மரண பயம் கண்டவர்கள் ஏதேதோ கூறுவார்கள்; ஏதேதோ செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு, அதிலும் கோணல் புத்தி படைத்த அரசியல்வாதிகளுக்கு, தேர்தல் தோல்வி பயம் வந்து விட்டால் எந்த “லோக்கையும்” திறந்து விடுவார்கள். இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்படும் என்ற திடீர் அறிவிப்பு, அதுவும் முதலில் மஇகா அமைச்சர்கள் மூலமாக வெளியிடப்பட்ட அறிவிப்பு, எதிர்வரும் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள் மீது குறிவைத்து எடுத்த முடிவாகும்.
மஇகா போராடி அம்னோவை தோற்கடித்து பெற்ற வெற்றி இந்த இண்டர்லோக் மீட்டுக் கொள்ளப்படும் முடிவு என்று நாளையிலிருந்து மஇகா தலைவர்களுக்கு பாராட்டும் மாலைகளும் வந்து கொட்டும்.
மலாய்க்காரர் முதலில், அடுத்து மலேசியர் என்ற தமது இனவாத ஈடுபாட்டை பகிரங்கமாக பறைசாற்றிய, தாய்மொழிப்பள்ளிகளுக்கு சமாதி கட்ட வேண்டும் என்ற அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை தாம் ஆதரிப்பதாக கல்வி அமைச்சாரனவுடன் அறிவித்த துணைப் பிரதமர் முகைதின் யாசின், இண்டர்லோக் நாவலை அரசாங்கம் மீட்டுக்கொண்டது அம்னோவின் பரந்த மனப்பான்மையையும் இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கும் பண்பாட்டையும் காட்டுகிறது என்று சற்றும் கூச்சப்படாமல் கூறுவார். அம்னோ மட்டுமே இந்தியர்களின் “மணியம்” பாரம்பரியத்தை கட்டிக்காக்க முடியும். ஆகவே, இந்தியர்களின் வாக்குகள் அம்னோவுக்கே என்று பிரகடனம் செய்வார்.
“அப்பாடா, தப்பித்தோம். எப்படியும் ஜெயித்து மந்திரியாகவும், துணை மந்திரியாகவும் ஆகிவிடலாம் என்ற களிப்பில் இன்னேரம் திலைக்கத் தொடங்கியிருக்கும் மஇகா தலைவர்கள் இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொண்டதற்காக நஜிப் ரசாக்கையும் முகைதின் யாசினையும் குளிப்பாட்ட இறங்கியிருப்பார்கள்.
கோல குபு பாரு மாணவர்கள்
மஇகாவின் போராட்டத்தால்தான் இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்பட்டது. மஇகா மட்டுமே வரம் கேட்டு கெஞ்ச முடியும். அம்னோ மட்டுமே பிச்சை போட முடியும். உங்கள் வாக்குகள் எங்களுக்கே என்பார்கள்.
இண்டர்லோக் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது மானமுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும். இளம் இந்திய மாணவர்களுக்குக்கூட என்ன நடந்தது என்பது தெரியும். கோல குபு பாரு போலீஸ் நிலையத்தில் பத்து மணி நேரத்திற்கு மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களுக்குத் தெரியும் இண்டர்லோக் விவகாரம். உண்மையில், இந்த வெற்றியை அந்த மாணவர்களுக்கு அர்ப்பணிப்பது சிறப்பாகும்.
நியட் தலைமைத்துவம்
இண்டர்லோக் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது அரசு சார்பற்ற அமைப்புகள். அதற்கு தலைமை ஏற்றிருந்தது நியட் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். அதை மறுப்பவர்கள், மஇகாதான் போராடியது என்று கூறுபவர்கள், இருந்தும் இறந்தவர்களாவர்; மானமற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.
ஆனால், இந்த வெற்றியால் மதி மயங்கிவிடக்கூடாது. இது ஒரு சிறிய வெற்றியே. இருப்பினும், சிறிய அளவிலான தெருப் போராட்ட உணர்வுக்குக் கிடைத்த முதல் வெற்றி!
தெருதான் வெற்றிக்கான வழி. இதனை இந்நாட்டு இன்றைய இந்தியர்களுக்கு ஓரளவுக்கு உணர்த்தியது இந்த இண்டர்லோக் ஆர்ப்பாட்டம்.போராட்டத்திற்கான தெரு மிக நீண்டது. அதில் பயணித்து பெற்ற முதல் வெற்றி இண்டர்லோக்.
பத்து அறிஞர்கள் கூடிப் பேசலாம். அரசாங்கம் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும். ஆனால், பத்து சாதாரண மக்கள் தெருவில் இறங்கினால், அரசாங்கம் பதற்றமடையும். ஏன், கவிழ்ந்து விடுவதும் வரலாறு கண்ட உண்மை.
இறுதிக் குறிக்கோள்
அரசியல்வாதிகள் எவரையும் நம்பவே கூடாது. மக்களுக்கு என்ன வேண்டுமோ அதனைப் பெற்றுத் தருவதற்கு அவர்களை விரட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களை மதிக்கலாம்; மண்டியிடக் கூடாது; புனிதர்களாக்கக் கூடாது.
இன்னும் பல போராட்டங்கள் நமக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளைச் சோதிப்பதற்கான தருணம் இது. அவற்றில் முக்கியமானது அம்னோவின் தாய்மொழி அழிப்புக் கொள்கையான “இறுதிக் குறிக்கோள்”.
1950 களில் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட இக்கொள்கைக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதன் அமலாக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்னோ அக்கொள்கையை மீட்டுக்கொள்ளவில்லை; மீட்டுக் கொள்ளாது.
இண்டர்லோக் வில்லனான முகைதின் யாசின், அடுத்த துணைப் பிரதமராக முயன்று கொண்டிருக்கும் முக்ரிஷ் மகாதிர் அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை ஆதரிக்கின்றனர். பிரதமர் நஜிப் ஆமாம் போடுகிறார். இந்த ஆண்டு டிசம்பரில் 1956 ஆம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கும் நாட்டின் கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முகைதின் கூறியுள்ளார். நிச்சயமாக, அம்னோவின் இறுதிக் குறிக்கோள் மீட்டுக்கொள்ளப்படும் என்று அவர் அறிவிக்கப்போவதில்லை. தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை தேசியப்பள்ளிகளுக்கு சமமானவை என்றும் அறிவிக்கப்போவதில்லை.
என்ன செய்யப் போகிறார் என்று நாம் உடனடியாகத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
தேர்தல் வரப்போகிறது. கேட்கத் தயாராக வேண்டாமா?