வாக்குரிமையைப் பயன் படுத்த ஊக்குவிக்கப்பட  வேண்டும். – மு. குலசேகரன்

மலேசியர்களின் வாக்குரிமையைப் பயன் படுத்த அனைத்து தரப்பினரும் ஊக்குவிக்கப்பட  வேண்டும். மக்களாட்சி என்பது வாக்குரிமையில் இருந்து தொடங்கிகிறது.

புதிய அரசை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனைத்து மலேசியர்களும் இருக்கின்றோம். சிலருக்கு வெளியில் சென்று வாக்களிப்பதில் சிக்கல்கள்  இருக்கலாம். சிலர் வேலை முடிந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கலாம்.

சனிக்கிழமை தேர்தல் நாள் என்பதனால் வெள்ளிக்கிழமையே போக்கு வரத்து நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான். போக்குவரத்து சிரமம் ஒருபுறம் இருக்கச் சிலருக்குப் பண நெருக்கடியால் கூட வாக்களிக்க இயலாமல் போகலாம்.

வழக்கமாக  மாதச் சம்பள ஊழியர்கள் அதனை 19ஆம் தேதிக்கு முன்பாக  பெற முடியாத காரணத்தினால் சிலர் வாக்களிக்காமல் இருக்கலாம்.

இதனை கருத்தில் கொண்டு  நாட்டிலுள்ள முதலாளிமார்கள் தங்களின் பங்கை ஆற்றும் வகையில் அவர்களின் கீழ் வேலை செய்வோருக்கு  இம்மாதச் சம்பளத்தை நவம்பர் 19ஆம் தேதிக்குள் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சில முதலாளிமார்களுக்கு இது சாத்தியம் இல்லாமல் இருந்தாலும் கூட நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு மீண்டும் இது குறித்து மறு பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

பணக்கஷ்டத்தினால் வாக்களிக்கத் தடுமாறுவோருக்கு இது பேருதவியாக இருக்கும்.

இன்னும் கூடுதல் சலுகையாக கிள்ளான் பள்ளத்தாக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு  வெள்ளிக்கிழமை காலையிலேயே விடுப்பு கொடுத்தால், அவர்கள் வெளி மாநிலங்களுக்கு  மாலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து  விரைவில் வீடு போய்ச் சேர மிகவும் உதவியாய் இருக்கும்.

அல்லது வெள்ளிக்கிழமை அன்று வீட்டிலேயே இருந்த வேலை செய்ய  அனுமதி அளித்தாலும் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அப்படி  பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றினால்  திங்கள் கிழமை விடுமுறை என்று அறிவிப்பு செய்தால் அது இன்னும் அதிகமான மக்கள் வாக்களிக்க வர ஊக்குவிக்கும்.

கணிசமான எண்ணிக்கையிலான   அரசு சாரா இயக்கங்களும் பொதுச் சேவை நிறுவனங்களும் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க இலகுவாக இலவச போக்குவரத்து சேவையை  ஏற்பாடு செய்திருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதோடும் எனது நன்றியையும்  தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பிரச்சாரம் செய்யும் போது, சில நிறுவனங்கள், அவர்களின் ஊழியர்கள் வாக்களிக்க உதவி செய்யும் வகையில்  தங்களின் நடவடிக்கைகளை   வெள்ளிக்கிழமையன்று  நிறுத்தப்போவதாகக் கூறினார்கள். இந்த தேர்தலுக்காக  அவர்கள் செய்யும் இந்தத் தியாகம் பாராட்டுக்குரிய ஒன்று.

தேசிய முன்னணி கடந்த 14ஆவது பொதுத்தேர்தலைப் புதன் கிழமை அன்று அறிவித்து வாக்காளர் வருகையைக் கட்டுப்படுத்த முயன்றும் அதனை முறியடித்து  83.2% மக்கள் வாக்களித்தனர்.

இந்த முறை வெள்ளக் கால கட்டத்தில் தேர்தலை அறிவித்து அதே போன்று வாக்காளர் வருகையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் தேசியை முன்னணியை வீழ்த்த மக்கள் அனைவரும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குலா – நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் -ஈப்போ பாராட்