இராகவன் கருப்பையா – சமீப காலமாக நாட்டிலுள்ள இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா.வுக்குத் திரும்பியுள்ளது எனவும் அவர்களில் 70 விழுக்காட்டினரைக் கவர்ந்து இழுக்கத் தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையைச் சொல்லப் போனால் அரசியல் நோக்கத்திற்காக வெறுமனே ஒரு மாயையில்தான் அக்கட்சியினர் இவ்வாறு பேசித்திரிகிறார்கள் எனும் விவரம் நம் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்குமே தெரியும்.
ஆனால் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி ம.இ.கா.வின் நிலையைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய வாக்காளர்கள் ம.இ.கா.வை விட ஜ.செ.க. மற்றும் பி.கே.ஆர். கட்சிகளில் உள்ள இந்தியத் தலைவர்களைத்தான் நம்புகின்றனர் என்பதை அக்கட்சி உணர வேண்டும் என்று அவர் கடுமையாகச் சாடினார்.
ம.இ.கா.வினர் வாக்காளர்களால் விரட்டப்பட்டு இன்னமும் அதனை உணராமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் ஒரு பிச்சைக்காரரைப் போலப் பாதுகாப்பான தொகுதி கேட்டு அலையும் விக்னேஸ்வரன் அறவே மூலை இல்லாத ஒரு தேசியத் தலைவர் என்பதை அவரின் செயல் காட்டுகிறது எனவும் நஸ்ரி தேவையற்ற அளவுக்கு மோசமாக விமர்சித்துள்ளார்.
இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் வழங்கிய மித்ரா நிதி என்ன ஆனது என விக்னேஸ்வரன் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கொரோனாவுக்குப் பிறகு இந்தியச் சமுதாயத்திற்கு பலதரப்பட்ட பயிற்சிகளை வழங்க ம.இ.கா.விற்கு ஒரு பெரும் தொகையை அரசாங்கம் ஒதுக்கி இருந்ததையும் நினைவுப்படுத்தினார்.
வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை எல்லாம் காலியாக்கிவிட்டு ஒரு பயிற்சியைக் கூட நடத்தாமல் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இந்திய சுதாயத்திற்கு விக்னேஸ்வரன் பதிலளிக்க வேண்டும் என நஸ்ரி மேலும் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பாதுகாப்பான தொகுதிகள் வேண்டும் என முன்னதாக விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து நஸ்ரி இவ்வாறு கன்னா பின்னாவென்று சாடினார்.
தனது சொந்த சமூகத்தினரால் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும் ம.இ.கா. அதிகமான தொகுதிகளைக் கோருவதற்கு முன்னதாக தனது நிலை என்ன என்பதை சுயமாக மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். அடி மட்டத்திற்குச் சென்று வேலை செய்வது கிடையாது, ஆனால் வெற்றிபெறும் தொகுதிகளுக்கு மட்டும் அவர்கள் அம்னோவை நம்பியிருக்கின்றனர் என நஸ்ரி சரமாரியாகவும் திட்டியுள்ளார்.
நமது நினைவுக்கு எட்டிய வரையில் அக்கட்சியை இந்த அளவுக்கு மிக மோசமாக யாரும் விமர்சனம் செய்துள்ளதாக தெரியவில்லை.
அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினருமான நஸ்ரி வரம்பு மீறித்தான் பேசியிருக்கிறார். இருந்த போதிலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் ம.இ.கா.வின் இலட்சணம் இந்தியச் சமூகம் மட்டுமின்றி மற்ற இனத்தவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது.
நம் சமூகத்தினரின் தேவைகளை எந்த அளவுக்கு ம.இ.கா. பூர்த்தி செய்கிறது, அக்கட்சிக்கு எப்படிப்பட்ட ஆதரவு இந்தியர்களிடையே உள்ளது போன்ற விவரங்களைத் தெள்ளத் தெளிவாக, அப்பட்டமாகப் போட்டுடைத்துள்ளார் நஸ்ரி.
எனவே, ‘நெருப்புக் கோழி தலையை மண்ணில் புதைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்ட கதை’யைப் போல் இல்லாமல் இனிமேலாவது ம.இ.கா. விழித்துக் கொள்ள வேண்டும்.
இந்தியச் சமூகம் ஏன் இப்படி அல்லோகலப்படுகிறது, அரசாங்கம் அவர்களுக்கு வழங்கும் ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடையாமல் இடையில் என்ன ஆகிறது போன்ற எல்லா விவரங்களும் மற்ற இனத்தவர்களுக்கும் துல்லியமாகத் தெரிகிறது.
எனவே இனிமேலும் ம.இ.கா ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கவோ’ நெருப்புக் கோழி போல வேடமிட்டோ காலங்கடந்த அரசியலை நடத்திக் கொண்டிருக்க முடியாது.
அனைத்து சமூகத்தினரும் அக்கட்சியின் போக்கை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது இப்போது வெளிச்சமாகியுள்ளது.
நஸ்ரியின் பேச்சினால் விக்னேஸ்வரன் மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் உள்ள அக்கட்சியின் உறுப்பினர்களுக்குக் கோபம் வரும் – வரத்தான் வேண்டும். ஆனால் அந்தக் கோபம் ஆக்கரமான செயல்பாடாக மாற வேண்டும்.
தங்கள் மீது குற்றம் சொல்பவர்களை முரட்டுத்தனமாகக் கடிந்து கொள்வதோ, ஏளனமாகப் பேசுவதோ, புலனக் குரல் பதிவின் வழி மிரட்ட நினைப்பதோ, கத்தியை கொண்டு தாக்குவதோ கூடாது. அடாவடி அரசியல் ஒருபோதும் கூடாது.
எனவே நஸ்ரியுடனான இந்த சொற்போரை ஒரு பாடமாகக் கொண்டு இந்தியர்களின் ஆதரவை மீட்டெடுப்பதற்குத் தேவையான உருப்படியான வேலைகளை ம.இ.கா. மேற்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் காலப் போக்கில் மேலும் அதிகமான ‘நஸ்ரிகளை’ அக்கட்சி எதிர்கொள்ள நேரிடும் என்பது திண்ணம்.