இராகவன் கருப்பையா- முன்னாள் பிரதமர் நஜிப் கடந்த வாரம் சிறை சென்றதிலிருந்து கொஞ்சம் நிலை தடுமாறிச் சிறகொடிந்த பறவையைப் போல் இருக்கும் அம்னோ நீதித் துறை மீதும் தலைமை நீதிபதி மீதும் சட்டத் துறை தலைவர் மீதும் தொடர்ந்தாற் போல் தாக்குதல் நடத்தி நாட்டிற்கே இழுக்கைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அம்னோ என்று சொல்வதைவிடத் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக அதன் தலைவர் அஹ்மட் ஸாஹிட்தான் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று திரட்டி இவ்வாறு செய்கிறார் என்பதே உண்மை.
தனது நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன் எப்படியாவது பொதுத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற எண்ணத்திலிருந்த நஜிபுடன் சேர்ந்து ஸாஹிட்டும் அல்லும் பகலும் செய்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை. கடைசி நாள் வரையில் வழக்கை நீட்டிக்கச் செய்வதற்கு எவ்வாறான யுக்திகளையெல்லாம் நஜிபும் அவருடைய வழக்கறிஞர்களும் கையாண்டார்கள் என்பதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
தங்களுடைய அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் பயன்படுத்தி நீதித்துறையை வளைத்துவிடலாம் என்று கங்கணம் கட்டிய அவ்விருவருக்கும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
நஜிப் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அம்னோ தற்போது சிறகொடிந்த பறவையாகவே காணப்படுகிறது.
‘மாலு அப்பா போஸ்கு'(வெட்கப்பட ஒன்றுமில்லை என் தலைவா) எனத் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு மிகவும் துணிச்சலாகவும் தன்னம்பிக்கையுடனும் கடந்த 4 ஆண்டுகளாக நாட்டை வலம் வந்த நஜிப், அம்னோவுக்கு அதீதப் பலமுடைய ஒரு தூணாகவே கருதப்பட்டார்.
இப்போது அவர் இல்லாத சூழலில் தன்னைக் கவ்விக்கொண்ட பயத்தை வெளிப்படையாகக் காட்ட முடியாத நிலையில் கட்சி உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி நீதித்துறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வரும் ஸாஹிட்டின் போக்கை மக்கள் கவனிக்காமல் இல்லை.
நஜிப்பின் குடும்ப உறுப்பினர்களையும் அவருடைய வழக்கறிஞரையும் அம்னோ கூட்டத்திற்கு வரவழைத்து உருக்கமாகப் பேச வைத்தது அனுதாபம் தேடும் ஒரு முயற்சி என்றே கருதப்படுகிறது.
நஜிபின் வழக்கு நேர்மையாக நடத்தப்படவில்லை எனக் கொமன்வெல்த் நாடுகளும் கூடக் கருத்து தெரிவிக்கும் என்று ஸாஹிட் குறிப்பிட்டது வேடிக்கையாகவே உள்ளது. ஏனெனில் நஜிப் குற்றவாளி என அமெரிக்கா உள்படப் பல நாடுகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டன.
அம்னோவில் கூட எல்லா உறுப்பினர்களுமே ஸாஹிட்டின் கருத்துக்கு உடன்படவில்லை என்றே தெரிகிறது. மாறாக, தலைமைத்துவப் பதவிக்கு ஒரு போட்டி குறைந்துள்ளது எனும் நிலை பலருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பது உறுதி.
சிறிதளவும் ஐயமின்றி, நஜிப் குற்றவாளிதான் என உயர் நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம், ஆகிய 3 நிலைகளிலும் மொத்தம் 9 நீதிபதிகள் ஒருசேரத் தீர்ப்பளித்துள்ள போதிலும் அம்னோவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சாரார்தான் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
கோரப் பசியில் வாடிய தனது கைக்குழந்தைக்காகக் கடையொன்றில் பால் மாவைத் திருடிய ஒரு ஏழைத் தாய் சிறையில் அடைக்கப்பட்ட போது ஒரு நாதியும் பரிதாபப்படவில்லை, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, கூட்டம் போடவில்லை.
ஆனால் பொது மக்களுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டைக் கையாடல் செய்து குடும்பத்துடன் ஆடம்பரமாக வாழ்ந்து தற்போது சிறை சென்றுள்ள நஜிபுக்காகப் பிரதமர் சப்ரி அரச மன்னிப்புக் கோர வேண்டும் என ஸாஹிட் தலைமையிலான சிலர் நெருக்குதல் கொடுப்பதாகத் தெரிகிறது.
அது மட்டுமின்றித் தங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு தீர்ப்பு வழங்காத தலைமை நீதிபதி தெங்கு மைமுனையும் சட்டத்துறைத் தலைவர் அட்ருஸ் ஹருனையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துவதாக நம்பப்படுகிறது.
அப்படியென்றால் சட்டத்துறையில் உயரிய கல்வித் தகுதியைப் பெற்றுப் பழுத்து அனுபவத்தைக் கொண்டுள்ள நீதிபதிகள் எல்லாரும் இந்தக் கும்பலுக்கு அடிபணிய வேண்டுமா என்ன?
நாட்டின் 33 மில்லியன் பேருடைய தலை விதி தங்களுடைய கையில்தான் உள்ளதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முனையும் இவர்களுடைய போக்கு விசித்திரமாகவே உள்ளது. ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் இப்படி அடாவடித்தனமாக அரசியல் நடத்தியதன் பழக்கத் தோஷத்தில்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
இதற்கிடையே நீதித்துறையையும், சட்டத்துறை அலுவலகத்தையும், ஊழல் தடுப்பு வாரியத்தையும், பேரரசரையும் ஸாஹிட் அவமதித்துவிட்டார் எனப் பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த அமானா கட்சி, காவல் துறையில் புகார் செய்துள்ளது. நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விரைவில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தினால்தான் மொத்தம் 47 ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ள தானும் பணக் கையாடல் வழக்குகளில் சிக்கியுள்ள மேலும் பல அம்னோ தலைவர்களும், நஜிபின் மனைவி ரோஸ்மாவும் தப்பிக்க வழி பிறக்கும் என்ற எண்ணத்தில் ஸாஹிட் காய்களை நகர்த்த முனைவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை.
இவர்கள் அதிகப் பெரும்பான்மையில் ஆட்சியமைத்தால் ஸாஹிட்டின் கனவு நிறைவேறக் கூடிய சாத்தியம் அதிகமாகவே உள்ளதை நாம் மறுப்பதற்கில்லை.
சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் நழுவிவிடாமல் இருப்பதை வாக்காளர்கள் உறுதி செய்ய முடியும் என்ற போதிலும் தீவிர இனவாத அரசியல் அதற்கு இடையூறாக இருக்கக் கூடும் எனும் கூற்றையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அருமையான கருத்து. உண்மை உருவில்.