நாட்டின் ஊழல் அவலத்திற்கு முஸ்லிம் அல்லாதார் காரணமா!

இராகவன் கருப்பையா –நம் நாட்டில் ஊழல் நிலை தற்போது எந்த அளவுக்கு வரலாறு காணாத வகையில் மலிந்துக் கிடக்கிறது என்பது வெள்ளிடை மலை. அது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மில்லியன் எனும் நிலை தாண்டி தற்போது பில்லியன் கணக்கில் மக்கள் பணத்தை மூட்டை மூட்டையாகக் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டார்கள் அரசியல்வாதிகளும் அவர்களுடைய சகாக்களும்.

புதையலைப் போல தோண்டத் தோண்ட எண்ணற்ற ஊழல் சம்பவங்கள் குறித்து அன்றாடம் நமக்குத் தகவல் வந்த வண்ணமாகவே உள்ளன.

இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களை யார்தான் இவ்வளவு துணிச்சலாகச் செய்கின்றனர் என்று பள்ளிப் பிள்ளைகளுக்குக் கூட தெரியும்.

ஆனால் இதன் தொடர்பாக  பாஸ் கட்சித் தலைவர் ஹாடி வெளியிட்ட அறிவிலித்தனமான ஒரு அறிக்கை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் மலாய்க்காரர் அல்லாதார்தான் என்று சொன்ன அவருடைய சிந்தனையாற்றலை எண்ணி சினமடைவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை.

காலங்காலமாக இப்படித்தான் நிறைய விசயங்களை அவர் கோமாளித்தனமாக பேசி வருகிறார் எனும் போதிலும் அரசியல் ஆதாயத்தை முன்னிறுத்தி இனத்துவேசக் கருத்துகளை மிக தாராளமாக உமிழும் அவருடையப் போக்கு கண்டிக்கத்தக்கது.

நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் சீர்குலைப்பவர்களில் பெரும் பகுதியினர் மலாய்க்காரர் அல்லாதாரும் முஸ்லிம் அல்லாதாரும்தான் என முரட்டுத்தனமாக அவர் குற்றஞ்சாட்டினார்.

எதன் அடிப்படையில் இவ்வாறெல்லாம் அவர் உளறுகிறார் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் சீரான சுய சிந்தனையில்தான் அவர் பேசுகிறாரா என்று கூட நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

அப்படியென்றால் முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அம்னோ தலைவர் அஹமட் ஸாஹிட் போன்றோர் தற்போது தினம்தோறும் நீதிமன்றம் ஏறி இறங்குவதற்கு மலாய்க்காரர் அல்லாதார்தான் காரணம் என்று அவர் சொல்ல வருகிறாரா?

மலாய்க்காரர் அல்லாதார் தவறு செய்துவிட்டு ஒன்றும் அறியாத நஜிப், ஸாஹிட் முதலியோரை மாட்டிவிட்டுள்ளார்களா? வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!

அவருடையக் கட்சி சார்ந்திருக்கும் ஆளும் கூட்டணியில் அவர்களோடு ஒட்டி உறவாடும் ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் வழக்கம் போல் மௌன விரதம்தான்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இல்லையென்றால் எப்போதுதான் அவர்களுக்கு ரோசம் வரும் என்றே தெரியவில்லை. ‘தங்க ஊசி என்பதால் கண்களைக் குத்திக் கொள்ள முடியுமா?’

இதுபோன்ற மூர்க்கத்தனமான இனத்துவேசக் கருத்துகளுக்கு உடனுக்குடன் கண்டனம் தெரிவிக்கத் துணிச்சலில்லாமல் இருப்பதுதான் அவர்களுடைய தான்தோன்றித்தனத்திற்கு உந்துதலாக அமைந்துவிடுகிறது.

பினேங் மாநில துணை முதல்வர் ராமசாமி உள்பட ஜ.செ.க.வைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள்தான் ஹாடியின் அநியாயப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேர்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் முஸ்லிம் தலைவர்கள்தான் ஆட்சிக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என கடந்த 2019ஆண்டில் அவர் உமிழ்ந்த கண் மூடித்தனமானக் கருத்துகளை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

கிராமப் புறங்களில் உள்ள பாமர மக்களைக் கவருவதற்காகவே இப்படிப்பட்ட மட்டமானக் கருத்துகளை அரசியல் நோக்கத்துடன் அவர் பேசி வருகிற போதிலும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர் எனும் வகையில் அவருடைய தரங்கெட்ட போக்கு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உதவாது.

மலாய்க்காரர்களின் அரசியல் ஆதிக்கத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் இது போன்ற குறுகிய மனப்பான்மையுடைய தலைவர்களால்தான் நாட்டில் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது.

அதனை உணராமல் இதர இனத்தவரையும் முஸ்லிம் அல்லாதாரையும் அவர் குறை சொல்வது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத பிற்போக்கு சிந்தனையுடைய ஒரு வீண் பேச்சாகும்.