இராகவன் கருப்பையா – சுமார் 7 ஆண்டுகளுக்கு முன், தலைநகர் புக்கிட் பிந்தாங் பகுதியில அமைந்துள்ள ‘லோ யாட்’ பேரங்காடியில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவத்தை நம்மில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
அவ்வளாகத்தில் மின்னியல் பொருள்களை வியாபாரம் செய்யும் ஒரு கடையில் விவேகக் கைத் தொலைபேசி ஒன்றைத் திருடியதற்காக மலாய்க்கார இளைஞர் ஒருவர் பிடிபட்டார்.
வியாபாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அவர் பிறகு தனது நண்பர்களைத் திரட்டிக் கொண்டு வந்து அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் இனக்கலவரம் போன்ற ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட இருந்ததும் நமக்கு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.
அதன் பிறகு அரசாங்கம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள்தான் நமக்கு வியப்போடு கலந்த எரிச்சலை ஏற்படுத்தியது.
அத்திருட்டுச் சம்பவம் இனபாகுபாடு இல்லாத ஒரு சாதாரணக் குற்றச்செயல்தான் என்ற போதிலும் சில அம்னோ அரசியல்வாதிகள் அதற்கு இனச்சாயம் பூசி குளிர்காய்ந்தது வேடிக்கையான ஒரு விடயம்.
அந்த சமயத்தில் வட்டார, புறநகர் மேம்பாட்டு அமைச்சராக இருந்த தற்போதையப் பிரதமர் சப்ரி ஒரு படி மேல் சென்று, மலாய்க்காரர்களுக்கு என்றே பிரத்தியேகமாக ‘லோ யாட்’ 2 என்னும் ஒரு கடைத் தொகுதியை அமைத்து கொடுத்தார்.
‘மாரா டிஜிட்டல் மோல்’ எனும் பெயரில் தலைநகர் மாரா கட்டிடத்தில் மிகவும் கோலாகலமாகத் தொடங்கப்பட்ட அம்முயற்சி, வந்த வேகத்திலேயே சுணக்கம் கண்டு உறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தற்போது ஓரிருக் கடைகள்தான் அங்கு தட்டுத் தடுமாறிக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
முறையானத் திட்டமிடல் இல்லாமல் இனத்துவேசத்தை முன்னிருத்தி அவசர அவசரமாக வீம்புக்கென்றே நிர்மாணிக்கப்பட்டதால்தான் இந்நிலை ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை.
இங்குள்ள மலாய்க்கார வியாபாரிகள் புக்கிட் பிந்தாங் ‘லோ யாட்’ வளாகத்தில் உள்ள சீனர்களிடம் இருந்துதான் தங்களுக்குத் தேவையானப் பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
சீனர்களின் கடுமையான உழைப்பினால் இயற்கையாகவே பெரும் வளர்ச்சி கண்ட புக்கிட் பிந்தாங் ‘லோ யாட்’டுக்குப் போட்டா போட்டியாகத் தொடங்கப்பட்ட இந்த ‘லோ யாட்’ 2 இன ரீதியான ஒரு முயற்சிதான்.
இருந்த போதிலும் சூட்டோடு சூடாக நம் இனத்தவர்களுக்கும் ஒரு ‘லோ யாட்’ 3 வேண்டும் எனும் கோரிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் அப்போது நாம் முன் வைத்திருக்க வேண்டும். ஆனால் நம் சமூக, அரசியல் தலைவர்கள் வழக்கம் போல ‘நமக்கு என்ன’, எனும் போக்கில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டனர்.
‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ எனும் நிலைப்பாட்டில் அப்படி ஒரு முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் அரசாங்கம் அச்சமயத்தில் மறுப்புத் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை.
நம் இன இளைஞர்கள் நிறைய பேர் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள போதிலும் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கு வழியில்லாமல் தவிக்கின்றனர்.
‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப ஏராளமான நம் இன இளைஞர்களும் இன்று ‘லோ யாட்’ 3 எனப்படும் ஒரு வளாகத்தை ஆக்கிரமித்துத் தொழில் முனைவர்களாக வலம் வந்துக் கொண்டிருப்பார்கள்.
நம் இனம் எப்போதுமே உதாசினப்படுத்தப்பட்டு, கேட்பாரற்று நட்டாற்றில் விடப்படுவதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா என்ன?
‘மாரா டிஜிட்டல் மோலை’ப் போல ஷா அலாம், குவாந்தான், மற்றும் ஜொகூர் பாரு, ஆகிய இடங்களிலும் மலாய்க்காரர்களுக்கென கடைத் தொகுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே ஒன்றன் பின் ஒன்றாக மூடு விழாக் கண்டன.
‘மாரா டிஜிட்டல் மோல்’ தனது இதயத்தோடு ஒன்றித்த ஒரு முன்னெடுப்பு என்றும், பூமிபுத்ரா தொழில் முனைவர்களை மேம்படுத்துவதற்கென தொடங்கப்பட்ட அத்திட்டம் தொடர வேண்டும் எனவும் சப்ரி அண்மையில் குறிப்பிட்டார்.
அத்திட்டம் தொடங்கப்பட்ட போது அவர் ஒரு சாதாரண அமைச்சராகத்தான் இருந்தார். ஆனால் தற்போது எல்லா இனங்களையும் சரிசமமாகக் கவனிக்க வேண்டிய பிரதமர் பொறுப்பில் இருந்து கொண்டு தொடர்ந்து இன பாகுபாடுக் காட்டுவது நமக்கு வியப்பாகத்தான் உள்ளது.
இது பற்றி சப்ரி தற்போது மீண்டும் கருத்துரைத்துள்ளதால் இப்போதாவது நம் தலைவர்கள் துயிலெழுந்து நம் இளைஞர்களுக்கு ‘லோ யாட்’ 3 வேண்டும் என்றொரு கோரிக்கையை முன் வைப்பார்களா? கேட்டால்தானே கிடைக்கும்!