இராகவன் கருப்பையா- தொடர்ந்தாற்போல் 3 தவணைகளுக்கு கிள்ளான் தொகுதியில் மக்களின் நாயகனாக விளங்கிய சார்ல்ஸ் சந்தியாகோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது தொர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
சந்தியாகோவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குமுறும் அத்தொகுதி மக்களின் கோபம் இன்னமும் தனியாத நிலையில் ஜ.செ.க.வுக்கு எதிர்பாராத அளவு அங்குப் பின்னடைவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அத்தொகுதியில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள கணபதிராவுக்கு இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது.
கடந்த 14 ஆண்டுகளாக கிள்ளான் தொகுதியில் மிகச் சிறப்பான வகையில் சேவையாற்றி வந்த சந்தியாகோவை நீக்கவேண்டாம் என பல்வேறு அமைப்புகள் உள்பட பெருவாரியான மக்கள் ஜ.செ.க.விடம் மன்றாடினார்கள்.
ஆனால் ஜ.செ.க. தலைமைத்துவமும் அதன் சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந் சிங்கும் கொஞ்சமும் மசியவில்லை.
விளக்கம் கோருவதற்காக தன்னை சந்திப்பதற்கு முயற்சித்த அத்தொகுதி மக்களையும் கூட கோபிந் சிங் புறக்கணித்தார். இதனால் கிள்ளான் வாக்காளர்கள் மேலும் சினமடைந்துள்ளனர்.
அடுத்த தவணை அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று சந்தியாடோவிடம் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என கோபிந் கூறியதை சந்தியாகோ மறுத்தார். இதனால் கோபிந் மீதும் ஜ.செ.க. மீதுமான அவர்களுடையக் கோபம் இரட்டிப்பானது.
ஒரு பொருளாதார வல்லுனரான சந்தியாகோ எப்போதுமே மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவராவார்.
நாட்டின் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகச் சிறப்பாக சேவையாற்றக் கூடியவர்களில் ஒருவர் என்று கருதப்படும் அவர் சரளமாக தமிழ் பேசும் ஆற்றலைக் கொண்டவர்.
மிகவும் எளிமையானத் தோற்றமுடைய அவர் உடனுக்குடன் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் வல்லவர்.
கடந்த ஆண்டு இறுதியில் மோசமான வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்ட போது அல்லும் பகலும் களமிறங்கி மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் இன்றும் பேசப்படுகிறது.
கிள்ளான் மக்களின் அபிமான நட்சத்திரமாக விளங்கும் சந்தியாகோதான் தங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என நூற்றுக்கணக்கான அரசு சாரா இயக்கங்களும் இதர அமைப்புகளும் ஒருசேர ஜ.செ.க.விடம் கோரிக்கை விடுத்தன. இருந்த போதிலும், அவ்வளவும் செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி காற்றில் கரைந்தது.
அவர் மீது குறை கண்டுபிடிக்க இயலாத கோபிந் சிங்கும் கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோனி லொக்கும் தங்களுடைய முடிவை நியாயப்படுத்துவதற்கு இரண்டொரு விடயங்களை திரித்துக் கூற முற்பட்டனர்.
அதற்கு பதிலுரைத்த சந்தியாகோ, தம்முடைய நெறியையும் சுயமரியாதையையும் களங்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் ஊழல் அரசாங்கத்தை ஒழித்துக்கட்ட நாம் அனைவருமே பாடுபட வேண்டும் எனவும் கணபதிராவுக்கு வாக்களிக்கும்படியும் பெருந்தன்மையோடு அவர் கூறிவருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று.
ஆனால் ஜ.செ.க. மீது கடுமையாகக் கோபமடைந்துள்ள கிள்ளான் வாக்காளர்கள் கணபதிராவுக்கு எவ்வாறான ஆதரவளிப்பார்கள் என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
அக்கட்சிக்கான ஆதரவில் இப்போது தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் கணபதிராவுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை அது ஏற்படுத்தும் எனும் அச்சமும் நிலவுகிறது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதிராவும் ஒரு சேவையாளர்தான். எனினும் இந்த கிள்ளான் தொகுதி விவகாரத்தில் அவர் ஒருதலைப்பட்சமாக இருந்தது, கட்சி அரசியல் என்பது ஒரு சதுரங்க போட்டி எனக்காட்டியது.
இந்நாட்டு அரசியல் கட்சிகளிலேயே சற்று கட்டுக் கோப்பானக் கட்சி எனும் நற்பெயருடைய ஜ.செ.க.வின் தலைமைத்துவம் இம்முறை வாக்காளர்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி, தான்தோன்றித்தனமாக செய்யும் சில அதிரடி முடிவுகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இருப்பினும், மக்கள், தேசிய முன்னணிக்கு ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை பண அரசியலால் அதிகமாகும் என எதிர்ப்பார்க்கலாம். அதோடு கொள்கை கோட்பாட்டுடன் சேவையாற்றிய சார்ல்ஸ்சை ஒதுக்கியது ஒரு நல்ல தீர்வா? என்ற வினாவுக்கு விடை தேடுபவர்கள், தங்கள் நிலைப்பட்டை மாற்றமல் இருக்கவும் வேண்டும்.