ஜனநாயக ஆட்சியில் அரசு மக்களுக்காகச் செயல்பட வேண்டுமே அல்லாது ஒரு சில சக்திகளின் நலனை மட்டும் பாதுகாக்கும் கருவியாக இயங்கக்கூடாது.
புகழ்மிக்க அமெரிக்க பாடலாசிரியர், இசை கலைஞர் ஃப்ராங்க் சுப்பா (1940-1993) அரசின் பொறுப்பு என்ன என்பதை விளக்கும்போது மக்கள்தான் அரசின் உரிமையாளர்களே அன்றி அரசு மக்கள் மீது உரிமை கொண்டாட முடியாது என்றார். அதோடு நிற்கவில்லை. அரசுக்கு ஆளும் உரிமத்தை வழங்கிய மக்கள் அது தற்காலிகமானது என்றும் சொன்னார்.
ஆனால், உண்மையில் நடப்பது என்ன? ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் பிற நாடுகளை ஆக்கிரமித்து தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டார்கள். வெள்ளையர்களின் ஆட்சி நியாயமானதாகவோ, நீதியை வழுவியதாகவோ அமைந்திருக்கவில்லை. இறுதியில், கடந்த நூற்றாண்டில் காலனித்துவத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஆசிய -ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை பெற்றன.
விடுதலை பெற்ற நாடுகள் ஐரோப்பா – அமெரிக்கா போன்ற நாடுகளில் பேணப்படும் ஜனநாயக ஆட்சி முறையைத் தங்கள் நாட்டின் அரசியல் தத்துவமாக ஏற்றுக்கொண்டன. நடந்தது என்ன?
ஜனநாயகம் ஆட்சியில் இருப்பவர்களின் எண்ணப்படி இயங்கியது. பேச்சளவில்தான் ஜனநாயகம். மக்களுக்காக அரசு என்ற நிலை மாறி அரசுக்காக மக்கள் என்ற நிலை வடிவம் கண்டது. ஆமாம், அரசுக்காக மக்கள் என்றால் என்ன? காலனித்துவவாதிகள் மக்களை எப்படி எல்லாம் அவமதித்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்களோ அதுபோலவே சுதந்திரம் பெற்ற நாடுகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்டனர் என்று வரலாறு கூறும் உண்மையாகும்.
சிங்கப்பூர் ஓர் எடுத்துக்காட்டாகும். சுதந்திரத்திற்கு முன்னர் அந்த நாட்டின் பிரதமர் லீ குவான் யூ எதிர்கட்சியில் இருந்தபோது மனிதநேயத்துக்குப் புறம்பான உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அந்தச் சட்டத்தை ரத்து செய்யாமல் அதன் சாதகமான தரத்தை விளக்கினார்.
கம்யூனிஸ்டுகளின் தீயச் செயல்களைக் கட்டுப்படுத்த அந்தச் சட்டம் தேவை என்று கூறலானார். அந்தச் சட்டத்தின் கீழ்தான் தமது அரசியல் பயணச் சகாக்களை நீதிமன்ற விசாரணையின்றி தடுப்புக் காவலில் பல ஆண்டுகளாக வைத்தார். அதில் குறிப்பாக லிம் சின் சியோங் என்ற தலைவரைக் குறிப்பிடலாம். மக்கள் செயல் கட்சி ஆரம்பித்தவர்களில் குறிப்பிட்ட தலைவர்களில் அவரும் ஒருவர்.
காலனித்துவ ஆட்சியால் சிறைப்படுத்தப்பட்ட முன்னாள் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நிரந்தரமாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதில் கரிசனம் காட்டினார்கள். அந்த ஜனநாயக கோட்பாட்டில் மக்களின் கருத்துக்கு இடமளிக்கும் தராதரத்தைக் கொண்டிருக்கவில்லை.
அதே சமயத்தில், அரசியல் எதிரிகளை எப்படி எல்லாம் வீழ்த்த முடியுமோ அதற்கான செயல்களில் பல நாடுகளின் அரசுகள் ஈடுபட்டன என்பது நிரூபணமாகிவிட்டது. பெரும்பாலும் இந்தக் கொடுமைகள் ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக இருந்தது. சில ஆப்பிரிக்க நாடுகளில் அரசியல்வாதிகள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
வளமிக்க மேற்கத்திய நாடுகள் தங்களின் சொந்த நலனைக் கருத்தில் கொண்டு அத்தகைய கொடுமைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. அந்த வகையில் காங்கோ குடியரசின் முன்னாள் பிரதமர் லுமும்பாவைக் குறிப்பிடலாம். அவர் கொல்லப்பட்டார்.
மலாவி நாட்டில் எதிர்கட்சிகள் மட்டுமல்ல ஆளும் கட்சி அமைச்சரவை உறுப்பினர்கள் கூட கொல்லப்பட்டனர். இவையாவும் மலாவி நாட்டின் அதிபர் டாக்டர் ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டாவின் கட்டளையின்படி நிறைவேற்றப்பட்டவை.
ஜனநாயகம் என்றால் மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு என்று பொருள்படும். ஆனால், பல நாடுகளில் ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கவில்லை. இந்த வகையில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற லீ குவான் யூவின் எதிர்கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும் எப்படி நடத்தினார் என்று கவனிக்க வேண்டும்.
தமக்கு எதிராகச் செயல்படுவோரை ஒன்று உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை இன்றி சிறைபடுத்துவது அல்லது எதிர்கட்சி தலைவர்கள் எவரேனும் ஒரு கருத்தை வெளியிட்டால் அது அவதூறு என்று கூறி வழக்கு தொடுப்பார், வெற்றி பெறுவார். இழப்பீடு தொகையும் கிடைக்கும். இந்த வகையில் அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் பாதிப்புற்றதையும் கவனிக்க வேண்டியுள்ளது. திவால் நிலை அடைந்ததையும் காணலாம்.
இப்படிப்பட்ட அவதூறு வழக்குகள் ஜனநாயகத்துக்குப் புறம்பானவை என்பது மட்டுமல்ல அவை மாற்றுக் கருத்து மிளிர்வதைத் தடுக்கும் தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதே சமயத்தில், நீதித்துறை மீதும் கவலைக்கிடமான சந்தேகங்கள் எழுப்பப்படுவதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
நீதித்துறை அரசுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுவது ஒன்றும் புதினமல்ல. பல நாடுகளில் அரசின் கொள்கைபடியே நீதித்துறை நடந்து கொள்ளும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. கம்யூனிஸ்டு நாடுகளில் கட்சியின் கொள்கைக்குத்தான் முக்கியத்துவமே அன்றி சட்டத்துக்கு அல்ல என்ற கருத்தும் உண்டு.
நீதித்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்கிறது. நீதித்துறை ஆளும் கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறது என்றார் துன் டாக்டர் மகாதீர் முகம்மது. இது எண்பதுகளில் நடந்தது. இதை விளக்கும் நடவடிக்கையில் இறங்கிய முன்னாள் தலைமை நீதிபதி துன் சலே அப்பாஸ், கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதும் மலேசிய நீதித்துறை வரலாற்றில் களங்கம் ஏற்படுத்தியதை மறக்க முடியாதே!
நீதிபதிகள் மீது குற்றம் சாட்டலாமா? அதை விசாரிக்கும் அதிகாரத்தை யார் பெற்றிருக்கிறார்கள் என்ற சர்ச்சை இப்பொழுது மலேசியாவில் கிளம்பியுள்ளது. பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவையாவும் விவாதத்திற்கு அழகு கூட்டலாம். நடைமுறைக்குப் பொருந்துமா என்பதைக் கவனிக்க வேண்டும்.
எடுத்ததற்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை என்ற வாதத்தை முன்வைப்பதைக் காட்டிலும், இருக்கும் சட்டத்தைக் காலத்துக்கேற்றவாறு அணுகுவதுதான் பொருத்தமான செயல், நீதிமுறை. சட்ட வியாக்கியானத்தைப் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்தால் நன்மையாகும்.