நஜிப் வழக்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள்

இராகவன் கருப்பையா – காலங்காலமாக மருத்துவத் தொழிலை மட்டுமே புனிதமான தொழில் என்று நாம் போற்றி புகழ்ந்து வருகிறோம்.

சில முக்கியமான தருணங்களில், நோயுற்றிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தீவிர  சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை கடவுளாகக் கூட சிலர் பார்ப்பதுண்டு.

அதே போல சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உன்னதமான தொழில்தான் செய்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. அத்துறையிலும் புனிதத்தன்மை அதிகமாகவே உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

மருத்துவர்களைப் போலவே வழக்கறிஞர்களும் உயர் கல்வி கற்றுத்தான்  சட்டத்துறையில் பாண்டியத்துவம் பெறுகின்றனர்.ஆனால் குறிப்பிட்ட சில வழக்கறிஞர்கள் தங்களுடைய கட்சிக்காரர்களுக்காக வாதிடும் போது ஆர்வக் கோளாரில் வரம்பு மீறி நடந்து கொள்வது வேதனையாக உள்ளது.

அவர்களுடைய நடத்தை, புனிதமான நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதைப் போலவும் அமைந்துவிடுகிறது என்பதை அவர்கள் உணர  வேண்டும். உதாரணத்திற்கு, அண்மையில் நிறைவடைந்த முன்னாள் பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்ட வழக்கின் இறுதிக் கட்டத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் நடந்து கொண்ட விதம் சாதாரண மக்களுக்குக் கூட எரிச்சலூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடைசி நேரத்தில் வழக்கினுள் நுழைந்த ஹிஷாம் தே தனக்கு ஏற்றவாறு நீதிமன்றத் தளர்வுகள் கிடைக்காத பட்சத்தில் நீதிபதிகள் முன்னிலையில் வழக்கில் வாதிட மறுத்த விதம் மற்றும் நஜிப்பால் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஷாஃபி திடீரென மீண்டும் வாதிட வந்தது போன்ற விசயங்களை அகில உலகமும்  ஒரு வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட பொறுப்பற்ற வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளுக்கும் எரிச்சல் ஏற்படும். இருந்த போதிலும் அவர்களுடையத் தீர்ப்பை இது எவ்வகையிலும் பாதிக்காது.

நீதிபதிகள் தங்களுடையத் தீர்ப்பை வழங்கியவுடன் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களுடன் அந்த வழக்கறிஞர்கள் பேசிய விதத்தையும் வெகுசன மக்கள் கண்டித்தனர். ஹிஷாம் தேக்கு எதிராக வழக்கறிஞர்கள் மன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட பலர் பரிந்துரைத்தனர்.

தீர்ப்புக்கு எதிராக சக வழக்கறிஞர் ஸைட் இப்ராஹிம் வெளிப்படையாகக் கூறிய எதிர்மறையான  கருத்துகளையும் மக்கள் சாடினார்கள்.

படாவி பிரதமராக இருந்த போது சிறிது காலம் சட்டத்துறை அமைச்சராக இருந்த அவர் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் நஜிபை படு மோசமாக விமர்சித்தார்.

முன்னாள் பிரதமர் மகாதீருடன் சேர்ந்து நஜிபை பதவியிலிருந்து வீழ்த்த கடுமையாப் பாடுபட்ட அவர், 1MDB விவகாரத்தில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து நிறையவே பேசியுள்ளார்.

ஆனால் தற்போது திடீரென நஜிப் நிரபராதி என்று பல்டியடித்து அவருக்காக வாதிடுவது மக்களுக்கு நகைப்பாக உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு வரையில் அம்னோவில் இருந்த அவர் பி.கே.ஆர். கட்சிக்குத் தாவினார். அங்கு 2 ஆண்டுகள் இருந்துவிட்டு ‘கீத்தா’ எனும் குட்டிக்கட்சிக்குத் தாவினார். சிறிது காலம் கழித்து ஜ.செ.க.வுக்குத் தாவிய அவர் பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

நஜிப்பின் மனைவி ரோஸ்மா சம்பந்தப்பட்ட வழக்கிலும் தற்காப்பு வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் நீதிமன்றத்திற்கு வெளியே சற்று வரம்பு மீறி பேசியுள்ளதாகக் தெரிகிறது.

ரோஸ்மாவுக்கு விதிக்கப்பட்ட 970 மில்லியன் ரிங்கிட் அபராதம் நாட்டின் வரலாற்றில் மிகப் பெரியது என்றும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதைப் போலவும் ஜக்ஜிட் கருத்துரைத்துள்ளார். நாட்டின் சட்ட விதிகளின் படி அபராதத் தொகை ஊழல் பணத்திலிருந்து  5 மடங்கு என்பது எல்லாருக்குமே தெரிந்த ஒன்றுதானே! ரோஸ்மா புரிந்த ஊழல் 194 மில்லியன் ரிங்கிட் என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001ஆம் ஆண்டில் பிரபல வழக்கறிஞர் வி.கே.லிங்கம், வழக்குகளுக்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவது சம்பந்தப்பட்ட ஒரு பெரிய சர்ச்சையில் மாட்டியதை நிறையப் பேர் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.

காணொலிப் பதிவில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அவர், ‘என்னை போலவே இருக்கிறார், என் குரலைப் போலவே உள்ளது,'(லுக்ஸ் லைக் மி, சௌன்ஸ் லைக் மி) என்று தற்காப்பு வாதம் செய்து நகைப்புக்கு உள்ளானார்.

வழக்கறிஞர் தொழில் புரிவதிலிருந்து பிறகு பதிவு நீக்கம் செய்யப்பட்ட அவர் தற்போது வெளி நாட்டில் குடியேறியுள்ளதாக நம்பப்படுகிறது.

ஆக, நீதியை நிலைநாட்டக் கடப்பாடுக் கொண்டுள்ள இந்த உன்னதத் துறையின் வல்லுநர்கள் வரம்பு மீறிச் செயல்படாமல் இருந்தால்தான் மக்களுக்கு அவர்கள் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை ஏற்படும்  என்பதில் ஐயமில்லை.