வெள்ளத்திலும் தேர்தலா? – முற்றிலும் அறிவிலிதனம்!

இராகவன் கருப்பையா – வெள்ளம் வந்தால் என்ன, மக்கள் எக்கேடு கெட்டால்தான் என்ன, பொதுத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கும் சில சுயநல  அரசியல்வாதிகளின் அறிவிலித்தனத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளம் மக்கள் மனங்களிலிருந்து  இன்னமும் அகலவில்லை.

50க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பலிகொண்ட அப்பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் பொருளாதார ரீதியில் இன்னமும் அவதிப்படுகின்றனர்.

பெருமளவில் பாதிக்கப்பட்ட சிலாங்கூரின் ஸ்ரீ மூடா பகுதியில் வசிப்பவர்கள் இன்றளவும் மழை சற்று அதிகமாகப் பெய்தால் அச்சத்தில் உறக்கமிழந்துத் தவிக்கின்றனர்.

இவ்வாண்டும் அதே கால கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், மீண்டும் கடுமையான மழையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மக்கள் படக் கூடிய அவதியைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாத அந்த அரசியல்வாதிகள் எப்படியாவது பொதுத் தேர்தலை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் எனத் துடியாய்த் துடிக்கின்றனர்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நிறைவு பெறுவதற்கு ஏறத்தாழ இன்னும் ஒரு ஆண்டு உள்ளது என்பதுதான் வேடிக்கை.

பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் எதிர்க்கட்சிகள்தான் பொதுத் தேர்தலுக்கு அவசரப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் நம் நாட்டுச் சூழல் மாறுபட்ட நிலையில் உள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ், ஆகிய 3 கட்சிகளுமே எலியும் பூனையும் போல்தான்.

பல்லினங்களைப் பிரதிநிதித்து நல்லாட்சி புரிந்த பக்காத்தான் ஹராப்பானை கடந்த 2021ஆம் ஆண்டில் கொள்ளைப்புறமாக வந்து வீழ்த்தி, மலாய்க்காரர்கள்தான் நாட்டை ஆள வேண்டும் எனும் இனவெறி வேட்கையில் அவசர அவசரமாக ஒருங்கிணைந்த அம்மூன்று கட்சிகளும் நாட்டை மிக மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எல்லாருக்கும் தெரியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பக்காத்தான் ஹராப்பானோ அமைச்சரவையில் உள்ளவர்களோ தேர்தலுக்காக அவசரப்படவில்லை.

இப்போதைக்குத் தேர்தல் வேண்டாம் என பாஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டாம் என பெர்சத்துவைப் பிரதிநிதிக்கும் 12 அமைச்சர்கள் பேரரசருக்குக் கடிதம் ஒன்றையும் கூட அனுப்பியுள்ளனர்.

தேர்தலுக்கு அவசரமில்லை எனச் சுகாதார அமைச்சர் கைரி வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். பிரதமர் சப்ரி உள்பட அம்னோவைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களும் அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தலைமைத்துவத்தை எதிர்த்துப் பேசத் துணிச்சல் இல்லை.

இந்நிலையில், அமைச்சரவையில் இடம்பெறாத 4 அம்னோ தலைவர்கள்தான் இவ்வளவு குழப்பத்திற்கும் மூலக் காரணம்  என்பதில் ஐயமில்லை.

ஊழல்வாதிகள் நிறைந்த கட்சியாகக் கருதப்படும் அம்னோ, தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைத்தால் முதல் வேலையாக சட்டத்துறைத் தலைவரை மாற்றி, வழக்குகளில் சிக்கியுள்ளத் தலைவர்களைக் காப்பாற்ற முனையும் என்று நம்பப்படுகிறது.

பிரதமராகத் துடித்துக் கொண்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் அஹமட் ஸாஹிட்டுக்கு இன்னமும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதே எண்ணத்தில் கனவுலகில் மிதக்கும் அதன் துணைத் தலைவர் முஹமட் ஹசான் தற்போது சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கிறார்.

உதவித் தலைவர்களான காலிட் நோர்டினும் மாட்ஸிர்  காலிட்டும் மீண்டும் பதவிகளை அலங்கரிக்க இருப்புக் கொள்ளவில்லை.

ஆனால் மற்றொரு உதவித் தலைவரான சப்ரி இன்னும் ஓராண்டுக்குப் பிரதமர் பதவி வழங்கும் சுகபோகங்களை அனுபவிக்க விரும்புவதைப்போல்தான் தெரிகிறது. யாருக்குத்தான் ஆசை இருக்காது? எனினும் கட்சித்தலைவர் ஸாஹிட்டின் உத்தரவை மீற இயலாமல் அவர் தவித்து கொண்டிருப்பதும் ன்றாகவே புலப்படுகிறது.

ஆக பொது மக்களின் நலனைப் பணயம் வைத்து பதவி வெறியில் தேர்தலுக்காகத் துடிக்கும் அந்நால்வருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இதற்கிடையே எப்போதுமே நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தும் பேரரசர், நாடாளுமன்றத்தை கலைக்க இணக்கம் தெரிவிப்பாரா அல்லது அந்நால்வரையும் மண்ணைக் கவ்வச் ய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.