சாந்தா பெருமாள் | மே 19, வியட்நாம் நாட்டை உருவாக்கிய மாமனிதன் ஹோ சி மின் 1890-ல் பிறந்த தினம் இன்றென அனுசரிக்கப்படுகிறது. ஹோ சி மின் பிறந்தநாள் சரிவரத் தெரியவில்லை; எனவே, வியட்நாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி, அவர் பிறந்த நாள் என்றும், மத்திய வியட்நாமில் அமைந்துள்ள ங்கே ஆன் எனும் சிறிய மாகாணத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
டிசம்பர் 2018-ல், அவரைக் காண ஹானோய் சென்ற அனுபவத்தை இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
2012-ல், முதன்முதலாக, கம்பீரமான அந்தக் கல்லறை மாடத்தைக் காண நான் என் கணவருடன் அங்குச் சென்றிருந்தேன். ஆனால், சற்று கால தாமதம், எங்களால் உள்ளே செல்ல முடியாமல் போனது, மிகக் குறுகியக் காலப் பயணம், மீண்டும் சென்று பார்க்க இயலாமலேயே நாடு திரும்பினோம் வருத்தத்தோடு.
2018-ல், மீண்டும் ஹானோய் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது; இம்முறை என்னுடன் என் மாமன் மகள் உமா, தங்கை ஜெயா மற்றும் தங்கை மகள் சாரணி மூவரும் இருந்தனர். டிசம்பர் 19 ஆம் நாள், காலை மணி 8.30-க்கெல்லாம் சென்றுவிட்டோம் ஹோ சி மின் துயிலும் இல்லத்திற்கு; நீண்டு கிடந்தது…. வேலி தாண்டி, வெளியில் சாலைவரை அவரைக் காண காத்துக் கிடந்தவர்களின் வரிசை. வயது வரம்பில்லாமல்… இன, மத, மொழி, கொள்கை பேதம் கருதாமல் அங்கு பல நாட்டினர் வரிசை பிடித்து நின்றனர்.
உடன் வந்தவர் (லோங் – எங்கள் சுற்றுலா வழிகாட்டி) சொன்னார், ஒருநாளைக்கு சில ஆயிரம் பேர்கள் அங்கு வருவார்கள் என்று. சரி கூட்டம் கொஞ்சம் குறையட்டும், பிறகு வருவோம் என B52 காட்சியகம் சென்றோம்.
காலை 11.20 மணியளவில் மீண்டும் வந்தபோது, 8 மணி முதல் 11 மணி வரையில் மட்டுமே திறந்திருக்கும், உள்ளே சென்று அவரைக் காண இயலாது, அவர் வாழ்ந்து மறைந்த இடங்களை மட்டும் பார்க்கலாம் என்று பணியில் இருந்தவர்கள் சொன்னார்கள், கண்கள் வியர்த்து போயின எனக்கு. ஐயோ, இம்முறையும் முடியாமல் போனதே என்று.
ஆனால், விடவில்லை, மறுநாள், டிசம்பர் 20-ம் தேதி, காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து தயாராகிவிட்டோம். எங்களை அழைத்துச்செல்ல லோங் அவரின் தம்பி ‘மோய்’யை ஏற்பாடு செய்திருந்தார்.
காலை 8.15-க்கெல்லாம் வரிசை பிடித்து நின்றோம், அதே கூட்டம்தான், சற்றும் குறைவில்லாமல். பல பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி, மெதுவாகவே நகர்ந்தது வரிசை. பெரியப் பைகள், புகைப்படக் கருவிகள், ஏன் நீர் பாட்டில்கள் கூட உள்ளே எடுத்துச் செல்ல தடை. நான் வைத்திருந்த பாட்டிலில் நீர் சற்று குறைவாக இருந்ததால் தப்பித்தது, இல்லையென்றால் 2 மணிநேர வரிசைப் பயணத்தில் திக்குமுக்காடி போயிருப்போம், அந்தக் காலை வெயிலில் நின்று.
நீண்டு கிடந்த வரிசை மிக ஒழுங்குடன், பேச்சு சத்தம் ஏதுமின்றி, மிக மிக அமைதியாக நகர்ந்தது. வழிநெடுக பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். சுமார் 2 மணி நேரங்களுக்குப் பிறகு, அவருடைய சமாதியினுள் நுழைந்தோம், யாரும் பேசக்கூடாது என வெளியிலேயே கூறப்பட்டிருந்தது. ஆக, எங்கும் ஒரே அமைதி…
வரிசை நகர்ந்து நகர்ந்து அவரிடம் வந்தது, நின்று பார்க்க அவகாசம் இல்லை, நிமிர்ந்து வீரவணக்கம் செய்ய அனுமதி இல்லை, நடந்துகொண்டே அம்மாவீரனுக்கு வணக்கம் செலுத்தலாம்.
கண்கள் பணித்தே, துயில் கொண்டிருக்கும் அவ்வுடல் அருகில் சென்றேன்; படித்த கதைகள் எல்லாம், கேட்டத் தகவல்கள் எல்லாம் நிழலாடின கண்கள் முன்னே, மெய் சிலிர்த்துதான் போனேன் நான், அம்மாவீரனின் அமைதியின் பின்னே. நீண்ட நாள் கனவு நனவானதில், ஆசிய கண்டத்தில் புகழ்பெற்ற அந்த சுதந்திரப் போராளியைச் சந்தித்ததில் பெரு மகிழ்வு எனக்கு.
2012-ல் அங்குச் சென்றபோது, அவரது கல்லறை மாடத்தில் பணியாற்றும் படைவீரர்களின் பணிநேர மாற்ற அணிவகுப்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என்னவொரு கம்பீரமான அணிவகுப்பு அது, முதன் முறையாக அது போன்ற ஒன்றை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
எங்களை அங்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி சொன்னார்,” இதுபோன்ற ஆடம்பரங்களையெல்லாம் ஹோ சி மின் சற்றும் விரும்பியதே இல்லை. மிகச் சாதாரணமானவர் அவர், எளிய வாழ்க்கையை விரும்பி வாழ்ந்த புரட்சிகர போராட்டவாதி அவர். ஆனால், அவர் இறந்த பின்னர், அவர் விரும்பியவாறு அவரால் இருக்க முடியவில்லை. அதற்கு இந்த முதலாளித்துவ உலகம் அனுமதிப்பதில்லை,” என்றார்.
அது என்னவோ உண்மைதான்.
1960 முதல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹோ போரில் இருந்து விலகத் தொடங்கினார். செப்டம்பர் 2, 1969 அன்று, காலை 9.47 மணிக்கு, ஹானோயில் தனது 79-வது வயதில் மாரடைப்பால் ஹோ காலமானார்.
இறப்பதற்கு முன்னதாக, பொதுமக்களுக்கு எந்தவோர் அறிவிப்பும் இல்லாமல், தனது உடலுக்கு எரியூட்டி, சாம்பலைப் பரப்ப வேண்டும் என கம்யூனிச சித்தாந்தவாதியான ஹோ உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், அவரது உடலை இந்நாள் வரை பாதுகாத்து, பொதுமக்களின் பார்வைக்காக ஹனோயில் உள்ள அந்தச் சிறப்பு கல்லறையில் வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. அரசாங்கம் எடுத்த இந்நடவடிக்கை ஹோவின் விருபத்திற்கு மாறாக இருப்பினும், இன்றையப் புதிய தலைமுறைக்கும் சுதந்திரப் போராளிகளுக்கும் ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும் உன்னதத் தளமாக இந்தக் கல்லறை மாடம் திகழ்கின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஹோ உயிர்பிரிந்ததை அடுத்து, வியட்நாம் முழுவதும் போரிட்டு வந்த இரு தரப்பினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டனர். அந்த புரட்சிப் போராளியின் இறப்பிற்குத் துப்பாக்கிகளும் துக்கம் அனுசரித்தன.
ஹோ சி மின்`னுக்கு வைக்கப்பட்ட பெயர் ங்குயென் சின் சுங் (Nguyen Sinh Cung). ஹோ சி மின் என்பது அவரின் இரகசியப் பெயர். 1942-ல், வியட்நாம் விடுதலையடையும் சில ஆண்டுகளுக்கு முன்னர், ஹோ சி மின் தனது புனைப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார், அதுவே அவருக்கு நிரந்தரமாகியும் போனது. இப்படி பல இரகசியப் பெயர்களைக் கொண்டிருந்த இவர், அதிபராகும்வரைத் தலைமறைவில் வாழ்ந்து வந்தார். சுமார் 50 வித்தியாசப்பட்ட இரகசியப் பெயர்கள் இவருக்கு உண்டு என நம்பப்படுகிறது.
தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம், 1975 முதல் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.