தமிழை வளர்க்கும் மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது சமுதாயம்

இராகவன் கருப்பையா – இந்நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கி இருப்பதற்கு அயராது பாடுபடும் தரப்பினரில் உயர் கல்வி மாணவர்களின் பங்கு அளப்பரியது.

ஆனால் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ள நம் சமூகத்தின் பங்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களின் அலட்சியப் போக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது.

மலாயா பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற தமிழ்ப் பேரவையைப் போல ஏறத்தாழ இதர எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தற்போது தமிழ்ச் சங்கங்கள் துடிப்பாகச் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய ஒன்று.

அதோடு மட்டுமின்றிப் பல இடைநிலை பள்ளிகளிலும் கூட 4ஆம் 5ஆம் 6ஆம் படிவ மாணவர்கள் தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களுக்கு உரமூட்டி வருகின்றனர்.

குறிப்பாகத் தலைநகரில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பள்ளிகளான ‘சேண்ட் ஜோன்ஸ்’, வி.ஐ. மற்றும் எம்.பி.எஸ். போன்ற பிரசித்தி பெற்ற பள்ளிகள் இவ்விவகாரத்தில் முதன்மை வகிக்கின்றன.

தத்தம் கல்வி நிலையங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களில் மிகத் துடிப்பாகச் செயல்படும் மாணவர்களில் நிறைய பேர் தமிழ்ப் பள்ளி சென்றிராதவர்கள் என்பது வியக்கத்தக்க, வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம். ஆரம்பக் கல்வியை அவர்கள் தேசியப் பள்ளிகளில்  கற்றவர்கள்.

இந்நாட்டில் தமிழ் பள்ளிகளுக்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இன வெறிபிடித்த ஜந்துகளிடமிருந்து தொடர்ந்தார் போல் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் இந்த இளம் பிஞ்சுகளின் அளப்பரிய முன்னெடுப்பை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

பாராட்டோடு நின்றுவிடாமல் அவர்களை உற்சாகப்படுத்தி அவ்வப்போது அவர்கள் ஏற்பாடு செய்யும் கலை, கலாச்சார, இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தேவையான நிதியை வழங்கி ஊக்குவிப்பது நம் அனைவருடைய கடமையுமாகும்.

ஆனால் பெரும்பாலான வேளைகளில் அவர்களுடைய பெற்றோர்கள் மட்டுமே கடைசி நேரத்தில் கை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மிகுந்த உற்சாகத்தோடு சமூக இயக்கங்களையும் அரசியல் தலைவர்களையும் அணுகும்  அம்மாணவர்களுக்குப் பல சமயங்களில் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது.

சுயநலம் சார்ந்த பாராட்டு விழாக்களுக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் இலட்சக் கணக்கில் செலவிடும் அத்தகையோர், வருங்காலத் தலைமைத்துவத்தில் முதல் படி எடுத்து வைக்கும் எழுச்சி மிக்க மாணவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

தமிழ் நமது உயிர், தமிழ் வளர வேண்டும், தமிழ்ப் பள்ளிகள் தழைக்க வேண்டும், தமிழ்ப் பள்ளியே நம் தேர்வு, நமது பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என மேடைகள் தோறும் வீர முழக்கமிடும் அரசியல் தலைவர்கள் அம்மாணவர்களைப் பொறுத்த வரையில் வெறும் வெத்து வேட்டுகள்தான்.

அரசியல்வாதிகளின் அலுவலகங்களைப் பல தடவை ஏறி இறங்கி ஏமாந்த மாணவர்களும் அவமானப்பட்ட மாணவர்களின் சோகக் கதைகளும் ஏராளம்.

அரசியல் தலைவர்களுடனான தங்களுடைய கசப்பான அனுபவங்களைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பல மாணவர்கள் உள்ளூரக் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழை வளர்க்க வேண்டும் எனப் போலியாக வீர வசனம் பேசும் அத்தகைய தலைவர்களின் சாயம் மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துள்ளது வேடிக்கைதான்.

அப்படிப்பட்ட தலைவர்கள், தமிழுக்காக உண்மையாகப் பாடுபடும் மாணவர்களின் மரியாதையை இழந்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 18 வயதுடைய மாணவர் வர்க்கமும் வாக்களிக்கவிருப்பதால் அத்தகைய தலைவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.