற்றொரு காரணம் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். குற்றவியல் வழக்கு கீழ்நிலை நீதிமன்றங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவே இறுதி. பலவிதமான வழக்குகளைக் கீழ்நிலை நீதிமன்றங்கள்தான் விசாரித்து தீர்ப்பு வழங்குவது அன்றாட காட்சியாகும்.

நீதிமன்றத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என நீதிபதிகளுக்குத் தெரியும். வழக்கை நீதிபதி தீர விசாரிக்க வேண்டும். வழக்கில் சான்று வழங்கினவரை நம்பலாமா, மற்றவர்களின் சாட்சியத்தோடு ஒப்பிடும்போது பெருத்த வித்தியாசம் தென்படுகின்றனவா அல்லது சாட்சியத்தில் வித்தியாசம் காணப்பட்டாலும் அது தொடர்பற்றவை எனக் கருதலாம். ஆகமொத்தத்தில், நீதிமன்றங்களின் பொறுப்பு கொடுக்கப்பட்ட  சாட்சியத்தை நன்றாக ஆய்ந்துப் பார்த்து எவர்க்கும் அஞ்சாமல், யாதொரு கைமாறும் எதிர்பார்க்காமல் தீர்ப்பு வழங்க வேண்டும்.

தீர்ப்பு வழங்குவது எளிதான பணி அல்ல. ஒரு வழக்கை, அது குற்றயவில் வழக்காகவோ அல்லது இழப்பீடு கோரும் வழக்காகவோ இருக்கலாம். யாருடைய சாட்சியம் நம்பத்தக்கது, நம்பத்தகாதது என்பதை நீதிபதி மட்டும்தான் தீர்மானிக்க முடியும். அவரின் தீர்ப்பில் தவறு இருக்கிறது அல்லது எவ்வித பிழையும் இல்லை என்பதை மேல்முறையீட்டு முடிவு செய்யும். வழக்கை விசாரித்த நீதிபதிதான் தீர்ப்பு வழங்க வேண்டும். முடிவு எடுப்பதில் சங்கடம் இருக்குமாயின் ஏசுவுக்கு எதிராக கொணரப்பட்ட வழக்கில் பிளாத்து தீர்ப்பை வழங்காது கை கழுவியது போல் நடந்துகொள்ளலாமா? கண்டிப்பாக முடியாது. அப்படிப்படட சூழ்நிலையில் வெள்ளி நாணயத்தைச் சுண்டி, “தலை விழுந்தால் விடுதலை, பூ விழுந்தால் குற்றவாளி” என நடந்து கொள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். இதுபோன்ற பிரச்சினைகள் அடிக்கடி எழலாம்.

கட்சிக்காரர் கொடுக்கும் தகவலை வைத்துதான் வழக்குரைஞர் வழக்கு நடத்த முடியும். எல்லா கட்சிக்காரர்களும் ஒரே விதமான மனோபாவத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள். எல்லா கட்சிக்காரரின் நலனை மனத்தில் கொண்டு வழக்குரைஞர் வழக்கை நடத்த வேண்டும். இத்தகைய குழப்பங்கள் தீர்வதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அதே சமயத்தில், “நூறு குற்றவாளிகள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட ஒரு பொழுதும் தண்டிக்கப்படக்கூடாது” என்ற எச்சரிக்கை ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

1966 – 1967ஆம் ஆண்டுகளில் மலாயா தொழிற்கட்சி தனது போராட்டத்தை வலுப்படுத்தும் பொருட்டு நாடெங்கும் தெரு ஆர்ப்பாட்டங்களில் இறங்கியது. அப்போது மூவாரில் ஏறத்தாழ பன்னிரண்டு பேர் தெரு ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று கலகம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். மலாயா தொழிற்கட்சியின் அன்றைய பொது செயலாளர் டாக்டர் வீ லீன் ஃபொங் என்னை அழைத்து இந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சட்டம் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்யம்படி கேட்டுக் கொண்டார்.

அப்போது நான் சட்ட நிறுவனத்தில் நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து கொண்டிருந்தேன். என் வேண்டுகோளுக்கிணங்க குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிரதிநிதிக்க ஒப்புக் கொண்டார் காலஞ்சென்ற இலியாஸ் மஜீது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் தனக்கு பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றார். அவரின் சாட்சியம்படி தான் தொழிற்கட்சி உறுப்பினர் அல்ல, சொல்லப்பட்ட கலகத்தில் ஈடுபடவும் இல்லை. கலகம் நடந்த நேரத்தில் தற்செயலாகத் தாம் அங்கு இருந்ததாகவும், தவறுதலாகக் கைது செய்யப்பட்டதாகவும் விளக்கினார். அவரின் விளக்கத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டு அவரை மட்டும் விடுவித்தார். மறுத்தவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்டவரின் நிலையைக் கூர்ந்து பார்க்கும் போது கிரேக்க நாட்டு தத்துவஞானி ஃவோஷியன் (402 – 317 பொது காலம்) சொன்னதை நினைவுபடுத்தியது. நிரபராதிக்கு (குற்றம் புரியாதவருக்கு) வழக்குரைஞர்  தேவையில்லை என்றார்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்வு இன்றும் பசுமையாக இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஃவோஷியன், “நிரபராதிக்கு வழக்குரைஞர் தேவையில்லை” எனக் குறிப்பிட்டது 1967ஆம் ஆண்டு அதில் உண்மை இருக்கிறது என்பது புலப்பட்டது. எனவே, ஒருவரின் நிரபராதித்துவம் தெளிவற்றிருக்கும்போது வழக்குரைஞர் தேவைப்படுமா? இதுவும் நியாயமான கேள்வியே.

அரசியல் காழ்ப்பு, பழிவாங்கும் மனப்பான்மை, ஊழல் போன்றவை மலிந்துவிட்ட சமுதாயத்தில் வழக்குரைஞர் தேவைப்படும் என்ற கருத்தும் நியாயமானதே என்றால் தவறாகுமா? ஜனநாயகம் என்றால் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும்! உண்மையில் குற்றம் புரிந்தவர்கள் கூட குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முயல்வது அதிசயமல்ல. அதுவே ஜனநாயகம் வழங்கும் சலுகை. இதைத் துஷ்பிரயோகம் செய்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. காரணம், ஜனநாயகத்தில் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.