மலேசியாவின் எதிர்காலம் –  கி.சீலதாஸ்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 31.8.1957ஆம் நாள், அப்போது மலாயாவில் வாழ்ந்த எல்லா இன மக்களும் இன, சமய, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராது தோளோடு தோள் நின்று, கூட்டொருமையோடு சூழ்ச்சியான முறைகளால் பிற நாடுகளை ஆக்கிரமித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்களை அடக்கி, அவமானப்படுத்தி, மிடுக்காக ஆட்சி செய்த பிரிட்டிஷாரை வெளியேற்றினர் நம் முன்னோர். பிரிட்டிஷாரை அவர்களின் நாட்டுக்கே திரும்ப அனுப்பினோம். அது குதூகலமான நாள். அப்போது நாம் தேவைப்பட்டோம்.

நாட்டின் ஆட்சி நம் போராட்ட வீரர்களின் கைகளுக்கு மாறியது. மகிழ்ச்சியில் திளைத்தோம். அன்றைய தலைவர்கள் மலாயா மக்களுக்குத் தந்த உறுதிமொழி என்ன? அன்று வாழ்ந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு வரும் தலைமுறையினரும் அமைதியோடும், நிம்மதியாக வாழ முடியும் என்றனர். பிரிட்டாஷாரின் அடக்குமுறை ஆட்சி இனி வராது என்ற நம்பிக்கையை ஊட்டினர்.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் வீர முழக்கங்கள் ஒலித்தன. உண்மையான வரிகள். அவை இந்தியாவுக்கு, இந்தியர்களுக்கு மட்டும் அவர் எழுதியதாக நினைப்பது பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் பரிதாப நிலையை எண்ணி வேதனைபட வேண்டியுள்ளது. அவர் எழுதியப் பாடலை மீண்டும் பாடத் தூண்டுகிறது. பாரதியாரின் வரிகள் நமக்கு இன்றும் உரிமை உணர்வைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. சுதந்திரம் ஆனந்தத்தைத் தருகிறது. எனவே, “ஆடுவோம், பள்ளுப் பாடுவோம். ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடுவோமே” என உற்சாகப்படுத்துகிறார்.

அடுத்து, “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு. நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு” என்று அவர் மார் தட்டுவதை உணர முடிகிறதா? நம்மையும் மார் தட்டும்படி அழைப்பு விடுக்கிறார். சமம் என்பது உறுதியாச்சு எனும்போது அடிமை எண்ணத்துக்கு ஏது இடம்? எல்லோரும் சமம் என்பது உறுதியாகிவிட்டபோது இனச் சமத்துவம் கிடையாது என்ற பேச்சுக்கு வழியில்லையே!

பாரதியார் தொடர்ந்து பாடும்போது, “நாம் இருக்கும் நாடு நமதென்பது அறிந்தோம்” என்று கூவும்போது நம்முள் இருந்த சந்தேகம் பறந்தோடியது. “இது நமது நாடு! உனது நாடல்ல, எனது நாடல்ல; நம் நாடு” என உரக்கப் பாடுகிறார். இது (நாடு), “நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்!” என்கிறார். வேறு நாடில்லை! இதுதான் நமது நாடு. அங்கும் நிற்க மறுத்த பாரதியார், “பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம்“ என்றார். பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு சுதந்திரப் பறவையாக மாறியவனுக்கு அடிமை எண்ணம் ஏன்? பிரிட்டிஷாரின் அடிமை சங்கிலியை அறுத்தெறிந்துவிட்டு இனி எவர்க்கும் அடிமையாக மாட்டோம் என்பதையும் உறுதிபடுத்துகிறார்.

இறைவனுக்கு மட்டும் அடிமை என்கிறார். இது எதை உணர்த்துகிறது? மனிதன் மனிதனை அடிமையாக்குவதை, அடிமையாகக் கருதுவதைத் தடுக்கிறது. எனவே, பாரதியாரின் பாடலை நாம் பாட கேட்டு மகிழ்ந்தபோது, சுதந்திரம் தந்த மகிழ்ச்சியை அளவிட முடியவில்லைதான்.

இன்று இனங்களைப் பிரித்துப் பேசுகிறார்கள். குடியேறிகள் என்கிறார்கள். இந்தக் குடியேறிகள் இல்லையென்றால் முக்கிப்போயிருக்கும் என்பதை மறந்துவிட்டார்கள்.

அடப்பாவிகளா! அன்று ஏற்படுத்திக கொண்ட ஒப்பந்தத்தின்படி நான் என் மூதாதையரின் நாட்டை மறந்துவிட்டேனே! இதுதானே என் நாடு. இங்கேதானே எனக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது. மலாயா தந்தது குடிமகன் என்றால் அரசமைப்புச் சட்டம் நல்கும் எல்லா உரிமைகளும் எனக்கு உண்டே! சரி நாட்டில் அமைதி, பல்லின் மக்களிடையே நல்லிணக்கத்துக்குத் தேவை என்பதால் விட்டுகொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டோம். இப்பொழுது என் கவுரவத்தையும் விட்டுக்கொடு என்றால் என்ன நியாயம்? அது ஒரு தொடர்கதை.

மலாயா சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் மலாயா, சிங்கப்பூர், புருணாய், வடக்கு போர்னியோ (இப்பொழுது சபா), சரவாக் இணைந்து மலேசியா அமைப்பைக் காணலாம் என்றார். உடனே அன்றைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ கம்யூனிஸ்டுகளைக் கட்டுப்படுத்தவும் அவர்களின் மருட்டல்களைத் துடைத்தொழிக்க இது உதவும் என்று எண்ணி மலேசியாவுக்கு முழு ஆதரவு வழங்கினார்.

மலேசியா அமைப்பது என்ற ஆலோசனை வெளியானதும் எழுந்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றைக் விளக்க இயலாது. இடமும், நேரமும் போதாது. ஆனால், முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் எல்லா இனங்களும் – மலாயா, சிங்கப்பூர், சபா, சரவாக் இணைந்து மலேசியா அமைப்பை ஒருமனதாக ஏற்றதாகும். புருணாய் மலேசியாவின் இணையாமல் தனி நாடாக இருக்க தீர்மானித்து, ஒதுங்கி கொண்டது.

மலேசியா அமைப்பைப் பற்றி அரசியல் வாக்குறுதிகள் கணக்கிலடங்கா. பரந்த நாடு, எல்லா இனத்தவர்களுக்கும் நல்ல வாழ்வுக்கான தாராளமான வாய்ப்புகள். அப்பொழுதும் எல்லா குடிமக்களும் சமம் என்று சொல்லப்பட்டது. நம்பி ஆதரவு தரப்பட்டது. மலேசியா அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுவதற்குள் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டு சுதந்திர குடியரசை மாற்றியது.

மலேசியாவில் ஒன்றாக வாழ்வோம், ஏற்றத்தாழ்வின்றி வாழ்வோம் என்று சொன்னார்கள். எல்லோரும் நம்பினோம். இன்று ஒன்றாக நல்லிணக்கத்துடன்  வாழ இடமளிக்க மறுக்கும் சக்திகளின் வளர்ச்சியைத்தான் காண்கிறோம். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட அழிவுச் சக்திகளுக்குச் சில மறைமுக, மெளன ஆதரவு தரப்படுவது நாட்டில் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்ட செயல் அல்ல. நல்லெண்ணத்தைக் காண முடியவில்லை.

ஆகஸ்ட் 31 1957இல் பிரிட்டனுக்கு விடைக்கொடுத்தோம். வெளியேற்றினோம். செப்டம்பர் 1963இல் மலேசியாவைக் காணும்போது பிரிட்டனின் அதிகாரத்தை நீக்கினோம். பிரிட்டாஷருக்குப் பதிலாக நம்மவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தோம். என்ன செய்தார்கள்? படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து நழுவியவர்களைத்தான் பார்க்க முடிந்தது. அதோடு நிரந்தர இன வெறுப்பு, மொழி பிரச்சினை, சமயப் பிரச்சினை என்று ஒன்றன்பின்  ஒன்றாக எழுப்பி சிறுபான்மையினர்க்கு மன உளைச்சலைத் தரும் நடவடிக்கைகள் பெருகி வருவதைக் காண்கிறோம். ஒரு சிலர் தங்கள் சுயநலனில் முக்கியத்துவம் தருவதில் காட்டிய அக்கறை சொந்த இனத்தையே பணயம் வைத்தது போல் அமைந்துவிட்டது.

பிரிட்டிஷாரை விரட்டியது போல் உள்நாட்டு ஊழல் பெருச்சாளிகளை விரட்ட முடியாத சமூகமாக நாம் இருந்து வருகிறோம். இதுவே இன்றைய மலேசியா. மக்களுக்கு எப்பொழுது உண்மையான விடுதலை கிடைக்கும்? மலேசிய தினத்தன்று புதிய உறுதி மொழி தேவையா என்று கேள்வி எழும்! புதிய ஏற்பாடு தேவையா அல்லது ஒப்புக்கொண்டதை மதித்து காலத்துக்கேற்ற திருத்தங்களைச் செய்து நாணயமாக நடந்து கொண்டாலே போதுமே!

அந்த நல்ல எண்ணம் ஏற்படுமா? ஏற்படாமல் இப்பொழுது அவ்வப்போது எழுப்பப்படும் பிரிவினை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது நிறைவேற நாணயமான அரசியல்வாதிகள் தேவை. துன் மகாதீர் முகம்மது, டான் ஶ்ரீ முகைதின் யாசீன், டத்தோ ஶ்ரீ ஹாடி போன்றோர் உதவ மாட்டார்கள். தகுதியற்றவர்கள். இவர்களால் இனங்களிடையே பிளவு மனப்பான்மைதான் ஓங்கி நிற்கும். அது மலேசியாவின் ஒருமைப்பாட்டை வளர்க்காது. வயதைக் காரணம் காட்டி நெடுங்காலமாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த லிம் கிட் சியாங் அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை வெளியிட்டுள்ளார். நல்ல முடிவு.

மகாதீர் போன்றோர் நாட்டு நலனை மலேசியாவின் நிரந்தர ஒற்றுமையைக் காணும் பொருட்டு வழிவிடுவது நாட்டுக்குச் செய்த நல்ல சேவையாகக் கருதலாம். மலேசியாவின் எதிர்காலம் இளையர் கையில் இருக்கிறது.