குட்டையை குழப்பாமலே மீன் பிடிக்கும் அம்னோ!

இராகவன் கருப்பையா –எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் நடத்தி ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் எனும் அம்னோவின் வியூகம் தற்போது மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

அக்கட்சியின் தலைவர் அஹ்மட் ஸாஹிட், துணைத் தலைவர் முஹமட் ஹசான், முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் ஊழல் வழக்குகளில் மாட்டியுள்ள மேலும் பலர் தலைமையிலான ஒரு அணி அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பது எல்லாருக்கும் தெரியும்.

இருந்த போதிலும் அது குறித்து பிரதமர் சப்ரி கொஞ்சமும் மசியாமல் இருந்ததைத் தொடர்ந்து, ’15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவின் பிரதமர் வேட்பாளர் சப்ரிதான்’ என அக்கட்சி கடந்த வாரம் அறிவித்தது அதன் அடுத்தக் கட்ட நகர்வைத் தெளிவாக புலப்படுத்துகிறது.

அதோடு நின்றுவிடாமல், பக்காத்தானுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜுலை மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்றும் அக்கட்சி அறிவித்தது. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக சப்ரி அறிவித்த போதிலும் உடன்படிக்கை விவகாரத்தில் அவர் மாற்றுக் கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உடன்படிக்கையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று ரத்தின சுருக்கமாக அவர் செய்த அறிவிப்பு அம்னோ தலைமைத்துவத்தின் புருவங்களை உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும்.

அதற்கேற்றவாறு ஜ.செ.க. செயலாளர் லொக் சியூ ஃபுக்கும் அதிரடியாக ஒரு அறிவிப்பை செய்தார். அதாவது பக்காத்தான் கூட்டணி, அரசாங்கத்துடன்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததேத் தவிர அம்னோவுடன் அல்ல. எனவே அம்னோ உச்சமன்றம் செய்த முடிவுக்கு தாங்கள் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என திட்டவட்டமாக அவர் அறிவித்துவிட்டார்.

கட்சியில் உதவித் தலைவராக இருக்கும் சப்ரி அம்னோவில் மட்டுமின்றி பிரதமர் என்ற வகையில் நாட்டின் நிர்வாகத்திலும் ஒரு வலுவில்லாதத் தலைவராகவே கருதப்படுகிறார்.

இந்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அம்னோவின் மூத்தத் தலைவர்கள் அவரை ஒரு கைப்பாவையாக ஆட்டிப் படைக்க வகுத்தத் திட்டம் தற்போது அவ்வளவாக பலிக்கவில்லை என்றே அண்மைய அரசியல் நகர்வுகள் எடுத்துரைக்கின்றன.

‘தேர்தலுக்குப் பிறகும் நீங்கள்தான் பிரதமர்’ எனும் ஒரு அறிவிப்பை செய்வதன் வழியாவது சப்ரியை தங்களுடைய வழித்தடத்திற்கு கொண்டு வர முடியும் எனும் வியூகத்தை அவர்கள் வகுத்துள்ளனர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு ஒரு அரசியல் தந்திரமேத் தவிர வேரொன்றும் இல்லை என்றால் அது மிகையில்லை. மக்களின் பொதுவான கருத்தும் அதுவாகவே உள்ளது. சப்ரிக்கும் இது நன்றாகவேத் தெரியும். ஏனெனில் அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் முன்னாள் மந்திரி பெசார் ஹஸ்னிக்கு ஏற்பட்ட அவலம் சப்ரிக்கும் ஏற்படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

அப்படியே தேர்தலுக்குப் பிறகும் அவரை பிரதமர் பதவியில் நீடித்திருக்க அவர்கள் வழிவிட்டாலும் தங்களுடைய ஊழல் வழக்குகளிலிருந்து விடுபட எப்படியெல்லாம் சப்ரிக்கு நெருக்குதல் கொடுப்பார்கள் என்பதும் வெட்ட வெளிச்சம்.

அம்னோவின் ஊழல்வாதிகள் அவர்களுடைய வழக்குகளில் இருந்து தப்பாமல் இருப்பதை உறுதி செய்வதில் முன்னாள் பிரதமர்கள் முஹிடினும் மகாதீரும் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் அவ்விருவருடையக் கட்சிகளும் மிகவும் வலுவிழந்த நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில் ஊழல்வாதிகளைத் தடுத்து நிறுத்துவது அவர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றுதான்.

எனவே அம்னோவின் ஊழல்வாதிகள் இவ்விருவரையும் ஒரு பொருட்டாகவேக் கருத வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்த இருவரின் கட்சிகளையும் பக்காத்தான் அரவணைத்தால் ஊழல்வாதிகள் தப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் ‘முதுகில் குத்தியவர்கள்’ எனும் அடையாளத்திற்கு அரசர்களாகக் கருதப்படும் இவ்விருவரையும் இப்போதைக்கு பக்காத்தான் திரும்பிக் கூட பார்க்காது என்றுதான் தெரிகிறது.

இருப்பினும் சுயநலம் கொழுத்த, அழுக்குப் படிந்த அரசியலில் எதுவும் சாத்தியம் என்ற நிதர்சனத்தையும் நாம் நிராகரித்துவிட முடியாது.

எது எப்படியாயினும் இப்போதைக்கு அம்னோவின் ஊழல்வாதிகளுடைய மிகப் பெரிய சவால் சப்ரியை வசப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டும்தான்.