பொய்மையும் உண்மையும் – கி. சீலதாஸ்

இணையத்தளத்தின் வளர்ச்சி, அதன் பயன் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உண்மை நிலவரத்தை வெளிக்கொணர உதவும் அந்த விஞ்ஞானக் கருவி தவறான செய்திகள் பரவவும், பரப்புவதற்கு உதவுவதும் நமக்குச் சங்கடமான அனுபவத்தைத் தருகிறது. ஓர் அற்புதமான விஞ்ஞானக் கருவி தவறான செய்தி பரவலுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அவமதிக்கிறது.

கண்டுபிடிப்பின் உண்மை நோக்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் அறிவிலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில், விஞ்ஞானத்தின் மகிமையானது நன்மையைத் தருவதில் காட்டும் சிறப்பு அளப்பரிது. ஆனால், குரங்கின் கையில் பூமாலை கிடைத்தால் என்னவாகும் என்று விளக்க வேண்டியது இல்லை. ஏனெனில், தவறான காரணங்களுக்கு இணையத்தளத்தின் துணை ஓங்கி நிற்கிறது என்று துணிந்து சொல்லலாம். அதுதான் இப்பொழுது நடக்கிறது.

வரலாற்று உண்மைகள் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மை. அப்படிப்பட்ட உண்மைகளை வியாக்கியான மந்திரத்தின் வழி பலவிதமான முரண்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு விரிவுரையாளரும் தமக்கு ஏற்ற வழியில், மன விருப்பத்திற்கொப்ப வரலாற்று உண்மைக்கு அர்த்தம் கற்பிப்பது வியப்பல்ல.

இரண்டு துணுக்குகள் என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அனுப்பியவர்கள் சிறப்பான கல்வி பெற்றவர்கள், நன்கு ஆய்ந்துப் பார்த்து கருத்து சொல்லக்கூடியவர்கள். அந்தத் துணுக்குகள் இணையத்தளத்தில் பவனி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் பரவல் பலரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவை வழங்கும் சாரம் பலன் தரக் கூடியவை என்ற கருத்தும் பரவுகிறது. துணிவோடு பரப்புகிறார்கள். வரலாற்று உண்மைகளை அறிய விரும்பாதார் யார்?

ஆங்கில வரலாற்றாசிரியர் வில்லியம் ஸ்டப் (1825-1901) கருத்தின்படி “வரலாறு ஒரு பொய் பொதி”. யாம் கேட்ட கேள்விக்கான முழுமையான பதில் இருக்காது என்றாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஏன் தெரியுமா? சமயவாதிகள் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பைச் சமயவாதிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாததும் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டமாகும்.

மனிதனை இறைவன் படைத்தான் என்ற சமயவாதிகளின் நம்பிக்கையை விஞ்ஞானிகள் ஏற்காதபோது, சார்ல்ஸ் டார்வினின் கண்டுபிடிப்பான மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதைச் சமயவாதிகள் ஏற்க மறுக்கின்றனர்.

இந்த சர்ச்சை ஒரு பக்கமிருக்க, ஒரு சில விஞ்ஞானிகள் வேறுவிதமான கருத்தையும் வெளியிட தயங்கவில்லை. அதாவது, இந்தக் காலத்து மனிதப் பிறவியின் தோற்றம் கணக்கிட முடியாத பல கோடி ஆண்டுகளாகிவிட்டாலும் அதற்கு முன்னர் நம்மை விட அறிவில் விஞ்சிய மனிதர்கள் இந்த வையகத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் கண்டுபிடிக்காதது எதுவும் இல்லை.

மனித வாழ்க்கைக்குப் போதுமானவைத் திருப்திபடுத்தும் வகையில் இருந்தன. ஒரு காலகட்டத்தில் இவ்வுலக வாழ்க்கை போதும் என்று வேறொரு உலகிற்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட்டனர். அவர்கள்தான் துளித்துளியாக நம் விஞ்ஞான அறிவு வளம் பெற எங்கிருந்தோ உதவுகின்றனர். எனவே, புது கண்டுபிடிப்பு என்பது எல்லாம் வெறும் புரட்டு. பழையவைதான் இப்பொழுது உயிர்பெற்றுள்ளன.

மனிதன் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக அஞ்சியும், அறிவிலியாகவும் வாழ்ந்து விட்டான். இப்பொழுது விஞ்ஞானம் நல்வழி காட்டுவதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அது தவறான காரணங்களுக்கு மனிதனைத் தொடர்ந்து வேதனைப்படுத்த உதவும் கருவியாகவும் மாறிவிட்டதை ஏனோ நாம் சிந்திப்பதில்லை. பொய்யான தகவல்கள் எவ்வாறெல்லாம் பரவுகிறது என்பதைப் பார்ப்போம்.

எனக்கு வந்த முதல் துணுக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்ததாக ஆரம்பிக்கிறது. ஒரு நாள் ஓர் ஏழை உழவர் தாம் தங்கியிருந்த இடத்தின் அருகே இருந்த சதுப்பு நிலத்திலிருந்து அபயக் குரல் கேட்டது. உடனே சென்று பார்த்தார். இடுப்பளவு ஆழத்தில் சிறுவன் ஒருவன் சதுப்பு நிலத்தில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து பரபரப்படைந்தவர் சிறுவனை ஒருவகையாகக் காப்பாற்றினார். பையனும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மறுநாள் சொகுசு மோட்டார் வாகனத்தில் வந்து இறங்கினார் ஆடம்பர உடைகளை அணிந்திருந்த பிரபு ஒருவர். அவர் உழவரிடம், “நீர் என் மகனைக் காப்பாற்றுனீர். நன்றி! நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம்!” என்று வழங்கப்பட்ட உதவியை ஏற்க மறுத்தார் அந்த உழவர். அப்போது உழவரின் மகன் வீட்டு வாயிற்படியில் வந்து நின்றான். அவனைப் பார்த்து, “இது உன் மகனா?” என்று வினவினார் பிரபு. “ஆமாம்!” என்றார் உழவர். “நாம் உடன்படிக்கை ஒன்று செய்து கொள்வோம். என் மகன் எந்த அளவு கல்வி பெறுகிறானோ அந்த அளவு உன் மகன் கல்வி பெற உதவுவேன். நாம் இருவர் பெருமைப்படுவோம்” என்று கூறினார்.

அந்த உழவரின் மகன் தான் சர் அலெக்சாந்தர் ஃபிளெமிங். பிற்காலத்தில் பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்தவர். இந்த மருந்து பல தொற்று நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவியது. இந்தக் கண்டுப்பிடிப்புக்காக நோபெல் பரிசும் பெற்றார் அலெக்சாந்தர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பிரபுவுக்கு நிமோனியா தாக்கியதும் அவரைக் காப்பாற்ற உதவியது பெனிசிலின். அந்தப் பிரபுவின் பெயர் சர் ரெண்டொல்ப் சர்ச்சில். அவரின் மகன் தான் இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனின் பிரதமராகச் சேவையாற்றிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்.

இந்தச் சம்பவம் உண்மை சம்பவமா என்பதை அறிய முற்படும்போது இது வெறும் கட்டுக்கதை என்பது நிரூபணமாகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலின் வாழ்க்கை வரலாற்றசிரியர் சர் மார்ட்டின் கில்பர்ட் இந்தத் துணுக்கில் உண்மையில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு புறமிருக்க வின்ஸ்டன் தம் தந்தை போல் வழக்குரைஞராக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் சட்டம் பயில வேண்டுமானால் லத்தீன் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும். வின்ஸ்டன் லத்தீன் மொழியில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

இதுபோன்று பிரெஞ்சு எழுத்தாளர் ஷாக்க அட்டாலி தமது நூலில் சொன்ன கருத்தைத் திரித்து எதிர்காலத்தில் மக்கள் தொகை குறைப்புக்குப் புது வழிகள் காணப்பெறும் எனவும் அதில் நோய்களை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்ததாக விமர்சிக்கப்பட்டது. அது சுத்த பொய்.

இதுபோன்ற கட்டுக்கதைகள் நிறைய அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமயவாதிகளும், அரசியல்வாதிகளும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதில் சளைக்காதவர்கள். அதற்குத் துணையாக இருப்பது, இயங்குவது இணையத்தளம், முகநூல், புலனம் போன்ற சாதனங்களாகும்.

அரசு பொய் சொல்லக்கூடாது என்பது நம்பிக்கை. ஆனால், அரசும் அதை இயக்குபவர்களும் பொய்யுரைப்பதில் பலத்த நம்பிக்கை உடையவர்கள் என்பதை இன்றைய அரசியல்வாதிகள் வெளிப்படுத்துகின்றனர். மக்களை ஏமாற்றுவதில் காட்டப்படும் உற்சாகம் அவர்களின் பொது அறிவு வளர்ச்சியின் வளமாக்குவதில் காண முடியவில்லை.

அரசு சொல்லும் பொய்யை மறைக்க உதவுவது அரசு அலுவலக இரகசிய சட்டம். அரசின் பொய்யை வெளிப்படுத்தினால் குற்றமாகும். கடுமையான தண்டனைக்கு ஆளாகலாம். எந்த ஒரு மடத்தனமானவனால் உண்மையைச் சொல்ல முடியும்? ஆனால், பொய் சொல்வதற்கு நல்ல திறமை தேவைப்படும் என்கிறார் ஆங்கில நாவலாசிரியர் சமுவேல் பட்லர் (1835-1902). அதுதான் இன்றைய உண்மையான நிலவரம்.