15வது பொதுத் தேர்தல் – தேசிய முன்னணிக்குக் கடுமையான பரீட்சை

கி. சீலதாஸ் –மலேசிய கூட்டரசின் பதினைந்தாம் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டுமென அம்னோ தலைவர்கள் கடுமையாக வற்புறுத்துவதை அறிந்திருப்பீர்கள். இன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி அம்னோவின் துணைத்தலைவர், அம்னோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சாஹிட் ஹமீடி பல குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர்.

ஒரு வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களைச் செவிமடுத்த நீதிபதி, சாஹீட் எதிர்வாதம் முன்வைக்க தேவையில்லை எனத் தீர்ப்பளித்து அவரை விடுவித்துவிட்டார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக அரசின் தலைமை வழக்குரைஞர் அறிவித்துள்ளார். இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்றம் வரை போக வாய்ப்பு உண்டு. மதில் மீது குந்தியிருக்கும் பூனை எந்தப் பக்கம் பாயும் என்பதை அனுமானிப்பது கடினமே.

முடிந்த வழக்கு ஒரு புறமிருக்க மேலும் ஒரு குற்றவியல் வழக்கில் தொடர்பு கொண்டிருப்பவர் ஹமீடி. அந்த வழக்கு வேறொரு உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அவரும் பதினைந்தாம் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமெனப் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கிறார்.

இஸ்மாயில் சப்ரி இதோ அதோ என்பதோடு தனது அம்னோ மீதான விசுவாசத்தைக் கைவிடாதவர் போல் தெரிகிறது. அவரின் போக்கு அம்னோவின் நலனில்தான் இருக்கிறதே அன்றி நாட்டின் நலனிலும் மக்கள் நலனிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

அம்னோ தலைவர்கள் கடந்த இரண்டு மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அதே போல் வெற்றி காண முடியும் என்ற நம்பிக்கையில் பதினைந்தாம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

பதினைந்தாம் பொதுத் தேர்தலைத் துரிதப்படுத்துவதில் அம்னோவின் கரிசனம் ஏன் என்று ஆய்ந்துப் பார்த்தால் அதன் தலைமையில் இரண்டு மாநிலங்களில் கண்ட வெற்றியே என்பது புலப்படும். மலாக்கா, ஜொகூர் மாநிலங்களில் காணப்பெற்ற வெற்றியைத் தேசிய முன்னணிக்கு மக்கள் முழு ஆதரவு தர மனம் மாறிவிட்டனர் என்பது தவறான முடிவாகும்.

அரசியல் கணிப்பாளர்கள், அரசியல் ஜோசியர்கள் தேசிய முன்னணியின் வெற்றி நிச்சயம் என்கிறார்கள். ஆனால், தேசிய முன்னணியின் வெற்றியைப் பெரிதாக்க கருதுவது தவறு என்ற கருத்தும் நிலவுவதை ஒதுக்கிவிட முடியாது.

மலாக்கா, ஜொகூர் மாநிலங்களில் நடந்த துணைத்தேர்தல்கள் கோவிட்-19 பரவியிருந்த காலம். மக்கள் பீதியில் அவதியுற்றிருக்கலாம். அதே சமயத்தில், இஸ்மாயில் சப்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை கூட்டணி மீது தவறான பிரச்சாரத்தைப் பலப்படுத்த பல வியூகங்களைக் கையாண்டதைக் கவனித்திருக்கலாம்.

அந்தத் துணைத்தேர்தல்களின் போது முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்றிருந்ததும் துன் மகாதீர் முகம்மது, டான் ஶ்ரீ முகைதீன் யாசின் மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பையும் கவனத்திலிருந்து நீக்க முடியாது.

இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் மாநிலத் துணைத்தேர்தலின்போது அமைந்திருந்தது குறைவான மொத்த வாக்களிப்பு. எனவே, மலாக்கா, ஜொகூர் மாநிலங்களின் துணைத்தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு பதினைந்தாம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற குருட்டு நம்பிக்கை தவறானதாகும்.

வரும் பொதுத் தேர்தல் எப்படி இருக்குமெனச் சிந்தித்துப் பார்க்கும்போது அம்னோ தலைமையில் இயங்கும் தேசிய முன்னணி பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிவரும். குறிப்பாக, ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்ற நம்பிக்கை கூட்டணியைக் கவிழ்த்த பெருமை டான் ஶ்ரீ முகைதீன், டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி போன்றோர்க்கு உண்டென்று மக்கள் அறிவர்.

அநாகரீகமான கட்சித்தாவல் கலாச்சாரத்தைப் பயன்படுத்தி, ஊக்குவித்து மக்களைத் தோற்கடித்தனர் முகைதீன், அஸ்மின் ஹாடி குழு. அதற்குப் பெயர் மலாய்க்கார ஒற்றுமை என்ற நாமம் சூட்டப்பட்டது. அந்தக் கபட நாடகம் நடந்தேற, அரங்கேற மகாதீரின் தவறான போக்கும் காரணம் என்றால் தவறல்ல.

ஆகமொத்தத்தில், மக்களை வஞ்சித்தவர்களின் கூட்டணி வெற்றி கண்டது. வஞ்சனையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பெற்ற கூட்டணிக்குத் தலைமை தாங்கிய முகைதீனின் ஆட்சி நீடிக்கவில்லையே. ஏன்?

சூழ்ச்சிக்கு முழு ஆதரவு தந்த அம்னோவுக்குப் பிரதமர் பதவி தேவை. அது கைக்கு வந்தால் அம்னோ தலைவர்களின் மீதான குற்றவியல் வழக்குகளுக்கு ஒரு தீர்வு காணலாம். ஆமாம், வழக்குகள் திரும்பப் பெறலாம். நாட்டைச் சுரண்டியவர்கள் ஊழற் பெருச்சாளிகள் மீண்டும் சுதந்திரமாகத் திரியலாம். மேலும், நாட்டின் செல்வத்தைச் சுரண்டலாம், சூறையாடலாம்.

சுரண்டலுக்குப் புது நீண்ட வாழ்வு. சுரண்டல்வாதிகள் மறுபடியும் மக்களை ஏமாற்றலாம். அவர்களின் ஏமாற்றுவித்தைகளுக்கு முடிவே இருக்காது. இந்தச் சுரண்டல்காரர்களுக்குத் தலைமை தாங்கப் போவது யார்?

மக்களைத் தொடந்து ஏமாற்றலாம். அதற்கு இனம், சமயம், அரசியலைப் பலப்படுத்தலாம் என்ற நம்பிக்கை பலம் பெற்று வருவதை மலேசிய மக்கள் உணராமல் இருக்கிறார்கள் என்பது தேசிய முன்னணி தலைவர்களின் கருத்தாகும். இவர்களுக்கு உடந்தையாக இருப்பது டான் ஶ்ரீ ஹாடி அவாங் தலைமையிலான பாஸ் கட்சி.

வரப்போகும் பதினைந்தாம் பொதுத் தேர்தலில் எப்படிப்பட்ட தலைவர்கள் அவர்களின் கொள்கையும், நோக்கமும், அணுகுமுறையும் எப்படி இருக்குமென்று மக்கள் அறிவது நல்லது.

அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடியின் பேச்சுகளைக் கவனித்தால் அவர் தன் சொந்த நலனில், கட்சி நண்பர்களின் நலனில் காட்டும் அக்கறை நாட்டு நலனில் காட்டப்படுவதை விட மிகுந்திருப்பதைக் காணலாம். அம்னோ மறுபடியும் தமது சர்வதிகாரத்தைப் பயன்படுத்த தயாராகிவிட்டது.

அது தலைமை தாங்கும் தேசிய முன்னணியின் பங்காளிகள் அம்னோவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சாஹிட்டின் மூர்க்கத்தனமான கருத்துகளில் ஒன்று. ஒரு வழக்கு விசாரணையின் போது அரசு வழக்குரைஞரைப் பார்த்து, “உம்மால் அமைச்சராக முடியாது!” என்கிறார். அதில் மிளிரும் திமிரைப் பாருங்கள்.

பாஸ் கட்சியின் தலைவர் அவாங், ஊழலைப் பற்றி குறிப்பிடும்போது அது மலாய்க்காரர் அல்லாதவர்களால் வளர்க்கப்பட்ட கலாச்சாரம் என்று பொருள்பட பேசியதைத் தேசிய முன்னணி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

சட்டப்படி கடமையைச் செய்தால் ஊழல் கொடுக்க வேண்டியதில்லைதான். ஆனால், அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யாமல் கையூட்டை எதிர்பார்த்தால் அதுவல்லவா குற்றம். அந்தக் கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் யார்? அவாங் ஹாடி போன்றவர்கள் எந்த உலகில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை.

அடுத்து, ஜனநாயகச் செயல்கட்சியைக் கண்டால் மஇகாவுக்குக் கிலி கண்டுவிட்டது போல் இருக்கிறது. கட்சியின் துணைத்தலைவர் டத்தோ சரவணன், நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் ஜனநாயகச் செயல் கட்சியின் சொற்படிதான் ஆட்சி நடக்கும் என்ற கூற்று புதுமையானதோ விநோதமானதோ அல்ல.

அம்னோவின் பிரச்சாரம் அது. அதற்கு உடந்தை பாஸ் கட்சி. அவர்கள் சொன்னதைத் திரும்பச் சொல்லும் சரவணன் போன்றோர் அறிவுடைய கருத்தை எதையும் சொல்ல மாட்டார்கள் என்பது தெரியும்.

இத்தகையோரிடமிருந்து உருப்படியான கருத்து எதையும் எதிர்பார்க்கக்கூடாது. எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். பிறரின் நிறமையில் குறை காண்போர், வீண் பழி சுமத்துவோர் பொறாமையின் உறைவிடம் என்றாலும் பொருந்தும்.

இப்படிப்பட்டவர்களிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கலாமா என்ற கேள்வியை மலேசிய வாக்காளர்கள் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.

மலாக்கா, ஜொகூரில் தேசிய முன்னணி கண்ட வெற்றி பதினைந்தாம் பொதுத் தேர்தலில் பிரதிபலிக்காது. ஏன் தெரியுமா?

மக்கள் மகாதீர், முகைதீன் போன்றோரை நம்ப மாட்டார்கள். இளைஞர் சைது சடிக்கின் ஐக்கிய மலேசிய ஜனநாயகக் கூட்டணி மலேசிய அரசியலில் புது சகாப்தத்தை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறியை ஜொகூர் மாநில துணைத்தேர்தலின் போது உணர்த்தப்பட்டது.

இந்த உண்மையைத் தேசிய முன்னணிக்குத் தலைமை தாங்கும் அம்னோ இன்றுவரை உணர மறுக்கிறது. அதுவே தேசிய முன்னணியின் தோல்விக்கு காரணமாக அமையும்.