இராகவன் கருப்பையா –கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கவிழ்ந்ததற்கு மூல காரணம், ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி எனும் அவப்பெயரை அது சுமந்து நின்றதுதான் என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்ட அம்சத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
அரசியலிலிருந்த ஓய்வு பெற்றிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் களமிறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து பக்காத்தானின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததையும் நாம் மறக்கலாகாது.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித் திரிந்த போதிலும் 60 ஆண்டுக்கால அம்னோ ஆதிக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் அத்தகைய நிலைப்பாடு இருப்பதற்கான அறிகுறிகளைக் காணவில்லை என்பதுவே வருத்தத்திற்குரிய ஒரு விசயம்.
பல முக்கியத் தலைவர்கள் மீது எண்ணிலடங்கா வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றைத் துச்சமென மதித்துப் பல தரங்கெட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தேர்தலுக்குத் தயார் என சூளுரைக்கும் அம்னோவுக்கு, சுலபமான வெற்றி கிடைக்காது.
பக்காத்தான் தலைவர் அன்வார் தனது செல்வாக்கைப் பெருமளவு இழந்துள்ளார். அதே வேளையில் அவர் கட்சியின் நிலைப்பாடு மாற்றத்திற்கு ஏற்ற வகையில் ஒரு புதிய அணுகு முறையை அரசியல் தீர்வாகக் கொடுக்க இயலுமா என்பதில் அந்த கட்சி கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் துரோகிகளுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என ஜ.செ.க. தலைவர் லிம் குவான் எங் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
அப்படிப்பட்டவர்கள் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகும் அவ்வாறே நடந்து கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி என்ற அவர் நேர்மையான கோட்பாடுகளை விட்டுக்கொடுக்கத் தாங்கள் தயாராய் இல்லை என்று கூறினார்.
அதனால் ஏற்படும் விளைவுகளை தாங்கள் சந்திக்கத் தயார் என்று அவர் குறிப்பிட்டதானது ஜ.செ.க.வின் உறுதியான நிலைப்பாட்டையே காட்டுகிறது.
இரண்டு ஆண்டுக்கால பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாய் இருந்த அஸ்மின், ஸுரைடா, சைஃபுடின், மகாதீர் மற்றும் சந்தரக்குமார் போன்றோர் மட்டுமின்றி முஹிடின் தலைமையிலான பெர்சத்து கட்சியையும் சேர்த்துத்தான் அவர் இப்படி சாடுகிறார் என்பது நன்றாகவே புலப்படுகிறது.
இதற்கிடையே பக்காத்தான் கூட்டணியுடன் முக்கிய தோழமைக் கட்சியாக விளங்கிய ஷாஃபி அப்டாலின் வாரிசான் அந்நிலைப்பாட்டிலிருந்து விலகி தற்போது சுயமாகச் செயல்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்த ஷாஃபி தேர்தலுக்கு முன் யாருடனும் கூட்டுச் சேரப்போவதில்லை என்பதை இதன் வழி கோடிக் காட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு முடிவானது, வாக்காளர்களை பகடைக்காய்களாக்கி சுயநல அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
பிரதமர் பதவி மீது குறி வைத்துள்ளோரில் ஒருவரான ஷாஃபி, கொள்கைகளை அடமானம் வைத்து, தனது கட்சிக்கான பட்டம் பதவிகளை இம்முடிவின் வழி உறுதிப்படுத்தியுள்ளார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்ற சில தொகுதிகளில் இம்முறை தனது வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் தயார் செய்து வரும் வாரிசானின் முடிவு இக்கூற்றை மேலும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
பக்காத்தானின் மற்றொரு உறுப்புக் கட்சியான அமானா மட்டுமே ஜ.செ.க.வைப் போல இதுவரையில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அநேகமாக இவ்விரு கட்சிகள் மட்டுமே ஒரே கூட்டணியில் தேர்தலில் களமிறங்கும்.
இவற்றையெல்லாம் சந்தோசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அம்னோ, ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ எனும் நிலைப்பாட்டில் ஆட்சியை கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது.
ஆக பாரிசானை எதிர்த்துப் போட்டியிட வலுவானதொரு கூட்டணி அமையும் சாத்தியம் தென்படாத நிலையில், மக்களின் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும் இனவாத அரசியல் இருள் எப்போதுதான் நீங்கும் எனும் கேள்விக்கு இன்னமும் விடையைக் காணோம்.