நீதித்துறையைக் களங்கப்படுத்துவதா?- கி.சீலதாஸ்

நீதி உலகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது ஏனென்றால் அதை எவரும் தங்கள் வீட்டில் தங்க இடம் தருவதில்லை என்பது மால்டீஸ் பழமொழி. சுவீடிஷ் பழமொழி ஒன்று நீதியைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால், அது வரும்போது கதவை மூடுகின்றனர் என்பதாகும்.

ஜனநாயகத்தில் நீதித்துறை ஒரு தூணாக விளங்குகிறது. நமது அரசமைப்புச் சட்டமும் நீதித்துறைக்குச் சிறப்பான இடத்தைத் தருகிறது. உயர் நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாகச் செயலாற்றும் நீதிபதிகளுக்குப் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

நீதித்துறை சுயேச்சையாக இயங்க வேண்டும், நீதிபதிகள் எவர்க்கும் அஞ்சாமல், யாருக்கும் சாதகமாகச் செயல்படாமல் துணிந்து நீதி பரிபாலனத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதுவே எல்லோருடைய எதிர்பார்ப்பாகும். இத்தகைய பலமான பாதுகாப்புகள் இருப்பதால் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வது அவ்வளவு எளிதல்ல.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நீதித்துறையின் சுதந்திரத்துக்கு யாதொரு இடையூறும் ஏற்படவில்லை. நீதித்துறைக்குத் தொந்தரவு தராத அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்க்க முடிந்தது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் போற்றி, உறுதிப்படுத்தியவர்கள் முன்னாள் பிரதமர்கள் துங்கு அப்துல் ரஹ்மான், துன் ரசாக், துன் உசேன் ஓன் ஆவர். அந்தத் துறை அச்சமின்றி, சிறப்பாக இயங்க முடிந்தது.

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் அப்துல் ரஹ்மான் தாலிப் அமைச்சராக இருந்தபோது அவரின் அமைச்சில் ஊழல் நடந்துள்ளதாக மக்கள் முற்போக்கு கட்சியின் அன்றைய தலைவர்களில் ஒருவரான டி.ஆர். ஶ்ரீனிவாசகம் மக்களவையில் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளிக்காமல் ஶ்ரீனிவாசகம் அதே குற்றச்சாட்டை மக்களவைக்கு வெளியே சொல்லட்டும். தாம் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என்று சவால் விடுத்தார் அப்துல் ரஹ்மான் தாலிப், ஶ்ரீனிவாசகம் அதை ஏற்றுக்கொண்டு கோலாலம்பூரில் உள்ள சீனர் சங்க மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டத்தில் தாம் மக்களவையில் முன்வைத்த அதே குற்றச்சாட்டை வாசித்தார். கூடியிருந்த மக்களுக்கும் அது விநியோகிக்கப்பட்டது.  வழக்கு தொடுத்தார் அமைச்சர் அப்துல் ரஹ்மான் தாலிப். வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி, ஶ்ரீனிவாசகம் வெளியிட்ட செய்திகளில் போதுமான உண்மை இருந்தது என்றார். அப்துல் ரஹ்மான் கூட்டரசு நீதிமன்றத்துக்குச் செய்த மேல்முறையீடும் தள்ளுபடியாயிற்று.

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கையில் எந்த ஆளும் கட்சி தலைவரும், கட்சி உறுப்பினர்களும் அமைச்சர் ரஹ்மானுக்கு ஆதரவாகவோ, நீதித்துறைக்கு எதிராகவோ எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. வழக்கு முடிந்த பிறகு, பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தமது அமைச்சர் ரஹ்மான் தாலிப் மீது என்றும் நம்பிக்கை உண்டு என்றார். அது தேவையற்ற ஒரு கருத்து. ஆனால், அது நீதித்துறையைக் கேவலப்படுத்தும் கருத்தாகவோ, எச்சரிக்கும் மிரட்டலாகவோ கருதப்படவில்லை. எவரும் பொருட்படுத்தவும் இல்லை.

டத்தோ ஹருன் இட்ரிஸ் மோசடி

1977ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டத்தோ ஹருன் இட்ரிஸ் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஆளானார். அரசு செய்து கொண்ட மேல்முறையீட்டில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை உயர்த்தப்பட்டது. 1981ஆம் ஆண்டு பேரரசரால் மன்னிக்கப்பட்டார்.

மொக்தார் ஹாஷிம்  மரண தண்டனை பெற்றார்.

1983ஆம் ஆண்டு இளைஞர், விளையாட்டு மற்றும் கலாச்சார துறை அமைச்சராக இருந்த டத்தோ மொக்தார் ஹாஷிம் நெகிரி செம்பிலான் மாநில அவைத் தலைவரைச் சுட்டுக் கொன்றார் என்ற குறறச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை பெற்றார். மேல்முறையீட்டு வழி அது ஆயுள் தண்டனையாகத் தளர்த்தப்பட்டது. 1991ஆம் ஆண்டு பேரரசரால் மன்னிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சாலே அபாஸ் தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

இந்த வழக்குகளில் அரசியல் கட்சி வாடை இருந்தது என்பது உண்மை. ஆனால் நீதி தன் கடமையைச் செய்வதில் யாதொரு குறுக்கீடும் இருக்கவில்லை. மன்னிப்பு வழங்குவது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. துரிதமான மன்னிப்பு நீதியின் முடிவை கேள்வி குறியாக்கிவிடும். அப்படிப்பட்ட தவறான கருத்துக்கு இடமளிக்கக்கூடாது.

துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமர் பதவியை ஏற்ற பின்னர் நீதிமன்றம் தமது அரசுக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற அவரின் குற்றச்சாட்டை மறுத்து பேரரசரிடம் மனுதாக்கல் செய்த முன்னாள் மலேசியாவின் தலைமை நீதிபதி துன் சாலே அபாஸை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கப்பெற்றது. விசாரணைக்குப் பிறகு சாலே அபாஸ் தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், துன் அப்துல்லா படாவி பிரதமர் பொறுப்பை ஏற்றபோது சாலே அபாஸுக்கு அநீதி இழைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரினார்.

சாலே அபாஸ் மீது ஏற்படுத்திய களங்கத்தை நீக்கினார். இழப்பீடும் கொடுக்கப்பெற்றது. சாலே அபாஸ் மீது தொடுக்கப்பட்ட விசாரணை நீதித்துறையின் பணியில் குறுக்கீடு செய்ததாகவே கருதப்படுகிறது.

சுமார் நான்கு ஆண்டுகளாக முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வழக்கு நடந்து வந்தது. அதில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், நஜீப் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் பன்னிரண்டு ஆண்டு சிறைத் தண்டனையையும் விதித்தது.

அவர் செய்த மேல்முறையீடும் தள்ளூபடி செய்யப்பட்டது. இறுதியாகக் கூட்டறவு நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடும் கடந்த 23ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதித் துறையுடனான அம்னோவின் மோதல்

இதில் விசித்திரம் என்னவெனில், உயர் நீதிமன்ற விசாரணையின் போதும், மேல் முறையீட்டு நீதிமன்ற விசாரணையின் போதும் நஜிப் தாம் வழக்கில் வெற்றி பெறுவார் என்றே நம்பினார். இதற்கிடையில் நம்பிக்கை கூட்டணியை வீழ்த்தி அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இன்று பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரிக்கு பொது தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மக்களவையைக் கலைக்கும்படி நெருக்கடி கொடுக்கப்படுவதைக் கவனித்திருக்கலாம்.

அதே சமயத்தில், இன்றைய அம்னோவின் தலைவர்  சாஹிட் ஹமீடி துன் மகாதீர் இரண்டாம் முறையாகப் பிரதமராக இருந்தபோது அம்னோ தலைவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ள கேட்டுக் கொண்டதாக வெளியிட்ட தகவலை மறுத்து மகாதீர் மீது அவதூறு வழக்கை முடுக்கிவிட்டிருக்கிறார்.

மக்களவை கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடந்தால் அம்னோவின் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிப்பீடத்திற்குத் திரும்பும் வாய்ப்பு இருக்கும்; அப்போது அம்னோ தலைவர்கள் மீது இருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெறலாம் என்ற நம்பிக்கை பலமாகவே இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி அம்னோ தலைவர்களின் நெருக்கடிக்கு இடம் தந்தால் அது நிலுவையில் இருக்கும் அம்னோ தலைவர்களின் மீதான வழக்கை திரும்பப் பெறுவதற்கு உதவும் தரத்தைக் கொண்டுல்லது அல்லவா? அதுவும் நீதித்துறையின் நடவடிக்கை குறுக்கீடு செய்வதாகவே கருதப்படும் அல்லவா? இந்தக் காலகட்டத்தில் அம்னோ தலைவர்கள் எல்லோருமே நீதித்துறையில் குறுகீட்டை ஆதரிக்கவில்லை என்பது தெளிவு.

அம்னோ பொது தேர்தலில் வெற்றி பெற்றாலும் அதன் தலைவர்கள் ஹமீடியைத் தொடர்ந்து ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே. அதுமட்டுமல்ல நீதித்துறையை அசிங்கப்படுத்தும் பணியில் நஜீபும் அவர் வழக்குரைஞர்களும் கையாண்ட முறை நாட்டுப் பெருமையைக் கெடுத்துவிட்டது என்று எல்லா தரப்பினரின் கருத்தாகும்.

இன்று நீதி விசாரணைக்கு உட்பட்டிருக்கும் அம்னோ தலைவர்கள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதும், நீதித்துறையின் மீதும் களங்கப்படுத்துவதை நிறுத்தாவிட்டால் அம்னோவின் பின்னடைவுக்கு, அதன் தோல்விக்கு அவர்களே காரணமாவர். பெரும்பான்மை அம்னோ உறுப்பினர்கள் அம்னோவுக்கு நேர்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்திருக்கின்றனர். அதனால் நீதித் துறையுடனான மோதல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பதே முக்கியமான கேள்வி!