இராகவன் கருப்பையா- ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர்களை சரமாரியாக மரியாதைக் குறைவாக வசைபாடியுள்ளது ஒரு மூத்த அரசியல் கட்சியானா மஇகா-வின் தோற்றதிற்கு ஏற்புடைய செயலல்ல, மாறாக அது ஒரு படி மண்ணை தன் தலையில் போட்டு கொண்டது போலாகிவிட்டது.
வார இறுதியில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில் ம.இ.கா. மாநாட்டில் பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர்களை ‘அவன், இவன்’, என கண்ணியக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளன.
‘எதிர்க்கட்சிக்காரனுங்க ஒன்னு ரெண்டு பொய்யா சொன்னானுங்க?’ ‘இன்னமும் பொய் சொல்லிக்கிட்டுதான் இருக்கானுங்க,’ என சற்று மூர்க்கத்தனமாக அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது.
ஒரு கட்சியின தேசியத் தலைவர் இப்படி தன்மூப்பாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உள்பட பல நிலைகளில் உள்ள பொது மக்கள் கடிந்து கொண்டுள்ளனர்.
சிறந்த கல்விமான்களையும் முதிர்ச்சியான அரசியல்வாதிகளையும் உள்ளடக்கிய எதிர்க்கட்சியினரை தரக்குறைவாக மரியாதையின்றி பேசுவது பண்பான ஒரு செயல் இல்லை என அவர்கள் சாடியுள்ளார்கள்.
பொது மேடையில் சிறிதளவும் பண்பாடு இல்லாத வார்த்தைகளை பயன்படுத்துவது அவருடையத் தன்மையையே புலப்படுத்துகிறது என பலர் தங்களுடைய சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ம.இ.கா.வின் ஒரே அமைச்சர் அதிக அளவிலான சமுதாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வரும் வேளையில் பக்காத்தானின் 4 அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த 4 அமைச்சர்களும் நம் சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயலாற்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அனைவருமே பல்லினங்களின் பிரதிநிதிகளாக அமைச்சரவையில் இருந்தனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்தவர்கள் வெறும் 22 மாதங்களே ஆட்சி புரிந்தவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது அசிங்கமாகவும் அவமானமாகவும் உள்ளது என விக்னேஸ்வரனை சமூக வலைதளங்களில் பொது மக்கள் சாடுகின்றனர்.
மலேசிய இந்தியர்களில் 75 விழுக்காட்டினரின் ஆதரவை ஈர்க்க ம.இ.கா. எண்ணியுள்ளது என அவர் சூளுரைத்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு தலைவர் எந்த அடிப்படையில் 75 விழுக்காட்டைப் பற்றி பேசுகிறார் என்ற கேள்விவும் எழுகிறது.
மற்றவர்களைத் தராதரம் இல்லாமல் தாக்கிப் பேசித்தான் அந்த இலக்கை அடைய வேண்டும் எனும் அவசியமே இல்லை என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
கொல்லைப் புறமாக வந்து ஆட்சியமைத்தவர்களின் தயவில் தொத்திக் கொண்டிருக்கும் அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் இருப்பார்களா என்று கூட தெரியாது. அத்தகைய சூழலில் இப்படிப்பட்ட அகங்காரமானப் பேச்சு முற்றிலும் தேவையற்ற ஒன்று எனலாம்.
ம.இ.கா. கடந்த பொதுத் தேர்தலில் இழந்த அதன் புகழையும் கௌரவத்தையும் கொஞ்சமாவது மீட்டெடுக்க வேண்டுமானால் அதன் தலைவர்கள் மேடைகளில் முழக்கமிடும் போதும் புலனத்தில் வீர வசனம் பேசும் போதும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை உதிர்க்காமல் மிகவும் கவனமாகப் பேச வேண்டும்.
ஏனெனில் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டுள்ள நம் சமூகத்தினர் அக்கட்சியின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இப்படி தான்தோன்றித்தனமாக பேசித்திரிந்தால் தங்களுடையக் கட்சிக்கு எவ்வகையிலும் அது சாதகமாக அமையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
மாறாக நிலைமை மேலும் மோசமாகக் கூடிய வாய்ப்புதான் அதிகமாக உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
எது எப்படியாயினும் எதிர்க்கட்சியினரை சகட்டு மேனிக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வசைபாடுவது இந்தியர்களை பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சியின் தேசியத் தலைவருக்கு அழகல்ல, அது அநாகரிகம் என்பதை உணரவேண்டும்.