இக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள், அதிலும் குறிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் கொடுக்கப்படும் சாட்சியங்களைப் படிக்கும்போதும், ஊழல் தடுப்புத்துறை அடிக்கடி உயர் பதவிகளில் இருப்பவர்களை, இருந்தவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் காட்டும் உத்வேகம், நம்மை மட்டுமல்ல வெளியுலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊழல் மிகுந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று.
இன்று ஊழலைத் தடுப்பதில் கரிசனம் காட்டப்படுவது உண்மைதான். அதே சமயத்தில், ஊழல் நாடுகளின் தரவரிசையில் மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் மலேசியா இதுகாறும் சேர்க்கப்படாவிட்டாலும் அது ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்று என உறுதியாகிவிட்டது.
மலேசியா திவாலாகாது என்று சொல்லலாம். ஏனெனில், அதன் பொருளாதார அடித்தளம் பலமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும்போது பிற நாடுகள் திவாலாவதற்கு எந்தெந்த காரணங்கள் தலைவிரித்தாடினவோ அவை மலேசியாவில் காண இயலாது என்று நெஞ்சை உயர்த்தி சொல்ல முடியாது.
எனவே, நாட்டின் பொருளாதார அடித்தளம் பலமாக இருந்தாலும் அது தவறான அரசியல் அடக்குமுறைகளால், நடவடிக்கைகளால், ஊழல் மிகுந்த செயல்களால் திவாலாகலாம் என்கின்ற எச்சரிக்கை நிலவுவதைப் புறக்கணிக்கக்கூடாது.
இன்றைய அரசியல் நிலவரத்தைக் கண்ணுறும்போது அது உறுதியற்ற, தடுமாற்றத்தில் இயங்குகிறது. சுயநலத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களின் கைபாவைப் போல் நடுவண் அரசு ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமரும், துணைப்பிரதமரும் இன்றைய சிறுபான்மை ஆட்சிக்கு நெருக்கடி தருவதில் காட்டும் உற்சாகம், ஆர்வம் அறியாதார் யார்? அவர்களின் வழக்குகளில் ஊழல் மலிந்து கிடப்பதைக் காண முடிகிறது. எப்படி எல்லாம் ஊழல் செய்ய முடியுமோ, அதிகாரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்த முடியுமோ அந்தப் பாதையைப் பின்பற்ற துணிந்தவர்களைத்தான் காண்கிறோம். வழக்கு இன்னும் முடிவு பெறவில்லை. அதற்குள் அவர்கள் மீது கடுமையான பழி சுமத்தலாமா என்று கேட்போரும் உண்டு.
நாட்டின் நிர்வாக தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டால் அதன் பொறுப்பை ஏற்றவர்கள் தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது தலையாயப் பொறுப்பாகும்.
நிர்வாகத்தில் தவறு நேராதவாறு செயல்பட வேண்டியது அதிகாரப் பொறுப்பேற்றவர்களின் தட்டிக்கழிக்கக்கூடாத கடமையாகும். அந்தக் கடமையை உணராதவர்கள், மதிக்காதவர்கள் நாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் நாடு நலிவுறும் என்பதற்கு ஶ்ரீலங்கா ஓர் எடுத்துக்காட்டு.
பெரும்பான்மையினரின் காவலர்கள் என்று பறைசாற்றும் அரசியல் மோசடிக்காரர்களால் விரிக்கப்பட்ட இன, சமய, மொழி என்ற நஞ்சு நிறைந்த பிரச்சாரங்களை நம்பி மோசம் போனதுதான் ஶ்ரீலங்கா உணர்த்தும் பாடம். மலேசியா இதை ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகமொத்தத்தில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று சட்ட நியாயத்தை வலியுறுத்தலாம். ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்ன? அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்பதாகும். அதை மறக்கலாமா?
அரசமைப்புச் சட்டம் என்றால் அது ஒரு தரப்பினர்க்கு மட்டும் பாதுகாப்பு தருவதாக நினைப்பது தவறல்லவா? ஆட்சியில் இருக்கும்போது அவர்களின் கடமை நிர்வாகத்தில் நேர்மை, நியாயம், சட்ட ஒழுங்கு, நீதி யாவும் அனுசரிக்கப்பட வேண்டியவை.
அப்படிப்பட்ட நிலையில் நிர்வாகத்தின்போது பாழான ஊழலுக்குக் காரணிகளாக இருக்கக்கூடாது என்று மக்கள் நம்புவதில், எதிர்பார்ப்பதில் யாதொரு தவறும் இல்லையே!
மலேசியர்களிடமிருந்து, ஏன் உலகக் கண்களில் மண்ணைத் தூவி உண்மையை மறைக்கலாம். ஆனால், இந்த நாட்டின் கவுரவத்தைத் தற்காக்க சட்டத்துறை இருக்கிறது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்கும் பணி முடுக்கிவிட்டபோதிலும் அதை தடுக்க முடியவில்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்த்தும் ஊழல் எதிர்ப்புத் துறை இயங்குகிறது. சட்டத்தின்படி ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள ஊழல் எதிர்ப்புத்துறைக்கு உண்டு.
அவர்களின் விசாரணையின் முடிவை அரசின் தலைமை வழக்குரைஞரின் மேல் நடவடிக்கைக்குக் கொண்டு செல்லலாம். இந்த வழிமுறையை வைத்துப் பார்த்தால் உலகமே 1MDB பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அதனுள் நிகழ்ந்த ஊழலைப் பற்றி அறிந்திருந்தபோது அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்த அன்றைய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டுகள் பெருகி கொண்டிருந்த வேளை, ஊழல் தடுப்பு ஆணையம் தங்கள் விசாரணை தொகுப்பை முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் டான் ஶ்ரீ கனி பட்டேலிடம் சமர்ப்பித்தது.
அந்த விசாரணையின் அடிப்படையில் நஜீப் மீது சட்ட நடவடிக்கை எடுக்க துணிந்தவரைப் பதவியில் இருந்து நீக்கியது யாவும் எதைச் சுட்டுகிறது? “நெருப்பு இல்லாமல் புகை வருமா?” என்ற வாய்மொழி நமக்குத் தெரியாது அல்லவே!
கனி பட்டேலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் டான் ஶ்ரீ அப்பாண்டி. இவரின் 1MDB குறித்து நஜீப் யாதொரு குற்றமும் செய்யவில்லை என்ற முடிவு மலேசியர்களையும், வெளிநாட்டவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமல்ல ஊழலுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்ற வினாவும் எழுந்தது.
பல நாடுகளில் 1MDB தொடர்பான வழக்குகள் அந்தந்த நாடுகளில் தொடுக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது நஜீப் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆட்சி மாற்றமானது, மக்கள் தந்த தீர்ப்பு, அதாவது ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது தெளிவாயிற்று. வேலியே பயிரை மேய்ந்தால் வேலியை அகற்றுவதுதானே முறை. நியாயமும் கூட. அதுதான் நடந்தது.
நஜீப் மீது வழக்கு தொடுப்பதற்குக் காரணியாக இருந்தார் டான் ஶ்ரீ தோமி தோமஸ். இந்த வழக்கு ஆரம்பித்த வேளை, ஜனநாயகச் செயல்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தமது அறிக்கை ஒன்றில் அபாண்டி அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்தபோது முன்னாள் தலைமை வழக்குரைஞர் கனி பட்டேல், முன்னாள் பிரதமர் நஜீப் மீது ஊழல் குற்றப் பத்திரிக்கை தயாரித்திருந்த போதிலும், அபாண்டி 1MDB ஊழலுக்குத் துணையாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்பதை விளக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கிட் சியாங்கின் கூற்று அவதூறானது. எனவே, தமது கவுரவத்தைப் பாதித்துவிட்டது என்று கூறி வழக்கு தொடுத்தார் அபாண்டி. அவரின் வழக்கு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேல்முறையீடு செய்யலாம். அது அவரின் உரிமை. ஆனால், நாம் கவனிக்க வேண்டியது என்ன?
உலகமே நஜீப் மீது குற்றத்தைச் சுமத்தும்போது நம் நாட்டில் அவரின் நடவடிக்கைகள் குற்றமல்ல என்று நினைப்பவர்களின் மனநிலையை என்னவென்பது? தவறான முறையில் ஆட்சி நடத்தப்பட்டால், ஊழலுக்கு முதலிடம் வழங்கி, ஊழல்வாதிகளுக்குச் சட்டத்தின் வழி, அதிகாரத்தின் வழி புகலிடம் கொடுக்கப்படுகிறது என்ற பழிச்சொல்லுக்கு நாடு உட்படுத்தப்படுமே! அது நியாயமா?
2018ஆம் ஆண்டு மக்கள் தந்த நீதியை நிலைநாட்ட முயன்றவர்களைக் கவிழ்க்கும் துரோகச் செயலில் இறங்கியவர்கள், மீண்டும் மக்களின் ஆதரவைக் கோருவது ஆச்சரியம்தான்! அதே சமயத்தில், ஊழலைத் தங்களின் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள்.
மறுபடியும் மக்களை நாடுகிறார்கள் என்றால் மக்கள் ஏமாளிகள் என்ற நம்பிக்கைதான். பல ஆண்டுகளுக்கு முன்பு, அம்னோவின் பிரதான தலைவர்களில் ஒருவராகவும், நடுவண் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் காலஞ்சென்ற டான் ஶ்ரீ கிர் ஜொஹாரி. எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.
இன்று ஆளும் கட்சியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது லெபனான் நாட்டு பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது, “இறைவா திராட்சை தோட்டத்தைக் காவலாளியிடமிருந்து காப்பாற்று.” நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்றால் தவறா?