இராகவன் கருப்பையா – தமது தொகுதி மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு எவ்விதமான சவால்களையும் சமாளிக்க தாம் தயாராய் உள்ளதாக சூளுரைக்கிறார் மலேசிய வரலாற்றில் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன்.
பி.கே.ஆர். கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவரான அவர் இவ்வாரம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பத்து தொகுதித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
பத்துவில் இரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கட்சியின் உதவித் தலைவர் தியன் சுவாவை எதிர்த்துப் போட்டியிடும் 26 வயது பிரபாகரன் வெற்றிக் கனியை பறிப்பதில் உறுதியாக உள்ளதாக ‘மலேசியா இன்று’வுடனான சிறப்பு நேர்காணலின் போது குறிப்பிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது 22 வயதே நிரம்பியிருந்த அவர் மகத்தான வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடித்தது எல்லாரும் அறிந்த ஒன்றே.
தொகுதி மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு தமது சட்டத்துறை படிப்பையே தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு இன்று வரையில் முழு நேரமும் களத்தில் இறங்கி நிற்பது மட்டுமின்றி மக்களின் மனங்களிலும் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாகவே சக நண்பர்களுடன் சேர்ந்து உதவி தேவைப்படுவோருக்கு கைக் கொடுப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டிருந்த அவர் தொகுதி மக்களின், குறிப்பாக பி40 தரப்பினரின் பிரச்சினைகளை உடனுக்குடன் கலைவதில் வல்லவராகத் திகழ்கிறார்.
பத்து தொகுதியில் அதிக அளவிலான பி40 தரப்பினர் வசிக்கும் பகுதியான பத்து மூடா பி.பி.ஆர். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலிருந்து செந்தூல் யு.டி.சி. வரையில் அவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள இலவச பேருந்துச் சேவையினால் சுமார் 100,000 குடும்பங்களும் 10கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பயனடைகின்றனர்.
அதோடு மொத்தம் 39 பள்ளிக் கூடங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சுமார் 500,000 ரிங்கிட்டையும் அவர் வழங்கியுள்ளார்.
கோறனி நச்சிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த வேளையில் நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது நாடளாவிய நிலையில் ஆங்காங்கே உள்ள பல அரசு சாரா இயக்கங்களின் வழி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச பால் மாவு வழங்க ஏற்பாடு செய்தார்.
அதே காலக் கட்டத்தில் தமது தொகுதியில் பரிதவித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் வரை பயனீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கினார் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.
இவ்வாறாக அதிக விளம்பரம் இல்லாமல் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வரும் துடிப்பு மிக்க இளைஞரான பிரபாகரனே தொடர்ந்து தங்களுடைய பிரதிநிதியாக இருக்க வேண்டும் என தொகுதி மக்கள் விரும்புவதைப் போல் தெரிகிறது.
தியன் சுவா அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்வதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய அஸ்மின் அலியின் ஆதரவாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
‘மாவீரரின் பெயரைக் கொண்டிருக்கிறீர்கள், எனவே துணிச்சலாக உங்கள் சேவையைத் தொடருங்கள்’ என தமது ஆதரவாளர்கள் உற்சாகமூட்டுவதாகக் கூறும் பிரபாகரன் கட்சியின் தேசிய நிர்வாக மன்றத்திற்கும் போட்டியிடுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் 39 அரசியல் தவளைகள் அங்குமிங்கும் தாவித் திரிந்து நாட்டை சீர்குலைத்த சமயம் இவருக்கும் வலை விரிக்கப்பட்டது. விருப்பத்திற்கு ஏற்றவாறு துணை அமைச்சர் பதவி அல்லது அரசு சார்பு நிறுவனமொன்றில் உயர் பதவி என தூண்டில் போடப்பட்டது.
எனினும் கட்சிக்கு மாசு படியாத விசுவாசத்தைக் கொண்டிருக்கும் பிரபாகரன் அவை அனைத்தையும் துச்சமென மதித்துத் தூக்கியெறிந்தார்.
கட்சியின் சீர்திருத்தப் பணிகளுக்கு முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என உறுதிபூண்டுள்ள அவர் தமது அரசியல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குத் தேவையான அடுத்தக்கட்ட நகர்வுகளில் மிகவும் தெளிவாக உள்ளார்.
அரசியலில் இளையோரின் ஈடுபாடு மிகவும் குறைவாக உள்ளது என்று கூறும் அவர் அதிக அளவிலான இளைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்பதே தமது பிரதான நோக்கம் என்றார்.
இவ்வளவு வேலைகளுக்கிடையிலும் இணையம் வழி கல்வியைத் தொடரும் பிரபாகரன் இவ்வாண்டு பிற்பகுதியில் சட்டத்துறையில் பட்டம் பெறும் தமது இலக்கிலிருந்து சிஞ்சிற்றும் விலகவில்லை.
மலேசிய அரசியல் வானில் ஒரு விடிவெள்ளியாகத் திகழும் இவராவது நமது சமுதாயம் ஏங்கித் தவிக்கும் ஒரு ஆக்ககரமான, சுயநலமற்ற, ஊழலற்ற தலமைத்துவத்தை வழங்குவேண்டும் என்பதே நமது அபிலாஷை.