அரசு அறிவித்த உதவித்தொகை உருப்படியாகச் சென்று சேருமா?

இராகவன் கருப்பையா – இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்குப் பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது எனப் பிரதமர் சப்ரி யாக்கொப் கடந்த வாரம் செய்த அறிவிப்பு நம்மில் எத்தனை பேரை உற்சாகப்படுத்தியிருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி.

வறுமையில் வாடுவோரின் இன்னல்களைத் துடைத்தொழிப்பதற்கும் இதர வளர்ச்சித் திட்டங்களுக்கும் மித்ராவின் வழி ஒதுக்கப்பட்டுள்ள 100 மில்லியன் ரிங்கிட்டும் அதில் அடங்கும் என ம.இ.கா. நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தரப்பைப் பொறுத்த வரையில் சப்ரி தனது கடமையைச் செய்துவிட்டார். எனவே அரசாங்கம் நமக்கு உதவித் தொகை வழங்கவில்லை என நாம் குறை சொல்ல முடியாது.

ஒதுக்கீடு சிறியதாக இருந்தாலும் ஏதாவது ஒரு தொகையை அரசாங்கம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் அதனை இடைமறித்துக் கொள்ளையிடும் சில அரசியல்வாதிகளின் கொடூரச் செயல்கள்தான் நமக்கு மிகவும் வேதனையளிக்கும் ஒரு விடயமாக உள்ளது.

அதனால்தான் சப்ரியின் அறிவிப்பு வெகுசன மக்களைக் கொஞ்சம் கூட உற்சாகப்படுத்தியிருக்காது என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

உதவி தேவைப்படுவோருக்குச் சென்று சேர வேண்டிய அரசாங்க நிதி ஒதுக்கீட்டை அரசியல் பலம் பொருந்திய குறிப்பிட்ட சிலர் நேரடியாகவோ தங்களுக்கு வேண்டிய அரசு சாரா இயக்கங்களின் வழியாகவோ கபளீகரம் செய்து வருவது காலங்காலமாக நம் சமூகத்தில் நிகழும் ஒரு சாபக்கேடு.

சப்ரி அந்த அறிவிப்பைச் செய்து கொண்டிருக்கும் போதே கூடச் சம்பந்தப்பட்ட அந்த ஒட்டுண்ணிகள் தங்கள் மனதுக்குள் மேகாத் திட்டங்களை வகுத்திருக்கக் கூடும்.

ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையில் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி கையாடல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஊழல் தடுப்பு ஆணையம் சில பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

அதுவும் கூட வழக்கம் போல ‘நெத்திலிகள்’தான் கைது செய்யப்பட்டார்களேத் தவிர ‘சுறா’க்கள் இன்னமும் வெளியே ஏப்பம் விட்டு அலைவதாக நம்பப்படுகிறது.

இத்தகைய சூழலில் பிரதமர் அறிவித்தத் தொகை இடையில் தடம் மாறாமல் இருப்பதற்கு என்னதான் உத்தரவாதம் என்று தெரியவில்லை.

பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற ‘இனிப்பு’ அறிவிப்புகள் எல்லாம் வழக்கமான ஒன்றுதான் என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால் பிணம் தின்னும் கழுகுகளைப் போல அதனையும் சுருட்டி வாயில் போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகளை நினைத்தால்தான் வெறுப்பாக உள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கிய மித்ராவை பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என ம.இ.கா. விடுத்தக் கோரிக்கைக்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இம்மாற்றத்திற்கான ம.இ.கா.வின் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்ற போதிலும் அது எங்கிருந்தாலும் பணத்திற்கு பாதுகாப்பு உண்டா எனும் கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுகிறது.

ஏழை மாணவர்களுக்கு 2 மில்லியன் ரிங்கிட் பிரத்தியேகமாக ஒதுக்கப்படுகிறது என அதே நிகழ்ச்சியில் சப்ரி செய்த அறிவிப்பு சற்று வேடிக்கையாக உள்ளது. ஒரு வேளை தொகையைத் தவறுதலாக அறிவித்துவிட்டாரோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

ஏனெனில் 2 மில்லியன் ரிங்கிட்டை 50 ஆயிரமாகப் பிரித்தாலும் 40 மாணவர்கள் மட்டுமே பயனடைய முடியும்.

ஆயிரக்கணக்கான நம் மாணவர்கள் பண வசதியின்றி மேற்கல்வியைத் தொடர இயலாமல் பரிதவிக்கும் நிலையில் இந்த 2 மில்லியன் ரிங்கிட்டையும் கூட எத்தனை ‘முதலைகள்’ ஆட்டையைப் போடும் என்று தெரியாது.

எனவே  நம் சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதி இனிமேலும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு எட்டாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

பல்வேறுத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, அரசியல் கலப்பில்லாத சில வல்லுனர்களை ஒன்றுதிரட்டி, சக்திவாய்ந்த குழு ஒன்றை அமைத்து அவர்கள் வழியாக மித்ரா நிதி பட்டுவாடா செய்யப்படுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

அக்குழு, பிரதமரின் நேரடிப் பார்வையில் இருப்பதும் அவசியமாகும்.