மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பார்க்காதவர்களோ அறியாதவர்களோ மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம். கடந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் எனப் புகழ்வாய்ந்த இராமலிங்க பிள்ளையின் படைப்பு தான் அது.
இராமலிங்க பிள்ளை பழுத்த காங்கிரஸ் தீவிரவாதி. மகாத்மா காந்தி உருவாக்கிய சத்தியக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை அனுபவம் பெற்றவர். 1931ஆம் ஆண்டு அவரின் அரசியல் நடவடிக்கையின் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உருவானதுதான் கற்பனை காவியம் மலைக்கள்ளன்.
1954ஆம் ஆண்டு நாமக்கல்லாரின் காவியம் திரைப்படமாக்கப்பட்டது. அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் மு. கருணாநிதி. நாமக்கல்லார் தமது மலைக்கள்ளனில் இராமாயணப் பெயர்கள், சம்பவங்களைப் உவமைகளாகப் பயன்படுத்தினார்.
கருணாநிதி நாஸ்திகக் கட்சியைச் சேர்ந்தவர். அதோடு இராமாயணத்தை எதிர்ப்பதில் மும்முரமாக இருந்த காலம் அது. கதையின் மூலத்தில் யாதொரு மாற்றமும் ஏற்படுத்தாமல், பகுத்தறிவு என்ற நாகரீக காலத்தின் எண்ண அலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படத்தின் வசனங்களை அமைத்துவிட்டார் கருணாநிதி.
மலைக்கள்ளன் திரைப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்), கதாநாயகியாக நடித்தவர் புகழ்வாய்ந்த பி.பானுமதி. அந்தப் படத்தில் ஓர் அற்புதமான காட்சி இடம்பெற்றிருந்தது. பானுமதி குதிரையில் அமர்ந்து வர, எம்.ஜி.ஆர் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாறு பாடிக்கொண்டு நடந்து வருவார்.
அந்தப் பாடலை இயற்றியவர் நாமக்கல்லார், பாடியவர் டி.எம். சவுந்தரராஜன். அவரின் பாடலில் சில திருத்தங்களைச் செய்து பாடப்பெற்றது. ஆனால், திருத்தப்படாத திரைப்படப் பாடலில் சேர்க்கப்படாத சில வரிகளைப் படிக்கும்போது இன்று கூட நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்?” என்ற பாடல்தான் அது. ஒதுக்கப்பட்ட வரிகள். நாகரீக அரசியலையும், அரசியல்வாதிகளின் மனோபாவத்தையும், ஏமாற்றுவித்தைகளையும் வெளிப்படுத்துகின்றன.
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, நம் நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே”
அந்தப் பாட்டு இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது உண்மை. அதன் பொருள் எல்லா நாடுகளுக்கும், குறிப்பாக ஜனநாயகத்தைப் பேணும் நாடுகளுக்கு எப்பொழுதும் பொருந்தும். நாமக்கல்லார் யாரைப் பார்த்து கேட்கிறார்? சாடுகிறார்? மக்களைப் பார்த்து கேட்டார். பாடினார். ஏமாற்றுபவர்களையும் பார்த்து கேள்விக்கனைகளை வீசுகிறார். அடுத்து,
“சத்தியம் தவறாத
உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும்
கொள்ளை அடிக்கிறார்!”
என்று குத்துகிறார். அரசியல் அதிகாரத்துக்காக போட்டிப்போடும் அரசியல் கட்சித் தலைவர்கள் சத்தியம் தவறாதவர்கள் போல் நடிக்கிறார்கள். சமயம் பார்த்து, அதாவது சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். உண்மை நிலவரம் அல்லவா? மேலும் ஒரு படி சென்று,
“பக்தனைப் போலவே
பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை
வலையினில் மாட்டி
எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம்தான்”
என்று கேட்கிறார். இதுவும் நமக்குப் பழக்கப்பட்டுப்போன சமாச்சாரம்தானே!
அந்தத் திரைப்பட பாடலில் சேர்க்கப்படாத சில வரிகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஏறத்தாழ அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லார் பாடிய அந்த வரிகள் இன்று கூட சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்த நாட்டிலும் நடக்கிறது. அதிகார வெறி கொண்ட அரசியல்வாதிகளின் கையில் நிறைய பணம் குவிந்துவிட்டது. அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பாமரங்களை மயக்கி, ஏமாற்றி அவர்களின் வாக்குகளுக்கு விலை பேசுகிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு பணம் எப்படி கிடைத்தது? யாராவது கேட்கிறார்களா? கேட்டால் பதில் தரும் எண்ணம் இருக்கிறதா? சந்தேகம்தான்.
“பேச்சினில் மட்டும் வீரம்
இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம்
அதை மறப்பதும் இவரது பழக்கம்”
எனச் சாடுகிறார். வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் தயக்கம் இருக்கா! ஆனால், அவற்றை மறந்துவிடுவதும் அவர்களின் வழக்கம். அவர்களின் குணத்தை விட்டாரா நாமக்கல்லார்? இல்லை. தொடர்ந்து பாடுகிறார்.
“எவரது காலையும் பிடிப்பார்
விடுக்கென வாரியும் விடுவார்“
மலேசிய வாக்காளர்களுக்கு இது தெரியாத விஷயமா?
“பணத்தினை வாரியே கொடுப்பார்
கிழவியைக் கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து
அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்”
“நான் உங்களில் ஒருவன் என்பார்
வென்றதும் யார் நீ என்பார்”
இவையாவும் புதியவையா? கிடையாது! இந்த நாட்டில் இது பகிரங்கமாக நடக்கிறது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் பல கோடி ரிங்கிட் தம் கணக்கில் வந்ததை விளக்கும்போது அது இந்த நாட்டு தேர்தல் செலவுக்காக அரபு நாட்டு இளவரசர் தந்ததாகச் சொன்ன விளக்கத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இந்த நாட்டு அரசியலில் அந்நிய நாட்டுக்காரர்களுக்கு என்ன கரிசனம் வேண்டியிருக்கிறது? இந்த நாட்டு அரசியலில் தலையிட அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நஜீப் சொன்னது உண்மையானால் நம் நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்க பிற நாட்டவர்களின் பண உதவி தேவையா?
அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த நாட்டு மக்களின் வாக்குகளுக்கு விலை பேசுவதற்காகவா? இப்படிப்பட்டவர்களின் ஊழல் குணம் மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி தங்களின் சுயநலத்துக்கு அல்லவா பணத்தைச் செலவு செய்கிறார்கள்? ஜனநாயகம் என்றால் மக்கள் பண வலிமை கொண்டவர்களின் கை பாவையாக இருக்க வேண்டுமா?
நாமக்கல்லார் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஜனநாயகத்தில் மோசடிக்காரர்களின் கை ஓங்கியிருக்கும் என்பதை நினைவுறுத்துகிறது. அவர் விடுத்த எச்சரிக்கை எதற்கு? ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஒதுக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவரின் கருத்தாழமிக்க பாடல் இந்த நாட்டுக்குப் பொருந்தும். வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதுவரை ஏமாந்தது போதும். உறங்கியது போதும். விழித்தெழுந்து ஜனநாயகக் கடமையை நேர்மையான எண்ணத்துடன் செய்ய வேண்டும். பணம் கிடைக்கிறதே என்பதால் வாக்கை விலை பேசி வாங்கியவர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் கொடுத்ததை எப்படி திரும்பப்பெறுவது என்பதில்தான் அவர்களின் முழு கவனம் எல்லாம். அதற்காகப் பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கமாட்டார்கள். அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் சட்டத்தையும், நீதியையும் துச்சமென நினைப்பார்கள். அதற்கு இடம் தரலாமா?
நாமக்கல்லாரின் பாட்டைப் பாடுபவர்கள், செவிமடுத்தவர்கள் தேர்தல் ஊழலுக்கு இடமளிக்காமல் நடந்து கொள்வது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையாகும். பணத்துக்காக வாக்களிக்க முற்படுவது இழிவான செயல். வாக்குக்காகப் பணம் கொடுப்பவர்கள் கயவர்கள்; கயவர்களிடமிருந்து பணம் பெறுவோரின் தரத்தை வேறுவிதமானது என்று சொல்ல முடியுமா? முடியாது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? ஏமாற்றுபவர்கள் திருந்தமாட்டார்கள். மக்கள்தான், வாக்காளர்கள்தான் திருந்த வேண்டும். இந்த நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம்தான் இருக்கிறது. இந்த நாட்டைத் தீயச் சக்திகளிடமிருந்து காப்பாற்றும் பொறுப்பு மலேசியர்களுக்கு உண்டு. காப்பாற்றுவார்களா?