இராகவன் கருப்பையா- பிரதமர் சப்ரி தனது பெரா தொகுதியில் இந்தியர் ஒருவரின் இல்லத்தில் தோசை சுடுவதைப் போலவும் முறுக்குப் பிழிவதைப் போலவும் பாசாங்கு செய்தக் காட்சிகளை கடந்த வாரத்தில் பத்திரிகைகளிலும் சமூக வலைத் தலங்களிலும் காண முடிந்தது.
இத்தகைய அரசியல் ‘டிராமா’க்கள் மலேசியர்களைப் பொறுத்த வரையில் புதுமையான ஒன்றல்லை.
காலங்காலமாக ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும் வேளைகளில் நம் நாட்டின் அரசியல்வாதிகள் மக்களைக் கவருவதற்கு இப்படித்தான் நாடகமாடி வருகின்றனர்.
சில சமயங்களில் வீட்டிற்குள் புகுந்து தரையில் அமர்ந்து அங்கு உள்ளவர்களோடு உணவு அருந்துவதும் படுத்தப் படுக்கையாகக் கிடக்கும் முதியோருக்கு உணவு ஊட்டுவதைப் போலவும் கூட அவர்கள் பாசாங்கு செய்துள்ளனர்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கூடவே பத்திரிகை புகைப்படக்காரர்களையும் அவர்கள் கையொடு அழைத்து வந்துவிடுவார்கள்.
இத்தகைய செயற்கையான அரசியல் விளையாட்டுகள் எல்லாம் மக்களுக்குப் புளித்துப் போன, காலத்திற்கு ஒவ்வாத வீண் நடவடிக்கைகள் என்பது அந்த அரசியல்வாதிகளுக்குத் தெரியாது போலும்!
மக்கள் நன்றாகவே விழித்துக் கொண்டுள்ள தற்போதைய தவீன யுகத்தில் இதுபோன்ற சில்லறைத்தனங்கள் எல்லாம் எடுபடாது என்பதை அத்தகைய அசட்டு அரசியல்வாதிகளுக்கு வாக்காளர்கள்தான் உணர்த்த வேண்டும்.
இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களின் மத்தியில் தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக அதனைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
எங்கிருந்துதான் திடீரென வருகிறதோ தெரியவில்லை, கோயில்களுக்கு ம.இ.கா. சரமாரியாக மானியங்களை வழங்குகிறது. இதுநாள் வரையில் கேற்பாரற்றுக் கிடந்த, நகர்ப் புறங்களுக்கு அப்பால் உள்ள வழிபாட்டுத் தளங்கள் கூட இதனால் பயனடைகின்றன.
இதற்கிடையே ‘ம.இ.கா. என்றும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் மீது அக்கரைக் கொண்டுள்ளது’ என்னும் ஒரு அறிவிப்பு.
தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் கூட மாற்று இன அரசியல்வாதிகளின் கண்களில் தற்போது தென்படத் தொடங்கியுள்ளது.
‘நூற்றுக் கணக்காண இந்துக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு மற்றும் பரிசுப் பொட்டலங்கள்’ போன்றச் செய்திகள் பத்திரிகைகளில் தினமும் வந்த வண்ணமாகவே உள்ளன.
மலாய்க்காரர்கள் மட்டுமே இந்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் எனும் இனவெறியில் அரசியல் தவளையாக மாறிய மூத்த அமைச்சர் அஸ்மின், ‘இந்திய சமுதாயத்தின் மேன்மைக்கு தங்கள் கூட்டணி முன்னுரிமை வழங்கும்’ எனும் அறிவிப்பை செய்தது வேடிக்கைதான்.
கோயில் மறு சீரமைப்புக்கு நிதியுதவி வேண்டும் என விண்ணப்பம் செய்து நான்கே நாள்களில் 50,000 ரிங்கிட்டை அஸ்மின் ரொக்கமாக வழங்கியதாக செலாயாங் பாருவில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகஸ்தர்கள் பெருமையாக அறிவித்தனர். எந்த காலத்தில் இப்படிப்பட்ட ‘மேஜிக்’ நடந்துள்ளது!
இந்தியர்களின் கல்வி, பொருளாதாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என சப்ரி ஒரு அறிவிப்பை செய்தார்.
இதைத்தானே ஆண்டாண்டு காலமாக நம் சமூகம் கேட்டுக் கொண்டிருக்கிறது! இப்போதுதான் அவர்களுக்குக் கண் திறந்ததா? இது போன்ற வெத்து வேட்டு அறிவிப்புகளைக் கேட்டுக் கேட்டு நம் சமூகம் அலுத்துப் போகவில்லையா! இதில் என்ன புதுமை வேண்டிக் கிடக்கிறது?
கெடா, கூலிமில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு புதிய தார்ச்சாலை போடப்பட்டது என பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா அறிவித்தார்.
எத்தனை ஆண்டுகளாக அச்சாலை மோசமாக இருந்தது, எப்படியெல்லாம் நம் பிள்ளைகள் அவதிப்பட்டார்கள் என்று தெரியாது.
ஆக இது போன்ற நூற்றுக் கணக்கான அறிவிப்புகளும் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளும் பத்திரிகைகளில் வந்த வண்ணமாகவே உள்ளன.
நாட்டின் நிலைமையையும் மக்களைத் தாழ்ந்து மதிப்பீடு செய்யும் சில அரசியல் கோமாலிகளின் போக்கையும் நன்கு ஜீரணித்துள்ள வாக்காளர்கள் அடுத்த மாதம் 19ஆம் தேதி தங்களுடையத் தீர்ப்பை நியாயமாக வழங்குவார்கள் என்று எதிபார்க்கலாம்.