கி.சீலதாஸ் – ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைப்பாளர் அல்லது உழைப்புக்கு மதிப்பளித்து மகிழும் நாளாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. முதலாளித்துவத்தின் புனித தளமாகக் கருதப்படும் அமெரிக்காவில்தான் மே தின சிறப்புக்கு வழிகோலியது.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி காணப்பட்டது. கைத்தொழிலில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த சமுதாயம் இயந்திரத்தின் அறிமுகத்தால் உற்பத்தியில் மாற்றமும், துரிதமும் காண முடிந்தது. இயந்திரங்களைப் பொருத்தி தொழில் செய்யும் வலிமை பணமுள்ள முதலாளிகளுக்கு மட்டும்தான் இருந்தது. இயந்திரங்கள் இருந்தாலும் அவற்றை இயக்க தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். நிலத்தை நம்பி வாழ்ந்த கிராமப்புற வாசிகளுக்கு நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போல் உதித்த இயந்திரங்களைப் பிரதானமாகக் கொண்ட தொழிற்சாலைகள் வேலை வாய்ப்புகளையும் தந்தன. கிராம வாசிகளை இவை கவர்ந்தன. எங்கெல்லாம் தொழிற்சாலைகள் எழும்பினவோ, அங்கெல்லாம் கிராம வாசிகள் சென்றனர். முதலாளித்துவ அமெரிக்கா இதற்கு விதிவிலக்கல்ல.
கிராமத்தைத் துறந்து பட்டணத்துக்குப் புறப்பட்ட கிராமவாசிகள் முதலாளித்துவத்தின் கடுமையான நிபந்தனைகள் யாவை, எத்தகைய சூழலில் வேலை செய்ய வேண்டும் என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, தொழிலாளர்கள் பதினாறு மணி நேரம் வேலை செய்தால்தான் சொற்ப ஊதியம் கிடைக்கும் என்ற நிலையில் சிக்கித் தவித்தது உழைத்துப் பிழைக்கும் சமுதாயம்.
அமெரிக்க நகரான சிகாகோவில், தொழிற்சாலைகளில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் சுரண்டுதலை எதிர்த்தனர். எட்டு மணி நேர வேலைக்காகப் போராடினார். முதலாளிகள் பிடிவாதமாக மறுத்தனர். தொழிலாளர்களின் ஒற்றுமை உணர்வை அவர்கள் புரிந்திருக்க வழியில்லை. 1886ஆம் ஆண்டு மே முதல் நாள் தொழிலாளர்கள் ஒற்றுமையோடு தெரு போராட்டத்தில் இறங்கினர். வேலை நிறுத்தம் அரங்கேற்றப்பட்டது.
தொழிற்சாலைகள் இயங்க முடியவில்லை. இறுதியில், முதலாளிகள் எட்டு மணி நேர வேலையை ஏற்றுக்கொண்டனர். அந்தப் போராட்டம்தான் காலப்போக்கில் மே தினமாக வையகம் எங்கும் கொண்டாடப்படுகிறது, அமெரிக்காவைத் தவிர.
எல்லா நாடுகளும் மே முதல் நாளைத் தொழிலாளர் நாளாகக் கொண்டாடுவதில்லை. ஆஸ்திரேலியாவில் மே மாத இரண்டாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
சில நாடுகளில், குறிப்பாக கம்யூனிஸ்ட் நாடுகளில் மே தினத்தன்று நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுவது இயல்பு. தொழிலாளர் தினத்துக்கும் இராணுவத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். கம்யூனிஸ்ட் நாடுகளில் சீனாவை எடுத்துக்கொண்டால் அதன் இராணுவம் தேசிய இராணுவம் என அழைக்கப்பட மாட்டாது.
மக்கள் விடுதலை இராணுவம் என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த மக்கள் விடுதலை இராணுவம் தமது தேசிய எல்லைக்குள்ளேயே செயல்படுகிறதா அல்லது அதன் கைவரிசை தேசிய எல்லைக்கு அப்பாலும் பரவுமா என்பதும் சிந்திக்க வேண்டிய நிலைப்பாடாகும்.
மே தினம், தொழிலாளர்கள் கண்ணியத்தோடும், மனிதத்தன்மையோடும் நடத்தப்பட வேண்டும் என்ற போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. இந்த நினைவுகள் வரலாற்றில் பசுமையாக இருக்கின்றன. 1866ஆம் ஆண்டு முதலாளித்துவத்தின் சுரண்டலை எதிர்த்தனர். அந்தச் சுரண்டல் மனப்பாங்கு மாறியதா? இல்லை. புது பாணியில் அது வளர்ந்து கொண்டிருக்கிறதா?
உழைப்பாளர் சமுதாயம் நிரந்தரமான வேலை இருந்தால் பொருளாதாரப் பாதுகாப்பு உறுதியாகிவிட்டது என்று நம்புகின்றனர். இது உண்மையாக இருக்கலாம். ஆனால், மக்கள் எவ்வாறு பாதிப்புறுகிறார்கள் என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மை நிலவரம் வெளிச்சத்துக்கு வரும்.
பொருள்வளம் படைத்த முதலாளிகள் எத்தகைய திட்டங்களைத் தீட்டிப் பயனடைகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு, தலை மேல் கூரை வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வீடு வாங்குவதற்குத் திட்டமிடுவது ஒன்றும் விசித்திரமல்ல. வீட்டுக்கான முழு பணத்தையும் கொடுக்க முடியாது. எனவே, வங்கியில் கடன் வாங்க வேண்டும். ஏறத்தாழ தொண்ணூறு விழுக்காடு கடன் கிடைக்கும் சாத்தியம் உண்டு. இந்தக் கடனைக் கட்டி முடிக்க முப்பது ஆண்டுகள் பிடிக்கும். இருபத்தைந்து வயது இளைஞர் ஒருவர் புது குடும்பம் ஆரம்பித்தவர், நம்பிக்கையுடன் வீடு வாங்குகிறார். முப்பது ஆண்டுகள் உழைத்து வட்டியும், முதலும் செலுத்த வேண்டும். இவ்விரண்டையும் கூட்டிப் பார்த்தால் வங்கியின் வருமானம், ஆதாயம் கூடுகிறது. கடன்காரனின் பொருளாதாரச் சுமையும் அதிகரிக்கிறது. முப்பது ஆண்டுகளின் வட்டியும், முதலும் கணக்கிட்டு பார்த்தால் அதிர்ச்சி தரலாம். வருமானம் போதாது என்றால் வேறு கூடுதல் வேலை பார்க்க வேண்டும். அவரது எட்டு மணி நேர வேலையைத் தாண்டி வேறு எங்காவது பணம் தேட முற்படுவார்.
ஒரு வேளை வருமானம் போதுமானதாக இல்லாவிட்டாலும் வீடு முக்கியம் என்பதால் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி கடனைச் செலுத்துவார்கள். கடனைக் கட்டி முடிக்க முப்பது ஆண்டுகள். அந்த இளைஞர் முதுமையின் வாசலில் கால்களைப் பதிப்பார். கடன் தீர்ந்திருக்கலாம். அதற்கு அவர் கொடுத்த விலை தமது இளமை காலம். பொருளாதாரச் சுமையின்றி வாழ முடியவில்லை. வீடு வேண்டுமானால் தியாகம் செய்ய வேண்டும் என்பார்கள். இந்தப் பொருளாதாரச் சுமையைக் குறைக்க வேறு வழி இல்லையா?
அரசு மலிவு வீடுகளைக் கட்டி சொற்ப வாடகைக்குத் தொழிலாளர்களுக்கும் விடலாமே!! ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, அந்த வீட்டைக் குடியிருப்பவர்க்கும், குறைந்த வருவாய் கொண்டிருப்பவர்க்கும் உரிமையாக்கிவிடலாம். முடியாத காரியமா? இது ஓர் உதாரணமே அன்றி இது போல் வேறு பல விதங்களில் தொழிலாளர்களுக்கும், நடுத்தர வர்க்கத்துக்கும் கடன் வழங்க வங்கிகள் தயங்குவதில்லை.
அரசு மக்கள் பணத்தை எப்படி எல்லாமோ செலவு செய்யும்போது சாதாரண மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்ய தயக்க
ம் காட்டுவானேன்? மனித வாழ்க்கை ஆடம்பரமானதாக இருக்க வேண்டும் என்பதல்ல, வேதனை இல்லாமல் வாழ வேண்டும். அதை செய்து கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என்றால் தவறாகுமா?
இதை எல்லாம் நினைக்கும்போது எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தவர்கள் இன்று நிலவும் தொழிலாளர்களின் பொருளாதாரச் சூழ்நிலையைக் கண்ணுறும்போது அவர்களின் போராட்டம் வீணாகிவிட்டதாகக் கருத மாட்டார்களா? முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சூட்சமங்களுக்குக் கட்டுப்பாடே இல்லை. தொழிலாளர்கள் இன்றளவும் முதலாளித்துவத்தின் பொருளாதார வலையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது உண்மையா என்பதை நடப்பு சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்துப் பார்க்க வேண்டும்.