அழிந்து கொண்டிருக்கும் கோலசிலாங்கூரின் அலையாத்தி காடுகள் – ம. நவீன்

மலேசியாவின் கடலோரப்பகுதிகளில் காணப்படும் அலையாத்தி காடுகள் (மாங்குரோவ் காடுகள்) நமது நாட்டுக்கு இயற்கை கொடுத்த ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இவை சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அதோடு நில அரிப்புகளை நிவர்த்தி செய்கின்றன, காற்றில் உள்ள கரியமிலவாயுவை வடிகட்டுகின்றன, எண்ணற்ற கடலோர உயிரியலின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து நாட்டுக்கு இயற்கை வழங்கிய ஓர்  அரணாகச் செயல்படுகின்றன.

1950-களில் சுமார் 8 லட்சம் ஹெக்டர் கடலோர நிலப்பரப்பை ஆக்கிரமித்த அலையாத்தி காடுகள் (சபா, சரவாக் உட்பட)  அடுத்த பத்தாண்டுகளில் பாதிக்குப் பாதி காணாமல் போகும் அபாயத்தில் உள்ளன. இதில் அதிவேகமாக காணாமல் போகும் இடம் நமக்கு அருகாமையில் உள்ள கோலசிலாங்கூர் பகுதியாகும்.  நவின் இது பற்றி ம.நவீன் விவரிக்கிறார். -ஆர்

கடந்த சில மாதங்களாகவே கோலசிலாங்கூரில் உள்ள இயற்கை பூங்கா (Kuala Selangor National Park) ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. அலையாத்தி காடுகளால் சூழப்பட்ட இந்த பூங்கா எதிர்க்கொண்டுள்ள ஆபத்து குறித்து, இதுவரை மலேசியத் தமிழ் ஊடகங்கள் எதிலும் வெளிவராத நிலையில் நான் அந்தப் பூங்காவின் நிர்வாகி மைக்கல் அவர்களைச் சென்று சந்தித்தேன்.

தெற்குத் தொடரின் சதுப்புநிலக் காடுகளில் எஞ்சியிருக்கும் ஒரே ‘ஆக்ஸிஜன் தொட்டி’ என வர்ணிக்கப்படுபவை கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகள். இயற்கையான கடலோரப் பாதுகாப்பு மண்டலமாகவும், சுனாமி தடுப்பணையாகவும் உள்ள இந்தக் காடுகள் இப்போது அழிவின் அச்சுறுத்தலில் இருப்பதை அவரும் ஒப்புக்கொண்டார். சர்வதேச சுற்றுலா மையமாக அப்பகுதியை மாற்றி அமைப்பதற்கான முன்மொழிவு நடந்துள்ளதாக அவர் கவலையுடன் தெரிவித்தார்.

மைக்கல்

இவ்வருடம் மே மாத இறுதியில் மேம்பாட்டுத் திட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் கோலசிலாங்கூர் ‘இயற்கை பூங்கா’வுக்கு வருகை தந்ததாகவும் சிலாங்கூர் மாநில வனவியல் துறையிடம் (JPNS) பணியைத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாக அத்தரப்பு கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

அலையாத்தி காடுகள் கடலின் முகத் துவாரங்களில் அமைந்திருப்பவை. கடலில் இருந்து வரும் அலையின் சீற்றத்தை தடுத்து ஆற்றுப்படுத்தும் தன்மை இந்தக் காடுகளுக்கு இருப்பதால் இவை, ‘அலை + ஆற்று + காடுகள் = அலையாத்தி காடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. சுனாமியின் வேகத்தைக் கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என தமிழகத்தில் இருந்து வரும் ‘காடு’ இதழில் வாசித்துள்ளேன்.

ஏறக்குறைய 292 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இயற்கை பூங்காவும் (Kuala Selangor National Park) அதைச் சார்ந்த அலையாத்தி காடுகளும் எனக்கு நெருக்கமானவை. தமிழகத்தில் இருந்து வரும் எழுத்தாளர்களை அழைத்துச் சென்று காட்டும் பிரதானமான நிலப்பகுதி. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் கிழக்கு ஆசிய – ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பறவைகளின் வேடந்தாங்களாக இப்பகுதி திகழ்கிறது. மேலும் இங்குள்ள Selangor silvered langur (Trachypithecus selangorensis) வகை குரங்குகள் தீபகற்ப மலேசியாவில் மட்டுமே காண முடிபவை. சிலாங்கூர் மாநிலம் அதன் பூர்வீகம். அதுபோல அலையாத்தி காடுகளை நம்பி வாழும் மின்மினிப்பூச்சிகளைக் காண அமாவாசை இரவுகளில் படகில் பயணித்ததுண்டு. இப்பகுதியைச் சூழ்ந்துள்ள சதுப்பு நிலமும் அலையாத்தி காடுகளும் அழியும்போது இவற்றின் வாழ்விடமும் அழியும் இன்னும் நூற்றுக்கணக்கான உயிர்களும் அழியும் என்றார் வனப்பகுதி பொறுப்பாளர்களில் ஒருவரான அசோக்.

அசோக்

சிலாங்கூர் நதி முகத்துவாரத்துக்கும் மெலாவாத்தி மலைக்கும் இடையில் அமைந்துள்ள இந்த இயற்கை பூங்காவும் அச்சுறுத்தலுக்குள்ளாவது இது முதன்முறையல்ல. 2007/2008 களில் பெரிய அளவிலான இறால் மற்றும் மீன் குளத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தின் (MNS) விரைவான நடவடிக்கையால் இயற்கை பூங்காவின் வளாகத்தில் சட்டவிரோதமாக அவர்கள் நுழைவது வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அப்படி கையகப்படுத்தப்பட்ட இறால், மீன் வளர்ப்புக்கான சதுப்பு நிலப் பகுதியில் ஆக்கிரமிப்பு 10 கிலோமீட்டருக்கு மேல் இருப்பதை Google Earth வழியாகவே பார்த்து அறியலாம்.

2019 ஆம் ஆண்டு, இரண்டாவது தவணையில் நடந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற மூன்றாவது கூட்டத்தின் போது, ​கோலசிலாங்கூர் இயற்கை பூங்கா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கும் இறுதி செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட தரவுகள் கிடைக்கின்றன. பொழுதுபோக்கு, கல்வி, ஆராய்ச்சி எனும் நோக்கில் மட்டுமே அவ்வனப்பகுதி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது எழுந்துள்ள பேச்சுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தொடர்பான முன்னெடுப்புகளைக் குறித்த கேள்விகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்தப் பகுதியை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றும் திட்டம் குறித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதனை பாதுகாத்துவரும் மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கத்திடம் (MNS) சிலாங்கூர் மாநில அரசாங்கம் எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை.

1987 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் இந்த இயற்கை பூங்காவை நிர்வகித்து வரும் மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தின் (MNS) செயல்திட்டங்களை நான் நேரில் கண்டுள்ளேன். கடல் பெருக்கிற்குப் பின்னர் அலையாத்தி காடுகளில் ஒதுங்கும் குப்பைகளை பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் அகற்றுவது, புதிய அலையாத்தி மரங்களை நடுவது, மாணவர்களுக்கும் இளம் தலைமுறைக்கும் அலையாத்தி காடுகளைப் பாதுகாப்பதன் தேவைகளை உணர்த்துவது என இடைவிடாது பணி செய்து வருகின்றனர். இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மறுபயனீட்டுக்கு உதவாதவை. பெரும் செலவுகள் செய்தே அவற்றை அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டியுள்ளது. இப்படி பல்வேறு சவால்களுக்கிடையில் சூழலியலைப் பாதுகாக்கும் பொருட்டு செயல்படும் இந்த அமைப்புக்கு நேர்ந்துள்ள மிகப்பெரும் நெருக்கடி இது.

மலேசியா உலகில் மிகப்பெரிய அலையாத்தி காடுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி 50% காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தரவுகள் கூறுகின்றன. அந்த வரிசையில் கோலசிலாங்கூர் இயற்கை பூங்காவும் வந்துவிடுமா என்ற அச்சம் இந்தப் பகுதியை நம்பி வாழும் சிறு மீனவர்களுக்கு எழுந்துள்ளது. ஒரு காலத்தில் மலேசியாவிலேயே அதிகமாக கிராங் (ஒருவகை நத்தை) கிடைக்குமிடம் கோலசிலாங்கூராக இருந்ததை ஒருவர் சோகத்துடன் தெரிவித்தார். இன்று அந்நிலை மாறிவிட்டது.

மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தைச் சேர்ந்த மைக்கல், மேம்பாட்டுத் திட்டத்தின் உத்தேசமான அமைப்புமுறை குறித்து கூறியபோது, சதுப்புநிலச் சுற்றுச்சூழலுடன் கூடிய ஆடம்பர தங்கும் விடுதிகளை அமைப்பது, ஒரு உள்ளூர் தயாரிப்பு விற்பனை மையம், ஸ்பா, யோகா மற்றும் தைச்சி மையம், சுடுநீர் குளம் மற்றும் சேலட் (Chalet) மாதிரியிலான பல வகை தங்குமிடங்கள் அமைக்கும் திட்டங்களும் உள்ளன என்றார். தங்கள் அமைப்பு வளர்ச்சிக்கு எதிரானது இல்லை என்றவர், இதை அமைக்க சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்துவதற்கு பதிலாக பெரும்பாலும் கைவிடப்பட்ட மாநில நிலத்தில் அதை ஏன் செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

கோலசிலாங்கூர் அலையாத்தி காட்டு உயிர்கள்

வனம் என்பது அழகுக்காக மரங்களை மட்டும் சுற்றிலும் அடுக்கிவைப்பதல்ல. கண்ணாடித்தொட்டியில் நீந்தும் மீன்களுக்கான கடல் காட்சிகளைப் பின்னணியில் ஒட்டிவைத்து ஏமாற்றும் வித்தையல்ல. சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான திட்டம் என இக்காடுகளை அழித்துவிட்டு தங்கும்விடுதிகளை அமைக்கும்போது கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகளில் மட்டுமே இருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (mangrove tiger butterfly), ஆற்று நீர்நாய்கள் (Smooth-coated otter), காட்டு நீர்நாய்கள் (Oriental small-clawed otter), குதிரைலாட நண்டுகள் (Horseshoe crab), பலவிதமான நண்டுகள், மட்ஸ்கிப்பர் ஆகியவை மொத்தமாக அழிகின்றன. குரங்குகளும் பறவைகளும் தங்கள் இருப்பிடங்களை இழக்கின்றன. பிரம்மாண்ட ஒளிச்சிந்தும் மின்மினிகள் இருளுக்குள் மூழ்குகின்றன.

மனிதன் தன் சுயநலத்துக்காக அந்த இருளை அலட்சியம் செய்கிறான். அவ்விருள் இந்த உலகை மொத்தமாக சூழ்ந்து மூடும்போது அவன் அலரல் எவருக்கும் கேட்காது. இச்சூழலை மக்களின் விழிப்புணர்வு மட்டுமே மாற்ற முடியும். சமூக ஆர்வளர்களும் இயற்கை நேசர்களும் ஒருமுறை கோலசிலாங்கூரில் அமைந்துள்ள இயற்கை பூங்காவுக்கு (Kuala Selangor National Park) ஒருமுறை செல்லலாம். வனத்தைப் பராமரிக்கும் மலேசிய இயற்கை ஆர்வலர்கள் சங்கத்தின் செயல்திட்டங்களில் பங்கெடுக்கலாம். நமது நாளைய தலைமுறைக்கு கொஞ்சம் மரங்களைச் சேமித்துக்கொடுக்கலாம்.