காற்றுள்ள போதே தூற்றவில்லை: நட்டாற்றில் வேதமூர்த்தியின் கட்சி

இராகவன் கருப்பையா – முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி தொடக்கிய மக்கள் முற்போக்குக் கட்சி தற்போது இலக்கற்றுத் தவிப்பதாகத் தெரிகிறது.

அக்கட்சியின் அரசியல் சித்தாந்தம் அறிவு பூர்வமாக இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு மக்கள் விழிப்புணர்ச்சி நிலையும் அதன் உந்துதலுக்கு ஏற்ற காரணிகளும் வேண்டும்.

மலேசிய சோசியலிஸ்ட் கட்சி அடித்தளத்தில் வெகுவாக பங்காற்றினாலும், அவர்களால் வெகுசன மக்களின் ஆதரவை பெற முடியவில்லை. அதற்கு முதன்மையான காரணம் ஆழமாக ஊடுருவியுள்ள இனவாத அரசியலும் அதன் ஆதிக்கத்தன்மையும்தான்.

இந்நாட்டில் நம் இனத்தைச் சார்ந்த இதர குட்டிக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அக்கட்சியின் தோற்றுவிப்பு தனித்துவம் மிக்க ஒரு சிறந்த முன்னெடுப்புதான். ஏனெனில் அதன் தலைவர்களில் நிறையப் பேர் உயர் கல்வி பெற்றவர்கள் என்று நம்பப்படுகிறது.

இருந்த போதிலும் இதுநாள் வரையில் அக்கட்சி எந்தக் கூட்டணியுடனும் இணைய இயலாமல் ஏன் நற்றாற்றில் நிற்கிறது என்பதுதான் கேள்விக்குறி.

இந்நாட்டில் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி நாடளாவிய நிலையில் உள்ள எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் கூடப் பெரும்பான்மை வாக்காளர்களாக இந்தியர்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்.

எனவே எந்த ஒரு இந்தியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டால் அது தற்கொலைக்குத்தான் சமம் என்பதும் வெள்ளிடை மலை.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும் வேளையில், பல்வேறு தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இந்தியர்களின் வாக்குகள்தான் துருப்புச் சீட்டாக உள்ளது என நாம்தான் சுயமாகவே மார்தட்டிக் கொள்கிறோம்.

ஆனால் ஆளும் கூட்டணியோ பக்காத்தானோ இக்கூற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகவே தெரியவில்லை.

அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பாரிசானில் அங்கம் வகிக்கும் ம.இ.கா. கூடப் பூவோடு சேர்ந்த நாராகத்தான் காலத்தை நகர்த்துகிறது.

ஐ.பி.எஃப், எம்.யு.ஐ.பி. மற்றும் மக்கள் சக்தி போன்ற கொசுக் கட்சிகள் கூட அம்னோவுக்கு ஆதரவாக இருந்தால் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காலங்காலமாக அக்கட்சியின் வாசற்படியில் ஏங்கிக் கிடக்கின்றன.

இந்நிலையில் மக்கள் முன்னேற்றக் கட்சி சற்று மாறுபட்டு, பக்காத்தானுடன் இணைந்து செயலாற்றத் திட்டமிட்டிருந்ததைப் போல் தெரிகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான விண்ணப்பத்தைச் செய்ததாகவும் இனம் சார்பான ஒரு கட்சியைத் தங்கள் கூட்டணியில் சேர்க்க இயலாது என அதன் தலைவர் அன்வார் நிராகரித்துவிட்டதாகவும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இது பற்றியெல்லாம் தனக்கு எதுவுமே தெரியாது என ஜ.செ.க. தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் வெளியிட்ட அறிக்கைதான் அனைவரது புருவத்தையும் உயர்த்தியது.

பக்காத்தான் அரசாங்கம் கவிழ்வதற்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தின் போதுதான் வேதமூர்த்தியை தான் கடைசியாகப் பார்த்ததாக லோக் கூறினார்.

அப்படியென்றால் லோக் போன்ற முன்னணி எதிர்கட்சி அரசியல் தலைவர்களுடன் எல்லாம் வேதமூர்த்தி தொடர்பை வைத்துக் கொள்ளவில்லையா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

குறைந்த பட்சம் தீபகற்ப மலேசியாவில் எல்லா மாநிலங்களிலும் அக்கட்சி சிறகு விரித்துள்ளதா என்றும் தெரியவில்லை. தேசிய நிலையிலும் மாநில வாரியாகவும் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் குறித்தும் தெரியாது.

தங்களுக்குப் பின்னால் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் அக்கட்சியின் தலைவர்கள் நிரூபிக்கத் தவறிவிட்டதைப் போல் தெரிகிறது.

பல இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட ஒரு கட்சியை எந்தக் கூட்டணிதான் வேண்டாம் என்று விரட்டும்? ‘வெறும் கையில் முழம் போட முடியாது’ என வேதமூர்த்தி தெரிந்து வைத்திருக்க வேண்டாமா என்ன?தனது கட்சி அடிதட்டு மக்களின் நலனைக் காக்கும் என வேதமூர்த்தி பல முறை சூளுறைத்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

ஆனால் அக்கட்சி உறுப்பினர்கள் எத்தனை தடவை களத்தில் இறங்கி உதவி தேவைப்படும் மக்களைச் சந்தித்திருப்பார்கள்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு அக்கட்சியின் தலைமைத்துவம் பதில் தேட வேண்டும். இல்லையேல் அதன் இலக்கற்ற நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்!இருப்பினும் ஊழலற்ற போக்கில், மக்கள் பிரச்சைனைகளை ஓரளவு கையிலெடுக்கும் இக்கட்சி மக்கள் விழிப்புணர்வு பெற ஆய்வுகள் அடிப்படையில் தொடர்ந்து போராடலாம்.

சுரண்டல் வழி சுகம்காணும் கட்சிகளை விரட்ட,புறங்கையை சுவைக்கும்  மக்களும் மாற வேண்டும்.