தேர்தலில் இந்திய பெண்களின் பங்கெடுப்பு புறக்கணிக்கப்படுகிறது

இராகவன் கருப்பையா – நாடு தழுவிய நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில் வேட்பாளர் அறிவிப்புப் படலம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பக்காத்தான் ஹராப்பானும் தேசியக் கூட்டணியும் மாநில வாரியாக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் வேளையில் பாரிசான் இன்னமும் மவுனமாகவே உள்ளது.

எனினும் இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலை கண்ணோட்டமிடும் பட்சத்தில் நமக்கு மிகுந்த ஏமாற்றம்தான் வெளிப்படுகிறது.

ஏனெனில் கிட்டதட்ட எல்லா கட்சிகளுமே (PKR தவிர) நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு இந்தியப் பெண்களை ஓரங்கட்டியுள்ளதைப் போல் தெரிகிறது.

கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் வீரப் பெண்மணியாக கர்ஜித்த கஸ்தூரி பட்டு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து நமக்கு இருந்த ஒரே பிரதிநிதித்துவம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதைப் போல் தெரிகிறது.

கடந்த இரண்டு தவணைகளிளும் அதிகப் பெரும்பாண்மை வாக்குகளில் பினேங், பத்து கவான் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட கஸ்தூரி, தன்னிச்சையாக விலகினாரா அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டாரா என்று தெரியவில்லை.

அத்தொகுதியில் மாநில முதலமைச்சர் சோ குவான் யோ போட்டியிடப் போவதாகவும் அவருடைய தஞ்சோங் தொகுதியில் ஜ.செ.க. தலைவர் லிம் குவான் எங்கின் தங்கை லிம் ஹுய் யிங் போட்டியிடப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

பினேங் மாநில ஜ.செ.க.வின் செயலாளரான ஹுய் யிங் கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து ஒரு செணட்டராக நியமனம் செய்யப்பட்டார். மற்றபடி அவருக்கு எவ்வித அரசியல் அனுபவமும் இல்லை.

அவருக்கு வழிவிடுவதற்காகத்தான் கஸ்தூரி பின்வாங்கியிருக்கக் கூடும் என்று இப்போது நமக்கு நினைக்கத் தோன்றுகிறது. திரைமறைவில் என்ன நடந்தது என்று நிச்சயம் காலம் பதில் சொல்லும். கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரத்தானே வேண்டும்!

எண்ணற்ற சீனப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் ஜ.செ.க., இந்தியப் பெண்களை ஏன் உதாசினப்படுத்துகிறது எனும் மக்களின் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது.

இதுவரையில் 2 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே நம் இனப் பெண்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புந்தோங் தொகுதியில் துளசி மணோகரனும் மாலிம் நாவார் தொகுதியில் பவானி வீரையாவும் களம் காணவிருக்கின்றனர்.

பகாங் மாநிலத்தில் அதிகாரப்பூர்மாக இன்னும் அறிவிக்கப்படலில்லை என்ற போதிலும் சபாய் தொகுதியை காமாச்சி துரைராஜு தற்காத்துக் கொள்வார் என்று தெரிகிறது.

ஜ.செ.க. தலைமைத்துவம் குறைந்த பட்சம் இவரையாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உயர்த்தியிருக்கலாம்.

சபாய் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான காமாச்சி கடந்த 2 தவணைகளிலும் மகத்தான வெற்றி பெற்று கோலோச்சியவராவார்.

எப்போதுமே களத்தில் இருக்கக் கூடிய ஒரு சிறந்த சேவையாளரான அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பி.கே.ஆர். கட்சியிலும் நம் பெண்களுக்கு இதே நிலைதான். ஏறத்தாழ 80  தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சி ஒரு இந்தியப் பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளது.

பேராக் தாப்பா தொகுதியில் அதன் நியமன தேசிய உதவித் தலைவர் சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுவார் என பக்காத்தான் தலைவர் அன்வார் நேற்று அறிவித்து வரவேற்கத்தக்கது. இருப்பினும் பி.கே.ஆர். கட்சியில் அடிமட்டத்தில் இருந்து உழைத்த பெண்மணிகள் பலர் இருக்கையில் இவருக்கு வாய்ப்பளித்தது ஆச்சரியமாக இருக்கிறது.

ம.இ.கா.வைப் பொறுத்த வரையில் அதன் மகளிர் அணித் தலைவிக்கு நாடாளுமன்ற வாய்ப்புக் கொடுக்கப்படுவது அக்கட்சியின் பாரம்பரியம். அவ்வகையில் மோகனா முனியாண்டி உலு லாங்ஙாட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தக் கட்சிக்கு அம்னோ எத்தனைத் தொகுதிகளை வழங்கினாலும் பெண்களுக்கு அவர்கள் வழங்கும் ‘கோட்டா’வும் எப்போதுமே ஒன்றுதான்.

எனவே அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பவர்களை இடுப்பொடிக்கும் யுகத்தில் உலாவரும் நம் இன மங்கைகளை இனி வரும் காலங்களிலாவது அரசியல் கட்சிகள் ஓரங்கட்டக் கூடாது!