துபாய் நிகழ்வின் பின்னணியில் ஒரு திறனற்ற அரசின் அடையாளம்!

இராகவன் கருப்பையா – கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புற ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து முஹிடின் தலைமையிலான அரசாங்கம் மட்டுமின்றி அதன் பிறகு சப்ரி தலைமையிலான அரசாங்கமும் திறமையற்ற அமைச்சர்களிடம் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கும் அவலத்திற்கு ஒரு முடிவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

கடந்த மாத பிற்பகுதியில் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு வருகை மேற்கொண்ட பிரதமர் சப்ரிக்கு ஏற்பட்ட அவமானம் அநேகமாக உலக வரலாற்றில் வேறு எந்தப் பிரதமருக்கும் ஏற்பட்டிருக்காது.

அச்சம்பவம், ஏனோ தானோ எனும் போக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் நமது அமைச்சரவையின் தரக்குறைவான செயல்திறனை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு வருகை மேற்கொள்ள சப்ரி விருப்பம் தெரித்த போது அந்நாடு அதனை அங்கீகரிக்கவில்லை. குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில் மற்ற பல வேலைகள் இருப்பதால் அந்தத் தேதி உகந்ததாக இல்லை என அவர்கள் அறிவித்துவிட்டனர். இந்தத் தகவல் நமது வெளியுறவு அமைச்சுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அதனை அறிந்தாரா, அறிந்திருந்தும் பிரதமரிடம் அத்தகவலை தெரியப்படுத்தவில்லையா எனும் விவரம் இன்று வரையில் ஒரு மர்மம்தான்.

ஏனெனில் துபாய் சென்றடைந்த சப்ரியை வரவேற்க அந்நாட்டு அமைச்சர்களோ அதிகாரிகளோ யாருமே விமான நிலையம் வரவில்லை. பிரதமரின் குழுவில் சைஃபுடினும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டுக்கான மலேசியத் தூதர் முஹமட் தாரிட் மற்றும் தூதரக உயர் அதிகார் முஹமட் ஹஸ்ரில், ஆகிய இருவர் மட்டுமே சப்ரியை வரவேற்றனர்.

ஒரு அயல் நாட்டுப் பிரதமருக்கு உகந்த சிறப்பு ஏற்பாடுகள் எதுவுமே அங்கு செய்யப்படவில்லை. கடப்பிதழ் மற்றும் குடிநுழைவுத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கும் கூட  சாதாரனப் பயணிகளைப் போல சப்ரி நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.

வழக்கமாக அந்நிய நாட்டுத் தலைவர்களின் வாகன ஊர்வலத்திற்கு வழங்கப்படும் காவல்துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதுவெல்லாமே நம் நாட்டிற்கும் அதன் பிரதமர் என்ற வகையில் சப்ரிக்கும் பெருத்த அவமானமாகும். யாருடையத் தவற்றினால் இச்சூழ்நிலை ஏற்பட்டது எனும் கேள்விக்கு ஆளுக்கு ஆள் கைக்காட்டுகிறார்களேத் தவிர இன்று வரையில் சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் மக்களின் குழப்பம் இன்னும் தீரவில்லை.

தாரிட்டும் ஹஸ்ரிலும் தங்களுடைப் பதவிகலிலிருந்து விலக்கப்பட்டு உடனே நாட்டுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், சைஃபுடின்தான் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பது பலரின் பொதுவானக் கருத்தாகும்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான், நெதர்லாந்துக்கான முன்னாள் தூதர் நூர் ஃபரிடா மற்றும் பிரிதொரு முன்னாள் தூதர் டென்னிஸ் இக்னேஷஸ் முதலியோரும் இதனையே வலியுறுத்துகின்றனர். வெளியுறவு அமைச்சர் மாற்றப்பட வேண்டும் என அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டினும் கடுமையாகக் குரல் கொடுத்தார்.

ஆனால் 2020ஆம் ஆண்டில் பக்காத்தான் ஆட்சிக் கவிழ்வதற்குக் காரணமாக இருந்த அரசியல் தவளைகளில் முக்கியமான ஒருவரான சைஃபுடின் இதற்கெல்லாம் கொஞ்சம் கூட மசியவில்லை.

அம்னோவில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டில் பி.கே.ஆர். கட்சிக்குத் தாவிய அவர் ஆட்சிக் கவிழ்ப்பின் போது பக்காத்தானுக்குத் துரோகமிழைத்து பெர்சத்துவிற்குத் தாவினார். இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் அஸ்தமனமாகும் சூழலில் இருக்கும் அவருடைய அரசியல் வாழ்க்கையில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதைப் போல் தெரிகிறது.

முஹிடினும் சப்ரியும் தத்தம் அமைச்சரவைகளை அமைத்த போது நூலிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றப் பெரும்பான்மையை தற்காக்கும் ஒரே இலக்கில் மட்டுமே குறியாக இருந்தார்களேத் தவிர நியமிக்கப்படுவோரின்  கல்வித் தகுதி, செயல்திறன், ஆற்றல், ஆளுமை போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

அதன் விளைவாகத்தான் உலகம் எள்ளி நகையாடும் அளவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் நமது அமைச்சர்கள் பலரின்  கோமாளித்தனம் தலைவிரித்தாடியது.

கோறனி நச்சிலின் உச்சத்தின் போது ‘டிக் டொக்’ போட்டி நடத்தியது,  வெந்நீர் அருந்தினால் கோவிட் குணமாகும் என்று அறிவித்தது, ‘தீமா’ எனும் பெயருடைய மதுபான சர்ச்சை, வெள்ளத்தில் அவதிப்படுவோருக்கு உதவி செய்வதைப் போல ஊடகவியலாளர்கள் முன் பாசாங்கு செய்தது, பிரதமரின் வாகன ஊர்வலத்திற்கு ‘அம்புலன்ஸ்’ வாகனங்கள் வழிவிட்டது போன்ற பல்வேறு அறிவிலித்தனங்களைப் பார்த்து உலகமே கைக்கோட்டி சிரித்தது.

அவற்றுக்கெல்லாம் உச்சமாக அமைந்ததுதான் அனைத்துலக ரீதியில் உலகின் கவனத்தை ஈர்த்த துபாய் சம்பவம்.