விஸ்வரூபம் எடுக்கும் கொத்தடிமை கொடூரம்!

இராகவன் கருப்பையா . கடந்த 1983ஆம் ஆண்டில் பஹாங் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள செலாஞ்சார் அம்பாட் எனும் ஃபெல்டா நிலக் குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்த கொத்தடிமை சம்பவம் நாட்டை உலுக்கியது நிறையப் பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கும்.

அந்தக் கொடூரம் அம்பலமாகித் தற்போது 39 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அது போன்ற சம்பவங்கள் பஹாங் மாநிலம் மட்டுமின்றி நெகிரி செம்பிலானின் சில பகுதிகளிலும் இன்னமும் தலைவிரித்தாடுகிறது என்பது நமக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.

இதில் வியக்கத்தக்க ஒரு விசயம் என்னவென்றால் இக்கொடுமையைப் புரியும் கயவர்கள், அவர்களிடம் மாட்டித் தவிக்கும் ஏழைகள் மற்றும் இந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முனையும் தரப்பினர், ஆகிய எல்லாருமே இந்தியர்கள்தான்.

செலாஞ்சார் அம்பாட் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டு, அதற்குக் காரணமானவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதோடு இக்கொடுமை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என எல்லாரும் எண்ணியிருந்த போதிலும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை என்றே தெரிகிறது.

இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நடப்பது தெரிந்தும் அருகிலுள்ள காவல் நிலையங்களைச் சேர்ந்த சில காவல்துறை அதிகாரிகள் கண்டும் காணாததைப் போலவே இருக்கின்றனர் என அண்மையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கூறப்பட்டது.

தோட்டப் புறங்களில் இக்கொடுமைகளைப் புரிபவர்கள் அடியாட்களை அமர்த்திச் சம்பந்தப்பட்ட அப்பாவிகளை மிரட்டி வைத்திருப்பதால் வெளியாட்கள் உள்ளே செல்வதும் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவதும் சிரமமாக உள்ளது எனச் சுவாராம் எனும் அரசு சாரா இயக்கத்தின் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி குறிப்பிட்டார்.

‘கொத்தடிமைத் தொழிலாளர்கள்’ எனும் தலைப்பில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற முகநூல் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிவன் தமது ஆதங்கத்தை இவ்வாறு வெளியிட்டார்.

தேசிய ரீதியில் பல்வேறு தரப்பினரைக் கொண்டு  சக்திவாய்ந்த குழு ஒன்றைப் பிரத்தியேகமாக அமைத்தால்தான் இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

தமது சக்திக்கு ஏற்பத் தாமும் பல பேரைக்  காப்பாற்றியுள்ளதாகக் கூறிய காமாச்சி, காப்பாற்றப்படுவர்களில் பலருக்குப் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை போன்ற முக்கியமான  தஸ்தாவேஜுகள் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாக உள்ளது என்று கூறினார். இருந்த போதிலும் பதிவு இலாகாவுக்கு அவர்களை நேரடியாக அழைத்துச் சென்று தேவையான ஏற்பாடுகள் அவர் செய்துள்ளார்.

இப்படிப்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் எடுப்பது சிரமமாக இருந்தால் நீதிமன்றம் செல்வதைவிட வேறு வழியில்லை என மற்றொரு பேச்சாளரான பேராக்கின் சுங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் கூறினார்.

எனினும் நீதிமன்றம் சென்று இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண்பது அவ்வளவு சுலபமில்லை எனும் யதார்த்தத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் அரசியல் ஆதாயத்தை முன்னிறுத்தி இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வெறுமனே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் இத்தருணத்தில் நாம் நினைவுகூரத்தான் வேண்டும்.

நகர்ப் புறங்களுக்கு வெளியே வாழ்க்கையில் மிகவும் மோசமான நிலையில் கடன்களில் உழன்று தவிக்கும் ஏழை மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்வதைப் போன்ற ஒரு சூழலை உருவாக்கித் தங்களுடைய தோட்டப்புறங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கின்றனர் சில கொடுங்கோல் முதலாளிகள்.

‘பசுத் தோல் போர்த்திய புலி’யைப் போல அவர்களுடைய சிறு கடன்களை அடைத்து, பிறகு அத்தொகையை மீட்கும் பானியில் அந்த ஏழை எளியோரைக் கொத்தடிமைகளாக மாற்றுகின்றனர். அந்தக் காட்டுப் பகுதிகளிலேயே அவர்கள் அடைக்கப்பட்டு அடியாட்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதால் அங்கிருந்து தப்ப வழியின்றி அவர்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இப்படிப் பரிதவிப்பவர்களின் சரியான எண்ணிக்கை தெரியாத போதிலும் சன்னம் சன்னமாக அது கூடிக் கொண்டுதான் போகிறது என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே இப்பிரச்சினை குறித்து அண்மையில் கருத்துரைத்த மனிதவள அமைச்சர் சரவணன், தனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறினார்.

‘மோசமான சாலைகள் மற்றும் போதுமான அளவு குடிநீர் இல்லை, போன்ற புகார்கள் குறித்துத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ‘செலாஞ்சார் அம்பாட்’ போன்ற நிலை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது,’ என்று குறிப்பிட்ட அவர் அதன் தொடர்பில் விசாரணை செய்ய உறுதியளித்தார்.

எனினும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முடிபிருந்தே இதன் தொடர்பான விரிவான செய்திகளும் கட்டுரைகளும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமாகத்தான் இருக்கின்றன என்பதால் பொது மக்களுக்கு இது புதிய விசயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியாயினும் இப்பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருவதால் தகுந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் மட்டும்தான் இதனைக் கலைய முடியுமே தவிர அரசு சாரா இயக்கங்களோ தனிப்பட்டவர்களோ அவ்வளவு சுலபத்தில் இதற்குத் தீர்வு காண முடியாது என்பது நிதர்சனம்.