பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் நிலை என்னவாகும்!

இராகவன் கருப்பையா- தீவிரச் சமயக் கோட்பாடுகளை மட்டுமே ஆயுதமாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் முஸ்லிம் அல்லாதாரின் சுதந்திரம் இந்நாட்டில் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில் அமரக் கடந்த 2020ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கொல்லைப் புறமாக வந்து ஆட்சியமைத்த சில அரசியல் தவளைகளுடன் இணைந்து கொண்டதால் அவ்வாய்ப்பு அமைந்தது.

ஏதோ சுயமாக வந்து நேர் வழியில் ஆட்சியைப் பிடித்து விட்டதைப் போல இந்த இரண்டரை ஆண்டு காலமாக அக்கட்சியினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் ஆஃப்கானிஸ்தானின் ஆட்சிதான் நமக்கு ஞாபகம் வருகிறது.

இஸ்லாத்தைத் தற்காக்கும் போர்வையில் இந்நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதாரின் கலை, கலாச்சாரம், பழக்க வழக்கங்களை வெறுமனே சீண்டிக் கொண்டிருப்பதை அவர்கள் பொழுது போக்காகக் கொண்டிருப்பதைப் போல் தெரிகிறது.

ஆகக் கடைசியாக அவர்கள் கிளப்பிய சர்ச்சை ஜெர்மனியைப் பாரம்பரியமாகக் கொண்ட ‘ஒக்டோபர் ஃபெஸ்ட்’ எனப்படும் ‘பீர்’ மதுபான விழாவாகும்.

சுமார் 212 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியின் மூனிக் நகரில் தொடங்கிய இந்தக் கலாச்சாரம் செப்டம்பர்-ஒக்டோபர் மாதங்களில் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்களுக்கு உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டிலும் ஆங்காங்கே ஒரு சில மதுபான விடுதிகளில் இக்கலாச்சாரம் சிறிய அளவில் அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்திருவிழா நல்லிணக்கத்திற்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதால் மலேசியாவில் அது தடை செய்யப்பட வேண்டும் என்று சமய விவகாரங்களுக்கான அமைச்சர் இட்ரிஸ் கடந்த மாதம் அறைகூவல் விடுத்தார். அக்கட்சியின் மகளிர் அணியும் இதே கருத்தை வலியுறுத்துகிறது.

மது பழக்கத்தை நாம் ஊக்குவிக்கவில்லை என்ற போதிலும், அது தொடர்பான விழா அவரவரின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதால் பாஸ் கட்சி தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக் கூடாது.

பாலஸ்தீனில் கூட அது அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடப் படுகிறது என்று எடுத்துரைத்த மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங், முஸ்லிம் அல்லாதாரின் உரிமைகளைப் பறிப்பதை விடுத்து நாட்டில் மலிந்து கிடக்கும் ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் முனைப்புகாட்ட வேண்டும் என்று கடுமையாகச் சாடினார்.

முஸ்லிம்களுக்குச் சேவையாற்றுவதில் மட்டுமே இட்ரிஸ் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மற்றவர்களின் நிகழ்வுகளில் அவர் தலையிடக்கூடாது என ரவுப் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரியும் கூடக் கண்டித்தார்.

முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையில் நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் இட்ரில் தொடர்ந்தார்போல் அறிக்கைவிட்டு வருகிறார் என ஜ.செ.க.வைச் சேர்ந்த அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாகக் கடந்த ஜூன் மாதத்தில், ‘போன் ஒடோரி’ எனும் ஜப்பானியக் கலாச்சார விழா இஸ்லாத்திற்கு எதிரான அம்சங்களைக் கொண்டுள்ளதால் அதில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என இட்ரிஸ் தடை வதித்ததைத்தான் தெங்கு ஸுல்புரி சுட்டிக் காட்டினார்.

மலாய்க்காரர்கள் அவ்விழாவில் கலந்து கொள்வது தவறில்லை எனச் சிலாங்கூர் சுல்தான்  கருத்துரைத்த போதிலும் பாஸ் கட்சியினர் பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டில் ஷாரியா சட்டங்களை வலுப்படுத்தும் அரசாங்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக மற்ற சமயங்களிள் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு பிற்பகுதியில் பாஸ் கட்சியின் துணையமைச்சர் அஹ்மாட் மர்ஸுக் வெளியிட்ட அறிவிலித்தனமான கருத்தையும் நாம் மறக்கலாகாது.

அக்கட்சியின் உதவித்தலைவரான கெடா மந்திரி பெசார் சனுசி கடந்த ஆண்டு மாநிலத் தைப்பூச விடுமுறையை ரத்து செய்தது மட்டுமின்றிக் கோயில் உடைப்புகளுக்கும் ஆதரவாக இருந்தார்.

தலிபான் ஆட்சியைப் போல இப்படிப்பட்ட காலங்கடந்த வழிமுறைகளை மற்றவரிடத்தில் புகுத்துவதைத்தான் இவர்கள் விரும்புகின்றனர்.

மலேசியா போன்ற பல்லினங்களைக் கொண்ட ஒரு நாட்டில் மக்களின் தலைவிதியை முடிவு செய்யும் அதிகாரத்தில் இப்படிப்பட்டவர்கள் இருந்தால் நிகழ்காலத்திற்கு ஒவ்வாத கொடூரங்கள் சர்வச் சரணமாக அமல் செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்நாட்டில் இனவாதத்தைத் தூண்டி அரசியல் இலாபம் தேடும் மலாய்க்காரக் கட்சிகளின் மத்தியில் ஒரு படி தாண்டி, தீவிர மதவாதத்தையும் முன்நிறுத்தி அரசியல் ஆதாயம் காணத் துடிக்கும் பாஸ் கட்சி பிற இனத்தவரின் உரிமைகளைப் பறிப்பதில் சிஞ்திற்றும் தயங்காது.

எனவே அடுத்த பொதுத் தேர்தலில் இந்தக் கட்சிக்கு நேரடியாகவோ அது சார்ந்திருக்கும் கூட்டணிக்கோ வாக்களித்தால் இந்நாட்டில் முஸ்லிம் அல்லாதாரின் வாழ்வியல் எந்த அளவுக்கு ஒடுக்கப்பட்டு முடக்கப்படும் என்பதனை எல்லாருமே மிகக் கவனமாகச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.