இராகவன் கருப்பையா – சபாவின் நபாவான் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஒரு ஆற்றை எப்படிக் கடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய காணொலிகள் நாட்டை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள ‘ராஃப்ட்’ எனுப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள் கடக்கும் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டப் பிறகுதான் அரசியல்வாதிகள் துயிலெழுந்தனர். அது வரையில் மாவட்ட அதிகாரிகளோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் தெரியவில்லை.
சில பிள்ளைகள் ஆங்கிலத் திரைகளில் வரும் ‘தார்ஸன்’ போல இரு மருங்கிலும் கட்டப்பட்டுள்ள ஒரு கயிற்றில் தொங்கியவாறு அக்கரைக்குச் செல்கின்றனர்.
மற்றும் பலர் அதே கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு இரும்புத் தொட்டியில் அமர்ந்தவாறு பயணிக்கின்றனர்.
தெப்பத்தில் செல்லும் மாணவர்கள் பெரியவர்கள் துணையின்றி ஒரு துடுப்பைக் கொண்டு சொந்தமாகவே அதனை இயக்குகின்றனர். திடீர் ஆற்று வெள்ளம் எந்நேரத்திலும் அவர்களை அடித்துச் செல்லும் அபாயம் நொடிப் பொழுதில் நிகழக்கூடும்.
இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கவே குலை நடுங்குகிறது. பிள்ளைகள் வீடு வந்து சேரும் வரையில் பெற்றோருக்கு எப்படி நிம்மதி இருக்கும்?
இத்தகைய அவலங்கள் எல்லாம் மலேசியாவில்தான் நிகழ்கின்றனவா என்று ஒரு கனம் கற்பனை செய்து பார்த்தால் நம்பமுடியாமல்தான் உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் 21 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் இப்படி ஒரு அவலம் நாட்டுக்குக் கேவலம் என்றால் அது மிகையில்லை.
அந்த ஆற்றைக் கடக்க பயன்படுத்தப்பட்ட ஒரு தொங்கு பாலம் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறு படகுகளை வாங்குவதற்கு சபா மூதலமைச்சர் ஹஜிஜி நிதி ஏற்பாடு செய்வதாகத் தெரிகிறது. பிரதமர் சப்ரியும் அவசர நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிவிப்புகள் எல்லாம் எப்போது வெளிச்சம் காணும், மரணத்தின் விலிம்பில் ஒவ்வொரு விநாடியையும் கடக்கும் மாணவர்களுக்கு எப்போது விமோசம் பிறக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
பள்ளிப்பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் உதாசினப்படுத்தப்படும் சம்பவங்கள் இன்னும் நிறையவே உள்ளன. உதாரணத்திற்கு குவாந்தான் நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி மாணவர்கள் பல்லாண்டு காலமாக ஒரு கட்டிடமோ உருப்படியான வகுப்பறைகளோ இல்லாமல் ‘கொண்டெய்னர்’ எனப்படும் கொள்கலன்களின் உள்ளே அமர்ந்துதான் பயில்கின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு தங்களுடைய சுயநலத்தை மட்டுமே முன்வைத்து சபா உள்பட 3 மாநில இடைத்தேர்தல்களை அனாவசியமாகத் தூண்டிய அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்க மனமிருப்பதில்லை.
இதற்கிடையே நாடளாவிய நிலையில் கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் தங்களுடையப் பணிகளைத் தொடரலாம் என்ற அறிவிப்பு மற்றொரு அதிர்ச்சியாகும்.
அரசாங்கத்தின் இத்திடீர் முடிவு எவ்வகையிலான பாதிப்பை மாணவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்தும் எனும் அச்சம் பல்வேறு தரப்பினரை ஓரளவு கதி கலங்கச் செய்துள்ளது.
ஆசிரியர்களில் நிறையப் பேர் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கின்றனர் என ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது. சட்ட ரீதியில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும் மற்ற இலாகாக்களுக்கு அவர்களை இடமாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 2,500 ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என கல்வியமைச்சர் ரட்சி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் அச்சத்தில் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்கினால் அதற்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்கும் வரையில் காத்திராமல் எந்நிலையிலும் பள்ளிப்பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் தார்மீகக் கடமையாகும்.