இராகவன் கருப்பையா – தனது 86ஆவது வயதில் இயற்கை எய்திய முன்னால் ம.இ.கா. தலைவர் சாமிவேலு நம் சமுதாய மேம்பாட்டிற்குச் செய்த, செய்யாத சேவைகளை விட 31 ஆண்டுகளாக இரும்புக் கரங்களைக் கொண்டு எவ்வாறு கட்சியை வழிநடத்தினார் மற்றும் நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவார் என்பதை வைத்தே பலரும் அவரை நினைவு கூறுகின்றனர்.
எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் கால் நூற்றாண்டுக்கும் மேல் தலைமைப் பீடத்திலிருந்து இறக்கப்படாமல் ‘ஜனநாயக’ முறைப்படி அப்பதவியில் நிலைத்திருப்பது சாதாரண விஷயமில்லை.
தனக்கே உரிய ஒரு முரட்டுச் சுபாவமுடன் பேசும் தன்மையைக் கொண்ட அவரை அக்கால கட்டத்தில் எதிர்த்துப் பேசுவதற்கு உறுப்பினர்கள் யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை.
ஆனால் கடந்த 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலின் போதுதான் அவருடையப் பதவிக்குக் கடுமையான சோதனை ஏற்பட்டது.
அப்போது துணைத்தலைவராக இருந்த சுப்ரமணியம், உதவித் தலைவர் பத்மநாபன் மற்றும் முன்னாள் உதவித் தலைவர் பண்டிதன் ஆகியோருடன் கைகோத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
சற்று கலக்கமடைந்த போதிலும், அப்போட்டியிலும் வெற்றி பெற்ற சாமிவேலு கட்சியில் தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.
அவருக்கு முன் கட்சிக்குத் தலைவராக இருந்த மாணிக்கவாசகத்தின் காலக்கட்டத்தில் 2 முழு அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தனது காலகட்டத்தில் தான் மட்டுமே முழு அமைச்சராக இருக்க சாமிவேலு விரும்பியதாக அப்போது பேசப்பட்டது.
தனது பதவிக்கு மிரட்டலாக விளங்கிய எந்தத் தலைவரையும் அவர் அருகில் நெருங்கவிட்டதில்லை.
சுப்ரமணியம், பத்மநாபன் மற்றும் பண்டிதன் போன்றோருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருந்த போதிலும் தனது அரசியல் சாணக்கியத்தால் அவர்களையெல்லாம் சாமிவேலு எளிதில் வீழ்த்தினார்.
மறைந்த ஆதி குமணனின் தலைமையில் கடந்த 80ஆம் ஆண்டுகளில் சக்திவாய்ந்த தமிழ் தினசரியாக விளங்கிய தமிழ் ஓசையின் முழு ஆதரவு இருந்தும் கூட சாமிவேலுவை அவர்களால் அசைக்க முடியவில்லை.
ஒரு சர்வாதிகாரியைப் போலவே கட்சியை வழி நடத்திய அவருக்கு எதிராக ம.இ.கா.வில் மட்டுமின்றி நாடாளுமன்றத்திலும் கூட பலரும் பேசத் தயங்கினார்கள் என்றால் அது மிகையில்லை.
டெலிக்கோம் பங்கு விவகாரம் மற்றும் மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தோல்வி முதலிய சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்த போதிலும் யாராலும் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.
எனினும் 2007ஆம் ஆண்டு அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
சிலாங்கூரின் பாடாங் ஜாவா பகுதியில் ஒரு கோயில் உடைப்பு சம்பவத்தின் போது வீறுகொண்டு எழுந்த அங்குள்ள மக்களால் அவர் சரமாரியாக அவமானப்படுத்தப்பட்டார்.
அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணியும் அவருடைய அரசியல் பயணத்திற்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ம.இ.கா. இந்தியர்களுக்கு உதவாத, கையாளாகாத ஒரு கட்சி எனும் தோற்றத்தை அப்பேரணி ஏற்படுத்திவிட்டது. ஒட்டு மொத்த இந்தியச் சமூகமும் அக்கட்சிக்கு எதிராகவும் அதன் தலைவர் சாமிவேலுவுக்கு எதிராகவும் திரும்பியது, நீண்டகாலமாக சாமானிய மக்களின் விரக்தியின் விளிம்பில் நிகழ்ந்த ஒன்று.
அதன் விளைவாக, அதற்கு அடுத்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 8 தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுங்ஙை சிப்புட் தொகுதியில் அவர் தோல்வியடைந்தார்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்ப, அத்தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து சாமிவேலு ஒதுங்கினார்.
மறைந்த சாமிவேலுவை பாராட்டாமல் இருக்கவும் இயலவில்லை, அதேவேளையில், அவரின் காலகட்டத்தில் சமூகம் சீரடைந்ததா அல்லது சீரழிந்ததா? என்ற வினாவுக்கு நஜிப் காலகட்டத்தில், 2017-இல் வெளியிடப்ப்ட்ட இந்தியர்களுக்கான வரைவு திட்டத்தில் போதுமான தகவல் உள்ளது.