ஏழ்மைக்கு காரணம் – அரசும் அரசியல்வாதிகளும்

கி. சீலதாஸ் –       இந்த நாட்டில் இந்தியச் சமுதாயத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்ற கருத்து பரவி வருவது வேதனைக்குரியதாகும். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அவனுக்குப் பாதுகாப்பு இல்லை, மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இன்றல்ல அது நெடுங்காலமாகவே நெருடிக் கொண்டிருக்கும் பிரச்சினையாகும். இதைக் களைத்திட வேண்டும் என்கின்ற உணர்வு இம்மியளவும் இருந்ததாகவோ அல்லது இருப்பதாகவோ தெரியவில்லை.

பெரும்பான்மையினர் பதவி, பணம், அதிகாரம் என்ற ஆசைகளில் உழன்று கொண்டிருக்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினையைப் பற்றி கவனிக்க ஏது நாழி!

சிறுபான்மை

சிறுபான்மை என்பதால் அவன் பொருளாதாரத்தில் முன்னேற முடியாத சூழ்நிலை இயல்பாகவே அவனைத் துன்புறுத்தும். ஆனால், அவனிடம் திறமை இருந்தால், அந்தத் திறமையை வைத்து அவன் முன்னுக்கு வர முடியும். உழைப்பில் முதலீடு செய்பவனுக்கு இழப்பு ஏற்படாது. ஆனால், அந்த உழைப்புக்கு மதிப்பளிக்கும் தன்மையை அரசு கொண்டிருக்க வேண்டுமெனக் கோருவதில் எந்தத் தவறுமில்லை.

பொருளாதார வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் ஏராளமாக இருந்தாலும் அவற்றை அடைவதற்கான முறைகள் நியாயமானவையா என்ற கேள்வி எழுவதையும் கவனிக்க வேண்டும். உதவியைப் பெறுவதற்குக் கையூட்டு கொடுக்க வேண்டும் என்றால் பொருளாதார வசதி இல்லாத சிறுபான்மை குடிமகன் என்ன செய்வான்? சிறுபான்மையைப் பிரதிநிதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அதன் தலைவர்களே தங்களை நம்புவோரை வஞ்சித்தால் என்னவென்பது?

இந்தியச் சமுதாயத்தின் பின்னணியைக் கவனித்தால் சங்கடமான ஓர் உண்மை புலப்படும். அது பல எல்லைகளை உருவாக்கி வளர்ந்த சமுதாயம். எல்லைகளை நிர்மானித்துக் கொண்ட சமுதாயம். இனவாரியான எல்லை, ஜாதி வாரியான எல்லை, மொழி எல்லை, சமய எல்லை, கலாச்சார எல்லை, கலை எல்லை என இவ்வாறு பல எல்லைகளை உருவாக்கியவன் அவற்றில் இருந்து வெளிவரவில்லையே. ஆனால், பிற இனத்தவர்கள், மொழிகள், சமயங்கள் தமது எல்லைகளுக்குள் புகுந்து ஆக்கிரமிக்க வழிவிட்டதைக் காணலாம்.

அதனால், இந்தியர்கள் தாங்கள் நிர்மானித்த எல்லைகளைக் கடந்து மற்றவர்களின் எல்லைகளுக்குள் நுழைய வேண்டும் என்று சொல்லமாட்டேன். இந்தியர்களுக்கு எனத் தனி பெருமை உண்டு. அதை உதறிவிடாதீர்கள் என்றுதான் சொல்லுவேன்.

அதைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? இருக்கும் பொருளாதாரத் திட்டங்கள் போதுமானதா?

காலனித்துவம்

இங்கே காலனித்துவ திட்டத்தைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் தெளிவாகும். அதில் முக்கியமானது மொழி. காலனித்துவவாதி தனது உடைமைகளை நிர்வகிக்க தேவையானவர்களைத் திரட்டினான். உதாரணத்துக்கு, இந்தியத் துணைக்கண்டத்தில் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தி அதில் புலமை பெற்றவர்களைத் தனது நிர்வாகத்துக்குப் பயன்படுத்தினான். மொழி வழியாக அவனின் அறிவு வளமடைய வேண்டும் என்பதே அவன் நோக்கம்.

தனது திட்டம் வெற்றி பெற அவன் வகுத்த வியூகம். அதுபோலவே, இன்று பலவிதமான தொழில், கல்விகளுக்கான வாய்ப்புகள் சிறுபான்மையினர் பங்கு பெற்றாலும் அது பெரும்பான்மையினரின் நலனைக் கருத்திற்கொண்டது என்றால் தவறில்லை. இருக்கும் சிறுபான்மையினரை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவது என்பதுதான் திட்டம்.

பல எல்லைகளை வகுத்த இந்தியர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் முகலாய் மற்றும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து அடிமை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டது மட்டுமல்ல அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களைப் பாதுகாப்பார்கள் என்ற வெகுளித்தனத்தை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையானது அவனின் ஆளுமையை இழக்கச் செய்தது.

நம்பிக்கை இழந்தான். சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை இழந்தான். சமயம், மூட நம்பிக்கைதான் காரணம் என்று போர் கொடி ஏந்திய சீர்த்திருத்தவாதிகள் அரசியல் மோகம் கொண்டு மக்களைப் பழைய நிலையிலேயே வைத்திருக்க வகுத்த வியூகம் ஆச்சரியமானதே. பழமையிலிருந்து விடுபட்டு புதுமை. சீர்த்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு தங்களின் சொந்த நலனில் முழுமூச்சாக ஈடுபட்டு வெற்றி கண்டனர்.

அரசியல்வாதிகளும், அரசும்

அவர்களின் மொழியில், கருத்தில் மயக்கமடைந்த மக்கள் பழைய நிலையிலேயே தங்கிவிட்ட அவலத்தைப் புரிந்து கொண்டவர்கள் யார்? பசப்பு மொழியால் மக்களை ஏமாற்றியவர்கள் களிப்புடன் வாழ்கிறார்கள். அவர்களை நம்பிய சாதாரண மக்கள் கவலையில் திண்டாடுகிறார்கள். இதுதான் உண்மை! இந்த உண்மையை மறைப்பதில் அரசியல்வாதிகளும், அரசும் கை கோர்த்து செயல்படுவதாகச் சொல்லப்படுவதை எப்படி புறக்கணிப்பது?

சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களும் உழைத்து முன்னேற வழி கண்டால் அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகள் களையப்படலாம். அப்படிப்பட்ட நம்பிக்கை தரும் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.

எல்லா குடிமக்களுக்கும் இந்தச் சலுகை சேர்ந்தால்தானே நாடு சுபிட்சமான நாடு என்று சொல்ல முடியும். தம்மைத் துன்புறுத்தும் வறுமையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு கொள்ளை, கொலை, மோசடி போன்ற தீயச் செயல்களில் மக்கள் இறங்குகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் யார்? அரசு தனது பொறுப்பற்ற தன்மையை மறைக்க முடியுமா?

இன்று நிலவும் பல கொடுமையான நிகழ்வுகளைக் கண்ணுறும்போது, பற்பல குற்றச்செயல்கள் பெருகி வருவதைக் காணும்போது, பல்லாயிரக் கோடி பணம் திருடப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளிவரும்போது இதற்கு யார் காரணம் என்று கேட்கத் தோன்றும்?

அரசியல்வாதிகளே இதற்குக் காரணம் என்பதை அறியும்போது மனிதருள் மனிதனாக வாழ நினைத்து அது நிறைவேறாது போகும்போது தவறான பாதையில் பொருள் ஈட்ட முயன்றவனுக்கு வித்தியாசம் இருக்கிறது.

அரசியல்வாதி நாட்டையே திருடுகிறான். சாதாரண மனிதன் ஒருத்தனை மட்டும் திருடுகிறான். அரசியல்வாதி ஆடம்பர வாழ்க்கைக்காகத் திருடுகிறான்; அவனுக்கும் ஒரு வேளை சாப்பாட்டுக்காகத் திருடுகிறவனுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. ஆடம்பரத்தை நாடும் அரசியல்வாதி சாதாரண குடிமகனின் அவலநிலைக்குக் காரணி.

எனவே, இந்தியச் சமூகத்தைப் பீடித்திருக்கும் சமூக நோய்கள் யாரால் ஏற்பட்டன என்பதை ஆய்ந்துப் பார்க்கும் போது அதற்குக் காரணம் அரசு என்றால் தவறாகாது.

அதோடு, இந்தியச் சமூகத்தின் மீது கரிசனம் கொண்டவர்களாகத் திகழ்பவர்கள் வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முற்படுவது நல்லதாகும். அந்த வரலாற்று உண்மைகளை மக்களிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.

தன்மானத்தையும், ஆளுமையையும் சமூகம் மீட்க வேண்டும்

இழந்த தன்மானத்தை, ஆளுமையை இந்தியச் சமூகம் மீட்க வேண்டும். உழைப்பில் நம்பிக்கை, நேர்மையில் நம்பிக்கை, வாக்கு சுத்தம் என இவையோடு இணையும் மனப்பூர்வமான உழைப்பு நிச்சயமாக இந்தியச் சமுதாயத்தை ஒரு நல்ல வழியில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நாட்டு இந்தியர்கள் அந்த நம்பிக்கையைப் பெற வேண்டும். உழைக்கும் கரங்கள் மானியத்துக்காகக் கையேந்தாது.

தமது குறைகளை நீக்கும் பணியில் இந்தியச் சமுதாயம் இறங்க வேண்டும். மற்றவர்கள் உதவுவார்கள் என்பதை மறந்து நாம் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். புது திட்டம் தேவை. அதற்காக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றில்லை. அரசும், சிறுபான்மையினரும் தங்களின் சிந்தையில், அணுகுமுறையில் திருத்தம் கண்டால் போதும். இதுவரை மற்றவர்களை நம்பியது போதும். உங்களை நீங்களே நம்ப வேண்டும்!