அகதிகளின் ஊடுருவலினால் நாட்டிற்கு தொடரும் தலைவலி

இராகவன் கருப்பையா –மலேசியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவும் அகதிகளினால் பலதரப்பட்டப் பிரச்சினைகளை அரசாங்கம் மட்டுமின்றி பொது மக்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

குறிப்பாக மியன்மார் நாட்டிலிருந்து வந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக் கணக்கான அகதிளை பராமரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு தலைவலியாகவே உள்ளது.

கடந்த 1975ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் நுழைந்த வியட்நாமிய அகதிகள் தொடங்கி ஒன்றரை மாதத்திற்கு முன் கெடாவில் உள்ள ஒரு தடுப்புக்காவல் முகாமிலிருந்து தப்பிய 500கும் மேற்பட்ட மியன்மார் அகதிகள் வரை இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணோம்.

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகளுக்கு கல்வியும் வேலை வாய்ப்பும் வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறது என இரு வாரங்களுக்கு முன் வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் செய்த அறிவிப்பு பொது மக்களிடையே ஓரளவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே உள்நாட்டில் முறையானக் கல்வியும் பள்ளிக்கூட வசதிகளும் இல்லாமல் நிறையப் பிள்ளைகள் பரிதவிக்கின்றனர். சரியான வேலை வாய்ப்புகள் அமையாமல் எண்ணற்ற இளைஞர்கள் தல்லாடுகின்றனர். நாட்டின் பொருளாதாரமும் மிகவும நலிவடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் அகதிகளுக்கு வழங்கப்டும் வாய்ப்புகளினால் உள்நாட்டவருக்கு சம்பள உயர்வு கிடைக்காமல் போகக்கூடும், அல்லது குறைவான சம்பளத்திலேயே வாழ்க்கையை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.

எனினும் அரசாங்கத்திற்கும் வேறு வழியில்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாடு முழுவதிலும் உள்ள தடுப்புக் காவல் நிலையங்களில் அவர்களை பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளினால் மக்களின் வரிப்பணம்தான் விரயமாகிறது.

எனவே அவர்கள் சுயமாக வேலை செய்து சம்பாதிக்கச் செய்வதே விவேகமான செயல் என அரசாங்கம் எண்ணுவதிலும் தவறில்லை. இதனால் அரசாங்கத்தின் பாரமும் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, அண்டை நாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ள போதிலும் இங்கு மட்டும் ஏன் அதிகமான அகதிகள் ஊடுருவுகின்றனர் என்பதும் ஒரு புதிராகவே உள்ளது.

இத்தருணத்தில் மலேசிய – தாய்லாந்து எல்லைகளில் நிகழ்வதாகக் கூறப்படும் ஆள் கடத்தல் நடவடிக்கைகளையும் நாம் உதாசினப்படுத்த முடியாது. நாட்டிற்குள் சுலபமாக நுழைவதற்கு இதுவும் ஒரு வழியாக இருக்குமோ என்றுக்கூட எண்ணத் தோன்றுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கோறனி நச்சிலின் தாக்கத்தினால் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தருவிக்கப்படாதால் தோட்டத் துறையிலும் உற்பத்தித் துறையிலும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புடைய வருமானமும் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.

புலம் பெயர்ந்தத் தொழிலாளர்களை இந்தத் துறைகளில் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும் என்று வெளியான செய்திகள் ஏற்புடையதாக உள்ள போதிலும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் கண்மூடித்தனமாக இதனை அமல்படுத்தக் கூடாது.

இத்தகையத் தொழிலாளர்களினால் சமூகப் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.

உதாரணத்திற்கு தலைநகருக்கு வெளியே செலாயாங் சந்தையில் வேலை செய்யும் மியன்மார் நாட்டவர்களின் அடாவடித் தனத்தினால்

எண்ணற்ற சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளது எல்லாருக்கும் தெரியும்.

அவர்களுடைய வரம்பு மீறிய செயல்களை அரசாங்கம் கட்டுப்படுத்த இயலாமல் தடுமாறுகிறது அல்லது அதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அக இப்படி ஏனோதானோ எனும் நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்பட்டால் அயல் நாட்டுத் தொழிலாளர்களினால் நமக்கு ஏற்படும் இன்னல்களுக்கு ஒரு முடிவே இருக்காது.

எனவே ஐ.நா. சாசனத்தின் படி, உயிருக்கு பயந்து ஓடி வந்திருக்கும் அகதிகளை அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்ற போதிலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு வழங்கும் அடைக்கலம் நமக்கு உபத்திரமாகிவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும்.