இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற வேண்டுமாயின் முடிந்த அளவுக்குத் தனது பலத்தை அது வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பி.கே.ஆர்., ஜ.செ.க. அமானா மற்றும் கிழக்கு மலேசியாவின் அப்கோ, ஆகிய 4 கட்சிகள் உறுப்பியம் பெற்றுள்ள அக்கூட்டணியில் இணைவதற்கு ‘மூடா’ அண்மையில் செய்த விண்ணப்பம் இன்னமும் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
ஜொகூர் மற்றும் மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பாரிசான் மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கூட்டணிக்கு ஒரு தனி மவுசு ஏற்பட்டது. சில கட்சிகள் பாரிசானுடன் ஒட்டிக் கொள்ளவே ஆர்வம் காட்டின.
இதனால் அதன் தலைவர்களுக்குப் புதிய உத்வேகம் பிறந்தது என்று சொல்வதைவிடத் தலைக்கனம் ஏற்பட்டது என்பதுதான் உண்மை.
எந்தக் கூட்டணியின் ஆதரவும் இல்லாமல் தனித்தே வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றக் கங்கணம் கட்டியிருந்த பாரிசானுக்கு அண்மைய நீதிமன்றத் தீர்ப்புகள் ஒரு பெறும் பின்னடைவை ஏற்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
இச்சூழலில் பக்காத்தானின் வெற்றி வாய்ப்புகள் எதிர்பாராத வகையில் மேலோங்கிய நிலையில், மூடாக் கட்சியின் முடிவு அக்கூட்டணிக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல்தான் உள்ளது.
ஆனால் பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் நிலைமையை அவ்வாறு கருதவில்லை. அவர்களில் பலர் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். அதிலும் ஒரு சில தலைவர்கள் மூடாவின் இணைப்பை முற்றிலும் வெறுப்பதைப் போல் தெரிகிறது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான, மூடாக் கட்சித் தலைவர் சைட் சாடிக், வாரிசான் கட்சியுடன் அணுக்கமாக இருந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
அது மட்டுமின்றி, தங்களுடைய கட்சியிலேயே இளைஞர்கள் நிறைய பேர் இருப்பதால் ஏன் மூடாக் கட்சியின் இளைஞர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வந்து தேர்தலில் களமிறக்க வேண்டும் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் 15ஆவது பொதுத் தேர்தலில் 18 வயது இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்கவிருப்பதால் மூடாக் கட்சியின் ஆதிக்கம் பல தொகுதிகளில் பிரதிபலிக்கும் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்.
அடுத்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கத் தகுதியுடைய புதிய வாக்காளர்களில் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் 18 வயதிலிருந்து 21 வயதுடைய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பெரும்பகுதியினரை மூடாக் கட்சி கவர்ந்திழுக்க வாய்ப்பிருக்கிறது. ஜொகூர், மலாக்கா, தேர்தல்களில் அக்கட்சிக்குக் கணிசமான அளவு வாக்குகள் கிடைத்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டு வயதே நிரம்பிய அக்கட்சி ஜொகூரில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதையும் நினைவில் கொள்ளவது அவசியமாகும்.
பக்காத்தான் கட்சிகள் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகள் மூடாவுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை என அக்கூட்டணியின் தலைவர் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்படியெல்லாம் முரட்டுத்தனமாகப் பேசினால் இளைஞர்களுக்கு அது உற்சாகமாக இருக்காது என்பதை அன்வார் உணர வேண்டும்.
எடுத்தோம் கவுத்தோம் என்ற பேச்சுக்கு இடமளிக்காமல் அக்கட்சியைப் பக்காத்தான் கூட்டணியில் இணைத்தால் கிடைக்கக் கூடிய சாதகமான சூழலை அவர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
வயது முதிர்ந்த அரசியல்வாதிகள் எவ்வாறெல்லாம் மக்கள் பணத்தைச் சூறையாடுகின்றனர், எந்த அளவுக்கு நாட்டைச் சீரழித்துள்ளனர் என்பதையெல்லாம் இளைஞர்கள் இதுநாள் வரையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் முதல் முறையாக வாக்குச் சாவடிக்குள் காலடி எடுத்து வைக்கவிருக்கும் இளம் வாக்காளர்கள் அந்த அநீதிகளுக்கெல்லாம் ஒரு முற்று புள்ளி வைக்கக் கூடிய வாய்ப்பை மூடாக் கட்சி ஏற்படுத்திக் கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
அக்கட்சியைப் புறக்கணித்தால், தேவையில்லாமல் வாக்குகள் சிதறி, பக்காத்தானுக்கு அது பாதகத்தையே ஏற்படுத்தும்.
எது எப்படியாயினும் அடுத்த பொதுத் தேர்தலில் மூடா ஒரு பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.