பக்காத்தான் பிடித்தது சுறா, பாரிசான் பிடித்தது நெத்திலி

இராகவன் கருப்பையா –கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட புதுவிதமான ஒரு உற்சாக உணர்வு தற்போது மீண்டும்  பிறந்துள்ளதைப் பரவலாகக் காண முடிகிறது.

அன்றைய தினம் பாக்காத்தான் ஹராப்பான் அடைந்த மகத்தான வெற்றியானது ஊழலற்ற நல்லாட்சிக்காக ஏங்கித் தவித்த வெகு சன மக்களுக்கு ஒரு புதிய விடியலைக் கொணர்ந்தது.

அன்று வரையில், 60 ஆண்டுகளுக்கும் மேல் இரும்புப் பிடியாக, கேட்பாரற்று, தான்தோன்றித்தனமாக நாட்டை ஆண்டு வந்த பாரிசான் அரசாங்கம் ஊழலையும் இனவாதத்தையும் நாட்டு நிர்வாகத்தின் கலாச்சாரமாகவே ஆக்கிக் கொண்டது.

தனது ஆட்சி காலத்தின் போது ஊழலுக்கு எதிராக அந்த அரசாங்கம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. ஊழல்வாதிகளைக் கண்டித்தார்கள், நடவடிக்கை எடுத்தார்கள், நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள், தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆனால் அவை அனைத்துமே ஏறத்தாழக் கண் துடைப்பைப் போன்ற ஒரு ‘டிராமா’தான். ஏனெனில் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஏற்றப்பட்டவர்கள் எல்லாருமே வெறும் ‘நெத்திலிகள்’தான்.

மில்லியன் கணக்கிலும் பில்லியன் கணக்கிலும் மக்கள் பணத்தை அப்பட்டமாகச் சூறையாடிய ‘சுறாமீன்கள்’ தீண்டப்படவே இல்லை. சட்டத்தால் அவர்களை நெருங்க முடியவில்லை.

ஆட்சி அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி வரலாறு காணாத அளவுக்குத் திருட்டுச் சம்பவங்களை அரங்கேற்றித் தொடரான ஊழல்களுக்கு அவர்கள் மேலும் உரமூட்டினார்கள்.

இத்தகைய அநியாயங்கள் யாவும் பொது மக்களுக்கோ, ஊழல் தடுப்பு ஆணையத்திற்கே காவல் துறைக்கோ, சட்டத்துறை அலுவலகத்திற்கோ தெரியாமல் இல்லை. எல்லாருக்குமே நன்றாகவே தெரியும். ஆனால் கண்டிக்கவோ தண்டிக்கவோ யாருக்குமே துணிச்சல் இல்லை என்பதுதான் உண்மை.

எதிர் கட்சியினரின் கண்டனங்கள் எல்லாம் துச்சமென மதிக்கப்பட்டது், வெறும் காற்றில் கரைந்தது. எதிர்க்கட்சியினரை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை.

எனினும் பக்காத்தான் ஆட்சியமைத்த பிறகுதான் நிலைமை முற்றாக மாறியது. கிட்டத்தட்ட எல்லா ‘சுறாமீன்களை’யும் வளைத்துப் பிடித்தப் புதிய அரசாங்கம், பாரிசான் அரசாங்கத்தின் உயர் நிலையில் மலிந்து கிடந்த ஊழல் அழுக்கை மறுசலவை செய்யத் தொடங்கியது.

முன்னாள் பிரதமர் நஜிப், அவருடைய மனைவி ரோஸ்மா, முன்னாள் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான், முன்னாள் நெகிரி மாநில மந்திரி பெசார் ஈசா சாமாட், முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், முன்னாள் துணையமைச்சர் அஹ்மட் மஸ்லான், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் மற்றும் மேலும் பல பெரும் புள்ளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டனர்.

உயர் நிலையில் உள்ள ஊழல்வாதிகள் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். தப்போதுதான் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு அச்சம் ஏற்படும், ஊழல் சம்பவங்கள் தானாகவே குறையும் என ஊழல் தடுப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

‘சுறாமீன்களை’ தப்பிக்கவிட்டு ‘நெத்திலிகளை’த் தண்டிப்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, கோயில் தலைவர் திருடுகிறார் என்றால் அவரை முதலில் பிடித்து சிறையிலடைக்க வகை செய்ய வேண்டும். அப்போதுதான் அது போன்றக் குற்றங்களைப் புரியும் இதர நிர்வாக உறுப்பினர்கள் பயப்படுவார்கள் என்பதே அந்த வல்லுநர்களின் கருத்தாகும்.

ஆக, ‘சுறாமீன்கள்’ பக்காத்தான் அரசாங்கத்தால் பிடிபட்டாலும், பாரிசான் கூட்டு சேர்ந்துள்ள வேரொரு ஆட்சியின் கீழ் தண்டிக்கப்பட்டது பொது மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

நஜிபின் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்த தினத்தன்று நாடு தழுவிய நிலையில் வெகு சன மக்கள் உள்ளக் களிப்பில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இரவு விடுதிகளிலும், மதுபான விடுதிகளிலும், உணவகங்களிலும் கூட்டம் கூடமாக மக்கள் கொண்டாடிய நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.

இதுவே நாட்டிற்குக் கிடைத்த இவ்வாண்டின் சிறந்த சுதந்திர தினப் பரிசு என்று கூட சிலர் வர்ணித்தனர்.

இன்றுதான் நிம்மதியான தூக்கம் வந்தது என்று மேலும் சிலர் கூறினர்.

இந்த மகிழ்ச்சி ஆரவாரமெல்லாம் நஜிப் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்காக அல்ல. மாறாக நமது நீதித்துறை, பல சவால்களுக்கிடையே மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல நடுநிலையான, நேர்மையான, துணிச்சலான தீர்ப்பை வழங்கியதற்காகத்தான்.

மீண்டும் ஒரு விடியலுக்காகக் காத்திருக்கும் மக்களுக்குப் புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அத்தீர்ப்பு!