இராகவன் கருப்பையா – இந்நாட்டில் காலங்காலமாக இருந்துவந்த ஐக்கியத்தை உடைத்து இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வருவது சுயநலமிக்க அரசியல்வாதிகள்தான்.
இப்படிப்பட்ட ஒரு போக்கை முன்னெடுத்தால்தான் அரசியலில் அதிக அளவில் சுயலாபம் அடைய முடியும் எனும் நிலைப்பாட்டில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சன்னம் சன்னமாக நிலைமையை அவர்கள் மோசமாக்கி சுகம் காண்கின்றனர் என்று கூட சொல்லலாம்.
ஆனால் கடந்த பொதுத் தேர்தலில் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒன்று திரண்ட மக்கள், இன, மத ரீதியான அரசியலை தகர்த்தெறிந்து பல்லினங்களையும் பிரதிபலிக்கும் அரசாங்கத்தை அமைக்க வகை செய்தனர்.
எனினும் அந்த நல்ல விசயத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சில இனவாத அரசியல்வாதிகள், மக்களின் அபிலாஷைகளையும் புறந்தள்ளி, மலாய்க்காரர்கள்தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று சூளுரைத்து, கொல்லைப் புறமாக வந்து ஆட்சியைக் கவிழ்த்தது உலகறியும்.
இருந்த போதிலும் பல்லினங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள்தான் இனி நாட்டிற்குத் தேவை எனும் அறைகூவல்களும் இதே காலக் கட்டத்தில் வலுக்கத் தொடங்கிவிட்டன.
நிலைமை இவ்வாறு இருக்க, மலாய்க்காரக் கட்சிகளை மட்டுமே உள்ளடக்கிய கூட்டணி ஒன்றை அமைத்து அரசாங்கத்தைக் கைப்பற்றப் போவதாக அறிவித்துள்ளார் முன்னாள பிரதமர் மகாதீர்.
தனது ‘பெஜுவாங்’ கட்சியோடு, ‘பெர்ஜாசா’ எனும் ஒரு இஸ்லாமியக் கட்சி, ‘புத்ரா’ எனப்படும் ஒரு பூமிபுத்ரா கட்சி மற்றும் ‘இமான்’ எனும் ஒரு இந்திய – முஸ்லிம் கட்சி ஆகியவற்றோடு சில அரசு சாரா இயக்கங்களையும், ‘கெராக்கான் தானா ஆயர்’ எனப்படும் கூட்டணி ஒன்றில் இணைத்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தம் 120 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் ஆட்சி அமைக்கப் போவதாகவும் அவர் பேசியிருப்பது விந்தையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
அவருடையத் தலைமையிலான பெஜுவாங் கட்சியே அண்மையில் நடந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் அரவணைத்துள்ள குட்டிக் கட்சிகளின் நிலை எம்மாத்திரம் எனும் ஐயப்பாடு எழுவதில் வியப்பில்லை.
அக்கட்சிகளில் புகழ் பெற்ற அரசியல்வாதிகளோ திறமையுள்ளவர்களோ இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா’, எனும் சொற்றொடரைத் தவிர வேறொன்றும் நமக்கு சிந்திக்கத் தோன்றவில்லை.
இதே போலத்தான் கடந்த 2017ஆம் ஆண்டில் அம்னோவிற்கு எதிராக மற்றொரு மலாய்க்காரக் கட்சி வேண்டும் என்று சொல்லி பெர்சத்து கட்சியை அவர் தொடக்கினார்.
பிறகு 2020ஆம் ஆண்டில் பக்காத்தான் ஆட்சி கவிழ்வதற்கு வித்திட்ட அவர் பெர்சத்துவில் இருந்தே தூக்கி எறியப்பட்டார். நீதிமன்றம் வரை சென்றும் கூட அவருக்கு சாதகமாக ஒன்றும் நடக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெஜுவாங் எனும் மற்றொரு மலாய்க்காரக் கட்சியைத் தோற்றுவித்தார்.
ஒவ்வொரு முறையும் மலாய்க்காரர்களின் நலன்களை மட்டுமே முன்நிறுத்தி காய்களை நகர்த்தி வரும் அவர் தனது நடவடிக்கைகளினால் மலாய்க்காரர்களையும் பிளவுபடுத்துகிறார் என்பதுதான் உண்மை.
முதல் தவணையில் 22 ஆண்டுகளும் இரண்டாவது தவணையில் 22 மாதங்களும் பிரதமராக இருந்த அவருடைய புகழ் தற்போது படு வீழ்ச்சி கண்டுள்ளதை அவர் அறிந்துள்ளாரா என்று தெரியவில்லை. மற்ற இனத்தவர் மட்டுமின்றி மலாய்க்காரர்களே அவரை ஓரளவு ஓரங்கட்டத் தொடங்கிவிட்டனர்.
ஒரு காலக்கட்டத்தில் மிகவும் மரியாதைக்குரியத் தலைவராகப் போற்றி புகழப்பட்ட அவர் இனங்களைத் தொடர்ந்து பிளவுபடுத்திக் கொண்டே இருப்பது மிகவும் வேதனையான ஒன்று.
பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்து, மலாய்க்கார ஆட்சிதான் வேண்டும் என்று அங்குமிங்கும் தாவிய மானங்கெட்ட அரசியல் தவளைகளின் நடவடிக்கைளினால் கூட மகாதீர் உந்தப்பட்டிருக்கலாம்.
இருந்த போதிலும், சுயநலத்தைக் கைவிட்டு, இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்பெறச் செய்யதே வயதுடைய ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகு!