இராகவன் கருப்பையா – ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஒரு அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது.
‘சத்து மலேசியா’, ‘கெலுவார்கா மலேசியா’, போன்ற எத்தனை சுலோகங்கள் வந்தாலும் அந்தந்த சமயங்களில் பதவியில் இருங்கும் பிரதமர்களின் அரசியல் விளம்பரத்திற்கு மட்டும்தான் அவை பயனாக அமைகிறதேத் தவிர எல்லா இனங்களும் எல்லா வேளைகளிலும் சரிசமமாக நடத்தப்படுவதில்லை என்பதை மறுக்க இயலாது.
குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் கொள்ளைப் புறமாக நுழைந்து அடாவடித்தனமாக ஆட்சியைக் கைப்பற்றிய ‘அரசியல் தவளை’களின் கீழான அரசாங்கம் நம் இனத்தை சன்னம் சன்னமாக புறக்கணித்து வருவது அப்பட்டமாகவேத் தெரிகிறது.
இந்திய சமூகம் ஓரங்கட்டப்படாது என கடந்த மாதம் நடைபெற்ற ம.இ.கா. நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் சப்ரி அறிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதிக்கும் கடந்த வாரம் வாசிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது மிகவும் வருத்தமான ஒரு விடயம். அந்த அரசியல் முழக்கம் 18 நாள்களிலேயே வெறும் புஸ்வானமானதுதான் வேடிக்கை.
அப்படியென்றால் அவ்வறிவிப்பு வழக்கம் போல ம.இ.கா. திரட்டியக் கூட்டத்தை குஷிப்படுத்துவதற்கு செய்யப்பட்ட ஒரு வெத்து வேட்டுதானே?
பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கவருவதற்காகவே தயார் செய்யப்பட்ட ஒரு வரவு செலவுத்திட்டம் என பரவலாக பேசப்படுகிற போதிலும் நம் இனம் மறுமடியும் பலிகடாவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
இந்தியர்களின் உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அதே 100 மில்லியன் ரிங்கிட்தான் இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தடவை கொஞ்சமாவது அதிகரிப்பு இருக்கும் என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்திருந்த நம் சமூகத்திற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
சரி, அதுதான் போகட்டும். இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட 4.5 மில்லியன் ரிங்கிட்டையாவது நிலைநாட்டியிருக்கலாம். அதுவும் இல்லை. அத்தொகையை இம்முறை 2.5 மில்லியனாகக் குறைத்திருப்பதற்கான காரணம் என்னவாகத்தான் இருக்கும்?
2.5 மில்லியன் ரிங்கிட்டில் எத்தனை தொழில் முனைவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று துளியளவாவது அவர்கள் சிந்தித்தார்களா என்று தெரியவில்லை.
இவற்றையெல்லாம் அரசாங்கம் தெரியாமல், கவனக்குறைவாக செய்கிறதா அல்லது வேண்டுமென்றே தெரிந்துதான், இந்த இனம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று நினைக்கிறதா என்பதும் ஒரு புதிராகத்தான் உள்ளது.
தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பிரத்தியேகமாக ஒரு சல்லிக்காசு கூட ஒதுக்கப்படவில்லை. எனினும் நாடளாவிய நிலையில் உள்ள பல்லினப் பள்ளிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 55 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாடு முழுவதிலும், குறிப்பாக நகர்ப்புறங்களுக்கு அப்பால் ஓட்டையும் ஒடிசலுமாகக் கிடக்கும் ஏராளமான தமிழ்ப் பள்ளிகளுக்கு இத்தொகையிலிருந்து விமோசனம் கிடைக்குமா என்பதுவே தமிழ் ஆர்வளர்களின் முதன்மை கேள்வியாக உள்ளது.
தனக்கென சுயமாக ஒரு கூரை இல்லாமல் ‘கொண்டெய்னர்’ எனும் கொள்கலன்களில் தமிழ் பள்ளிகள் ஆண்டுக் கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் அவலமான சூழ்நிலையும் கூட இன்னமும் நிலவுகிறது.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களுக்கான அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளுக்கு அளவிருக்காது.
நாட்டின் 222 தொகுதிகளில் நிறைய இடங்களில் இந்தியர்களின் வாக்குகள் முக்கியமெனக் கருதப்படுவதால் அத்தகையத் தொகுதிகளில் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டை வெளிப்படையாகவே காணலாம்.
எனினும் வெறும் வெத்து வேட்டான வாக்குறுதிகளுக்கு சோரம் போகாமல் விவேகமாக வாக்களிக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் தவளைகளையும், ஊழல்வாதிகளையும், காலங்காலமாக நம்மை ஏமாற்றி நமக்கு வரவேண்டிய ஒதுக்கீட்டை வழிமறித்து ஏப்பம் விடும் களவாணிகளையும் அடையாளம் காண்பது அவசியமாகும்.
‘ஆட்டுக் கறிக்கு அலையும் இனமில்லை நாங்கள்’ என்பதை தெள்ளத்தெளிவாக அத்தகைய அய்யோக்கிய அரசியல்வாதிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.
இப்படி துணிச்சலாக, விவேகமாக, தெளிவான சிந்தனையுடன் நாம் வாக்களித்தோமேயானால் எப்படிப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கும் அப்பால் நமது வாழக்கையை நாம் செம்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
இல்லையேல் பழைய குருடி கதவைத் திறடி எனும் நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாது.