நாட்டின் பிரதமராக வரத் துடிப்பவர்களும் – மலாய் அரசியலின் ஆதிக்கமும்

இராகவன் கருப்பையா – கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆக்ககரமான ஒரு தலைமைத்துவம் இல்லாமல் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது – சொல்லொன்னாத் துயரில் மக்கள் வாடுகின்றனர்.

தகுதியும் திறமையும் ஆற்றலும் உள்ள எத்தனையோ பேர் அரசாங்கத்திற்கு வெளியே இருந்து கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சுயநல வேட்கையில் சுகம் காணத் துடிக்கும் பலர் இன்னமும் நாட்டை நாசமாக்கிக்  கொண்டுதான் இருக்கின்றனர்.

‘ஜேக்பொட்’ அடித்த மாதிரி முஹிடின், சப்ரி, போன்றோர் கூட சுலபத்தில் பிரதமராகிவிட்டனர் எனும் சூழலில் உந்தப்பட்டு, அப்பதவி மீது குறி வைத்து பெரிய பட்டாளமே தற்போது வரிசை பிடித்து நிற்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை.

ஆனால் நம் நாடு இந்த அளவுக்கு வீழ்ச்சி காண்பதற்குக் காரணமாக இருந்த 3 முன்னாள் பிரதமர்களும் மீண்டும் அரியணையில் அமரத் துடிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்குப் பிரதமராக இருந்த மகாதீர் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்  என்பது உண்மைதான். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் நாடு மேம்பாடுக் காண்பதற்கு அடிப்படை வேலைகளை செய்துள்ளார்.

அதே சமயத்தில் அவருடைய ஆட்சிக் காலத்தின் போதுதான் சமய, இன பாகுபாட்டிற்குப் பெருமளவில் உரமூட்டப்பட்டது. மதவாதம் தீவிரமடைந்தது. மதவாத, இனவாத அரசியல் தங்கு தடையின்றி துளிர்விடத் தொடங்கியது என்று கூடச் சொல்லலாம்.

அந்தக் காலகட்டத்தில்தான் அவருக்கு நெருக்கமான எண்ணற்றத் தொழிலதிபர்கள் செல்வந்தர்களானார்கள் என்று நம்பப்படுகிறது.

பிறகு 2018ஆம் ஆண்டில் 2ஆவது முறையாக அவர் மீது முழு நம்பிக்கை வைத்து நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு அவர் எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகம் செய்தார் என்பது மிகவும் கசப்பான ஒரு வரலாறு.

இப்படிப்பட்ட அவர் பெஜுவாங் எனும் புதிய கட்சியொன்றைத் தொடக்கியுள்ளதோடு மீண்டும் பிரதமர் பதவியில் அமர எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

உலகின மிகப் பெரிய மேகாத் திருட்டு என அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முத்திரைக் குத்தியுள்ள 1MDB விவகாரத்தில் சிக்கியுள்ள நஜிப் நிலைமையும் அப்படித்தான்.

பிரதமராக இருந்த போது, அந்த ஊழல் விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியவர்களைத் தயவு தாட்சணியம் இல்லாமல் பதவியில் இருந்து தூக்கியெறிந்த சம்பவங்கள் ஒன்றா இரண்டா!

பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்து இரண்டே நாள்களில் தனது மனைவி ரோஸ்மாவோடு தனியார் விமானம் ஒன்றில் வெளிநாட்டுக்குக் கிளம்ப இருந்த அவரை புதிய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது.

விடுமுறையில் செல்வதாக அவர் காரணம் கூறிய போதிலும் பக்காத்தான் அரசாங்கமோ பொது மக்களோ அதனை ஏற்கத் தயாராய் இல்லை.

இதற்கிடையே 1MDB விவகாரத்தினால் நாடு தற்போது மிகப் பெரியக் கடனில் சிக்கியுள்ளதும் எல்லாரும் அறிந்த ஒன்றே. அவருக்குத் தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, ‘தேசிய அவமானம்’ என்று கூட நஜிபை வர்ணித்தார்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக வலம் வரும் அவர், பிரதமர் சப்ரியைவிட அதிகம் புகழ்பெற்றுத் திகழ்வதோடு, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற இரவு பகலாகப் பாடுபடுகிறார்.

நாட்டின் மிகக் குறுகிய காலப் பிரதமராக இருந்த முஹிடின் செய்த துரோகத்தையும் மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

பிரதமராகிவிட வேண்டும் எனும் வெறித்தனமான ஆசையில் பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்து கொல்லை புறமாக வந்து பதவியில் அமர்ந்த அவர் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் நிலைத்தார்.

அந்த ஒன்றரை ஆண்டுக்காலம் முழுவதையும் தமது பதவியைத் தற்காத்துக் கொள்வதிலேயே அவர் செலவிட்டார் என்றால் அது மிகையில்லை.

அவசர அவசரமாக ஆட்சியமைத்த அவர் கொஞ்சம் கூட தகுதியோ திறமையோ இல்லாத பலரை அமைச்சர்களாக நியமித்து நாட்டை ஓரளவு குட்டிச் சுவராக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ஆக, மக்களால் வெறுக்கப்படும் இந்த மூவரும் துணிச்சலாக மீண்டும் அரியணையில் அமரத் துடிக்கின்றனர். அது தான் இந்த நாட்டின் அரசியல் பண்பாடு.

எப்படிப்பட்டத் திட்டங்களைத் தீட்டினாலும் அவர்களுடையத் தலையெழுத்து வாக்காளர்கள் கைகளில்தானே உள்ளது என்பதில் முழு உண்மை இல்லை. அது மலாய்காரர்கள் கையில் தான் உள்ளது. அதோடு அது எந்த அளவுக்குச் சுரண்டும் அரசியலுக்கு தீனிபோட முடியும் என்ற பண அரசியலில் உள்ளது.

அப்படியே இவர்களுடையக் கனவு நிறைவேறினாலும் யார்தான் அதற்குப் பொறுப்பு?