கொத்தடிமை : செலஞ்சார் அம்பாட் முதல் பகாவ் வரை – பகுதி 2

பெரித்தா ஹரியான் உள்ளூர் மலாய் நாளிதழில் வெளியான (Samy Vellu kesal terhadap kenyataan Ketua Polis, 1983 – காவல்துறைத் தலைவரின் கூற்றுக்குச் சாமிவேலு வருத்தம் தெரிவித்தார், 1983) இந்தச் செய்தி, அதிகாரத்தில் இருந்தவர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவில்லை. எந்தத் தவறும் நிகழவில்லை என்று அப்போதைய பகாங் காவல்துறைத் தலைவர் மறுப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினர். செய்தி அறிக்கையில், மலேசிய இந்தியர் காங்கிரஸின் (ம.இ.கா.) முன்னாள் தலைவரும் அப்போதையப் பொதுப்பணி அமைச்சருமான சாமிவேலு, காவல்துறைத் தலைவரின் கூற்றுக்குப் பின்வருமாறு பதிலளித்தார் :

“அவர்கள் சின்னஞ்சிறிய குடிசைகளில் அல்லது ஆட்டு கொட்டகைகளில் வாழ வேண்டியிருந்தது; மேலும், பல தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் உடலில் காயங்களும் வடுக்களும் இருந்தன. சிறிய குற்றங்களைச் செய்தாலும் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர். ஆனால், அங்கு எந்தக் கொடுமையும் சித்திரவதையும் நடைபெறவில்லை என்று டத்தோ முகமது நோர் அறிக்கை வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார் சாமிவேலு.

மலேசியாவில், பல தோட்டப் புறங்களில் கொத்தடிமைத் தொழிலாளர் நடைமுறையில் இருக்க பல காரணங்கள் உள்ளன. மலேசியர்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் எதிரான கொத்தடிமைத் தொழிலாளர் முறை இன்னும் தொடர்வதற்கு ஊழல், நேர்மை இல்லாமை, மேற்பார்வை இல்லாமை, முறையான புகார் பொறிமுறை மற்றும் ஒருமைப்பாடு இல்லாமை, முறையான தொழிலாளர் அமைப்புமுறை இல்லாதது போன்றவை முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

செலஞ்சார் அம்பாட் வழக்கு 80-களின் முற்பகுதியில் அம்பலமானது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியா எத்தனை கொத்தடிமைத் தொழிலாளர் சிக்கல்களை நீக்கியுள்ளது? அண்மையில், செலஞ்சார் அம்பாட்-டிற்கு அருகில் அமைந்துள்ள ஹெல் எஸ்டேட்’டில் (Hell Estate) சில கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளை சுவாராம் பதிவு செய்துள்ளது.

புகாரளிக்கப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கியது. (தோட்டங்களில் கொத்தடிமை முறைமை – Bonded labour in estates. (2008). The Star. Retrieved from https://www.thestar.com.my/opinion/letters/2008/08/17/bonded-labour-in-estates). ஆனால், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உள்ளூர் கொத்தடிமைத் தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்களையும் நாங்கள் சந்திக்கிறோம். பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரில் உள்ள சில தோட்டங்களில், இந்தக் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இன்றும் செயலில் உள்ளதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. நமது உள்ளூர் ஊடகங்களில், குறிப்பாக தமிழ் நாளிதழ்களில், சில தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து தப்பி வெளியேறுவது குறித்து அவ்வப்போது செய்திகளைப் பார்த்திருப்போம்.  வழக்கமாக, கொத்தடிமைகளாக இருந்து தப்பித்த மலேசியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது முறையான விசாரணை நடைபெறுவதில்லை. போதுமான ஆதாரங்கள் இல்லை என, வழக்கமான சாக்குபோக்குகளை அதிகாரிகள் குறிப்பிடுவர்; ஆனால் அரசியல் விருப்பம், ஊழல் உள்ளிட்ட பிற காரணங்களும் இதன் பின்னால் உள்ளன. இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவரின் கதையில் – அது நமது அண்டை வீட்டில் நடந்திருந்தாலும்கூட – முதலாளியின் பெரும்பாலான விவரங்கள் வெளிகாட்டப்படுவதில்லை.

மலேசியாகினியில் வெளியான (Kabilan, K. (2007, January 3). Escape from slavery. Malaysiakini- அடிமைத்தனத்திலிருந்து தப்பித்தல்) மாறன் என்ற குத்தகையாளரின் பிடியில் இருந்து தப்பித்த ஒரு தம்பதியின் செய்தி, 1992-லேயே கொத்தடிமை முறைமை தொடங்கிவிட்டது என்பதனை வெளிப்படுத்தியது. தங்கள் குடும்பம், கொத்தடிமையாக அவதிபடுவதில் இருந்து மீள, 19 வயதான பி. ராமுடுவும் 17 வயதான அவரது கர்ப்பிணி மனைவி ஏ. கலைவாணியும் நெகிரி செம்பிலான், பகாவ், கம்போங் செரம்பாங் இண்டாவில் (Kampung Serampang Indah) உள்ள செம்பனை தோட்டத்தில் இருந்து தப்பிக்கத் துணிந்தனர். கலைவாணியின் பெற்றோரும் அவர்களது ஏழு குழந்தைகளும் (கலைவாணி உட்பட) அந்த ஒப்பந்த தொகுப்பின் ஒரு பகுதி (part of the package deal) என்று அந்தச் செய்தி அறிக்கை கூறியது. அவர்கள் மட்டுமின்றி, ராமுடுவின் தாயாரும் இரண்டு சகோதரிகளும் கூட மாறனின் கட்டுப்பாட்டில் இதேபோன்ற கொடுமையை அனுபவித்தனர்.

ரமேஸ் அனுபவித்த துன்பங்களைப் போலவே, ராமுடுவின் குடும்பமும் அடிக்கடி உடல் ரீதியான துன்புறுத்தல்கள், கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், அளவுக்கு அதிகமான வேலை நேரம் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டதோடு; அக்குடும்பத்தினரின் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டு, அவர்களும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். கலைவாணியின் தந்தை, ஆவடியார், 42, தனது இரண்டு குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றும், தனது மகள்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், தன் மீது சுமத்தப்பட்ட புகார்களுக்கு விளக்கம் அளிக்க குத்தகையாளர் மாறன் மலேசியாகினி நிருபர்களிடம் வந்தார். (Kabilan, K. (2007, January 4). Contractor denies supplying slave labour. Malaysiakini.) இருப்பினும், அவர்கள் மீது இவருக்கு உரிமையுண்டு என்ற அடிப்படையில், அச்செய்தி கட்டுரையில் மாறனின் குரல் பலமாக இருந்தது. “இதோ பாருங்கள், அவர்கள் என் வேலையாட்கள். நான் அவர்களை இங்கு வேலைக்கு அழைத்து வந்தேன், அதற்காக நான் அவர்களுக்குப் பணம் கொடுத்தேன்,” என்று மாறன் கூறியதாக அந்தச் செய்தி மேற்கோள் காட்டியது.

தொழிலாளர்களைத் தாக்கியதையும் ஒப்புக்கொண்ட அவர், அதற்கு சில காரணங்களையும் சொன்னார். “குடித்துவிட்டு போதையில் இருந்ததால், ​​நான் அவர்களை அடித்தேன். சொல்லப்போனால், அதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் நான் அடித்திருக்கிறேன்,” என்று அவர்களை அடித்ததற்கு மாறன் நியாயம் கற்பித்தார்.

பகாங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூவும் தப்பி ஓடிய கொத்தடிமைகள் சிலரின் கதைகளை அவ்வப்போது எடுத்துரைத்துள்ளார். அவர்களில் சிலர் பகாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்குள்ள தோட்டங்களில் கொத்தடிமைகளாக அவர்கள் நரக வாழ்க்கை வாழ்ந்தனர் என்றும் அவர் கூறியிருந்தார். 2018, செப்டம்பர் 7-ம் தேதி, தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில், 10 வயதில் கொத்தடிமையாகத் தள்ளப்பட்ட சாந்தியின் கதையைக் காமாட்சி  கூறியிருந்தார். இந்தச் செய்தி ஒரு தமிழ் நாளிதழிலும் வெளியிடப்பட்டது. 18 வயதில் முதலாளியின் பிடியிலிருந்து தப்பித்த சதீஸ்வரன் (வயது 20), தனது பிறப்புச் சான்றிதழையும் அடையாள அட்டையையும் பதிவாளரிடமிருந்து திரும்பப் பெற 18 மாதங்கள் ஆனதாகக் கூறினார் என, 2017, ஜூன் 7-ம் தேதி, மலேசியத் தமிழர் குரல் வெளியிட்ட மற்றொரு செய்தியைத் தொட்டும் காமாட்சி பேசியிருந்தார். அதுமட்டுமின்றி, கொத்தடிமைகளாக இருந்த மேலும் மூன்று பதின்ம வயதினர் பகாவிலிருந்து தப்பி ஓடியதைப் பற்றியும் காமாட்சி மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அவர்களின் பிறப்புச் சான்றிதழைப் பெற காமாட்சி தற்போது முயற்சித்து வருகிறார்.

இவை, பகாவில் கொத்தடிமைகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, அங்கிருந்து தப்பியோடிய சிலரின் கதைகள். இந்த வழக்குகள் தொடர்பில் பல போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பகாவில் கொத்தடிமை தொழிலாளர்கள் சிக்கல் இன்று வரை தொடர்கிறது.

ரமேஸின் வழக்கைக் கையாண்ட பிறகு, அவருக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மனித உரிமைகள் தன்னார்வத்தொண்டு நிறுவனமான சுவாராம், கொத்தடிமை தொழிலாளர்கள் சிக்கல்கள் பற்றி கூடுதல் தகவல்களை அறிய பகாவுக்குச் சில பயணங்களை மேற்கொண்டோம். ஏற்கனவே பேசப்பட்ட கொத்தடிமை வழக்குகளில், மேலதிகத் தகவல்களும் ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டதால், குற்றச்சாட்டுகளைத் தீவிர விசாரித்து தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிப்பது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. கொத்தடிமை வழக்குகள் ஊடகங்களிலும் பிற அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஐ.எல்.ஓ.விலும் தொடர்ந்து முன்னிலை படுத்தப்பட்ட போதும், குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிப்பது முக்கியம்.

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாங்கள் குறைந்த அளவிலேயேப் பயணங்களை மேற்கொண்டபோதும், அங்கு நிலவும் சூழல்கள் பற்றிய சில முக்கியத் தகவல்களை எங்களால் சேகரிக்க முடிந்தது. நாங்கள் சென்ற இடங்களில், உள்ளூர் மக்கள் இந்தக் “கொத்தடிமை” பிரச்சினைகள் பற்றி அறிந்திருந்தாலும், சில குற்றவாளிகளைத் தெரிந்திருந்தாலும், அதுபற்றி பேசுவதில் தயக்கம் காட்டினர். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முதலாளிகள் அல்லது அந்தக் குத்தகையாளர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். இவர்களை “அமைதியாக்க” அவர்களின் கீழ் பலர் வேலை செய்கின்றனர் (உள்ளூர் குண்டர்கள்) என்று தெரிவந்தது.

அடிமைத்தனம் அல்லது கொத்தடிமைத் தொழிலாளர் முறைமையை நிரூபிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக குத்தகையாளர் தனது தொழிலாளர்கள் மீது பயன்படுத்தும் வெவ்வேறு வேலை அணுகுமுறை அல்லது தனிச்செயல் முறை (Modus Operandi) விளங்குகிறது. பணிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களில் சிலருக்குத் தினக்கூலி வழங்கப்படுகிறது, அவர்கள் குத்தகையாளருடன் பிணைக்கப்படவில்லை. அவர்கள் மலேசிய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டக் குறைந்தபட்ச சம்பளத்தைவிட மிகக் குறைவான ஊதியம் பெற்றாலும், அவர்களில் சிலருக்கு இதுதான் ஒரே வருமானம் என்பதால் குறைந்த ஊதியம் பற்றி அவர்கள் பெரிதாகக் கவலைபடவில்லை. நாங்கள் பேசிய தொழிலாளர்களில் ஒருவரான லலிதா, பகாவ் பகுதியில் குறிப்பாக, அதிகக் கல்வித் தகுதி இல்லாதவர்களுக்குத் தகுந்த ஊதியம் ஈட்டும் வேலை கிடைப்பது கடினம் என்று கூறினார். “நாங்கள் குறைவான ஊதியம் பெறுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் என்ன செய்வது? எங்களுக்கு இங்கு வேறு வேலைகள் கிடைக்காது. எனவே, வேலை இல்லாமல் இருப்பதைவிட, கிடைத்த வேலையைச் செய்வது மேலானது. கிடைக்கும் வருமானத்தையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை, பிறகு எங்களால் சமாளிக்க முடியாது,” என்றார்.

பகாவில் உள்ள கொத்தடிமைத் தொழிலாளர் சிக்கல் குறித்து நாங்கள் கேட்டபோது, இந்தப் பிரச்சினை இங்குள்ள பலருக்கும் தெரியும், குத்தகையாளரிடம் பணத்தைக் கடனாகப் பெறுபவர்கள் இவ்வாறு கொத்தடிமையாக வேண்டிவரும் என்பது தெரியும் என்று லலிதா சாதாரணமாகக் கூறினார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் குத்தகையாளரின் அணுகுமுறைகள் பற்றியும் லலிதா மேலும் விளக்கினார். சிலர் தன்னைப் போலவே அன்றாடக் கூலிக்கு வேலை செய்பவர்கள் என்றும், சிலர் அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குத் தங்க இடம் கொடுக்கப்படும் என்றும் சொன்னார். குத்தகையாளர் அவர்களுக்குத் தேவையான மளிகை சாமான்களும் கள்`ளும் வழங்கி, அதற்குண்டான பணத்தை அவர்களின் கூலியிலிருந்து கழித்துக்கொள்வார் என்றும் லலிதா மேலும் சொன்னார்.

நாங்கள் (சுவாராம்) அந்தத் தோட்டத்திற்குச் சென்றபோது, ​​தோட்டம் தனியார் சொத்து எனக் கூறி பாதுகாவலர் எங்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததால், எங்களால் தோட்டத்திற்குள் செல்ல முடியவில்லை. தனது முதலாளி அங்கு இல்லை என்று கூறியப் பாதுகாவலர், மேலும் பேச மறுத்துவிட்டார். வீண் சந்தேகத்தை உருவாக்க விரும்பாததால், நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம். தோட்டத்தின் வெளியே, இக்காத்தான் எக்திஃப் சென்.பெர். -க்குச் (Ikatan Aktif Sdn. Bhd.) சொந்தமான இக்காத்தான் எக்திஃப் தோட்டம் (Ladang Ikatan Aktif) என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தோம். இந்தப் பெயரை நாங்கள் சந்தித்த, தொடர்பு கொண்ட எவருமே குறிப்பிடவில்லை.

செந்தில் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட, குத்தகையாளர் சசியின் மற்றொரு முன்னாள் தொழிலாளியையும் நாங்கள் சந்தித்தோம். தான் வேலை பார்த்த அந்த முதலாளிக்கு, குடுகுடு தோட்டத்தில் சொந்த வீடு இருப்பதாகவும், அவர் சொந்தமாக ஒரு குழுவை – அவர்களில் சிலர் குண்டர்கள் – வைத்துகொண்டு, அந்த இடத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் செந்தில் சொன்னார். அத்தோட்டத்தில் பணிபுரிந்தபோது, கொத்தடிமைத் தொழிலாளிகளின் நிலைமையை நேரில் பார்த்ததாக அந்த இளம் தொழிலாளி கூறினார். மேலும் கூறுகையில், வேலைக்காக காலை 6 மணிக்கெல்லாம் தொழிலாளர்களை வெளியே அழைத்து சென்றுவிடுவர், வேலை முடிந்து இரவு 8 மணிக்கு மேல்தான் திரும்பி வருவார்கள் என்பதால், பகலில் எந்த ஒரு தொழிலாளியையும் சந்திப்பது மிகவும் சிரமம் என்றார். இரவில், எஸ்டேட்டிற்குள் நுழைவது ஆபத்தானது. சில தொழிலாளர்கள் பகாவ்வைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள். மேலும், தம்பின் மற்றும் பிற இடங்களில் இருந்து, தொழிலாளர்களைச் சேகரித்து வர சசிக்கு முகவர்கள் இருப்பதாகத் தான் கேள்விப்பட்டுள்ளதாகவும் செந்தில் தெரிவித்தார். இவ்வாறு ஆட்சேர்ப்பின் வழி அங்கு அழைத்துவரக்கூடிய தொழிலாளர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில், பணச்சுமையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதனையும் செந்தில் குறிப்பிட்டார்.

குத்தகையாளர் சசிக்கு, அந்தப் பகுதியில் பல “தொடர்புகள்” இருப்பதாகவும் செந்தில் சொன்னார். சுகுவும் அவரது மனைவியும் சசியின் உதவியாளர்களில் அடங்குவர். அந்தத் தம்பதிகள் தொழிலாளர்களின் கடனைச் செலுத்த முன்வருவார்கள், அதற்குப் பதிலாக தோட்டங்களில் குத்தகை அடிப்படையில் வேலை செய்ய அவர்கள் இத்தம்பதிகளுடன் பகாவுக்கு வர வேண்டும். அவர்கள் ஒப்புக்கொண்டவுடன், குடுகுடு தோட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, குத்தகையாளர் சசியின் கீழ் பிணைக்கப்படுவார்கள்.

புதிதாக வேலையில் சேருபவர்களுக்குத் தங்க இடம், மளிகை சாமான்கள், சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவை வழங்கப்பட்டு, பின்னர் அதற்கான பணம் அவர்களது ஊதியத்தில் இருந்து கழிக்கப்படும். பெரும்பாலான சூழல்களில், தொழிலாளர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல சம்பளப் பணம் இல்லாமல் போகும்; அதுமட்டுமின்றி தங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த இடைவிடாமல் அவர்கள் வேலை செய்யவேண்டி வரும். அங்கு அனைத்திற்கும் உயர்ந்த கட்டணங்கள் விதிக்கப்படும். இதனால், பெரும்பாலும் தொழிலாளர்கள் தங்கள் கடன்களைச் செலுத்தி முடிக்க முடியாமல், மீண்டும் மீண்டும் குத்தகையாளரிடமே கொத்தடிமைகளாக நிற்க வேண்டிய சூழல் அமையும்.

தங்களின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்காததால், இந்தத் தொழிலாளர்கள் முடிவில்லா கடனிலும் வறுமையிலும் சிக்கித் தவிக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். இந்தத் துயரமான சம்பவம் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வருவதோடு, தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறையினரிடமும் தொடர்கிறது.

குத்தகையாளர்களால் கொடுக்கப்படும் காரணங்கள், பொதுவாக அவர்கள் கடன்பட்டுள்ளதாகவும் கடனை அடைக்க உழைக்க வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாகவும் இருக்கும். எவ்வாறாயினும், பெரும்பாலான சூழல்களில் கடன்கள் தீர்க்கப்படாது.  தங்குமிடம், உணவு மற்றும் மளிகை பொருட்களை முதலாளிகள் அல்லது குத்தகையாளர்களே வழங்குவதால், தொழிலாளர்களின் செலவினங்களைக் கூட்டி, கடனை முழுமையாகச் செலுத்தும் வரை தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

குட்வூட் (குடுகுடு) தோட்டம் மற்றும் இக்காத்தான் எக்திஃப் தோட்டம் பற்றிய எங்கள் இணையத் தேடலில் பக்கம் 53 ஆர்.எஸ்.பி.ஓ. (Muhammad Syafiq, A.R. (2015). RSPO Principles & Criteria Public Summary Report Annual Surveillance Assessment 3 (Report No. CU817884). Control Union (Malaysia) Sdn. Bhd.) அறிக்கையின் வரைபடத்தில் இக்காத்தான் எக்திஃப் தோட்டத்தை, எல்லைக்குட்பட்ட தோட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, மேலதிகத் தகவல்களைப் பெற முடியவில்லை. நிறுவன ஆணையம் அல்லது எஸ்.எஸ்.எம்.-இன் கீழ் உள்ள நிறுவனங்கள் தேடல் ஆவணத்தில், பெரும்பாலும் பேராக்கில் இருக்கும் பங்குதாரர்களின் முகவரிகளைத் தவிர, வேறெந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

தற்போது, ​​ரமேஸ் மட்டும்தான் தனக்கு நேர்ந்ததை எதிர்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இன்றுவரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரமேஸும் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைதண்டனையை முடித்துவிட்டு இப்போது சுதந்திரமாக உலா வருகிறார். அவர் பகாவை விட்டு வெளியேறி, தோட்டத்தில் ஒப்பந்த வேலைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத, பகாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு புதிய பணியிடத்தில், மாதச் சம்பளத்திற்கு வேலை செய்ய தொடங்கியுள்ளார்.  மாதாந்திர ஊதியம் பெறுவதில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

பகாவில், கொத்தடிமை செயல்முறையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட மற்றவர்கள், தங்கள் முதலாளிக்கு எதிரான அவர்களின் உரிமைகோரல்களை ஆதரித்து, சாட்சியமளிக்க முன்வரவில்லை. இறுதியில், உள்ளூர் மக்களான இவர்கள், மீண்டும் சசி போன்ற முதலாளிகள் வழங்கும் குத்தகை வேலைகளை நம்பி வாழ்க்கையை ஓட்டவிருக்கிறார்கள்.

இது ஒரு முக்கியமான பொதுநல வழக்கு, ஏனென்றால் சில அரசு சாரா இயக்கங்களும் தொழிலாளர் சங்கங்களும் இன்னும் போதுமான, குறைந்தபட்ச ஊதியத்திற்காகப் போராடி வருகின்றன. ஆயினும், ஒரு சில செல்வாக்கு மிக்க முதலாளிகள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, அமைப்பு முறையின் பலவீனங்களையும் சுரண்டுவது இன்னும் தொடர்கின்றது.

கடந்த மாதம், இதேபோன்ற மற்றொரு வழக்கு எங்களைத் தேடி வந்தது… மீண்டும் பகாவில் இருந்து. இந்நவீனகால அடிமைத்தனத்திற்குக் காரணமான குற்றவாளியை அம்பலப்படுத்தி, தண்டிக்காவிட்டால் இது இங்கு வேரூன்றி பலரையும் அதற்கு இரையாக்கும் என்பது மட்டும் தெளிவாய் தெரிகிறது.


தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை

சிவன் துரைசாமி, சுவாராம் தலைமை நிர்வாக அதிகாரி

மேற்கோள்கள் :-

Bonded labour in estates.  (2008).  The Star                                                                                                    Retrieved from https://www.thestar.com.my/opinion/letters/2008/08/17/bonded-labour-in-estates

Kabilan, K. (2007,  January 3). Escape from slavery.  Malaysiakini.

https://www.malaysiakini.com/news/61590

Kabilan,   K.    (2007,   January    4).   Contractor denies supplying slave labour. Malaysiakini.

https://www.malaysiakini.com/news/61643

Kabilan, K.   (2007,   January   3).   Shaken,   rattled but mission accomplished.   Malaysiakini.

https://www.malaysiakini.com/news/61693

Lim Kit Siang. (1983, July 24). DAP Motion in Parliament tomorrow on Selancar Empat ‘hell estate’ exploitation. Retrieved from https://bibliotheca.limkitsiang.com/1983/07/24/dap-motion-in- parliament-tomorrow-on-selancar-empat-%E2%80%98hell-estate%E2%80%99-exploitation/

Muhammad Syafiq, A.R. (2015). RSPO Principles & Criteria Public Summary Report Annual Surveillance Assessment  3  (Report No. CU817884). Control Union (Malaysia) Sdn. Bhd. www.rspo.org/uploads/default/pnc/Jeram_Padang_POM_ASA3_CU817884_Jeram_Padang_POM2015.pdf

Samy Vellu kesal terhadap kenyataan ketua polis. (1983). Berita Harian.

Special Action Programme to Combat Forced Labour. (und). (und). ILO Indicators of Forced Labour.

International Labour Organization. https://www.ilo.org/wcmsp5/groups/public/—ed_norm/— declaration/documents/publication/wcms_203832.pdf