முன்னால் நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழ்தது ஒரு சகுனித்தனமானதா?

கி.சீலதாஸ் – 2015ஆம் ஆண்டில் வடிவம் கண்ட நம்பிக்கை கூட்டணி நான்கு கட்சிகளின் ஒற்றுமையுடன் 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலைச் சந்தித்தது. மக்களின் புரட்சிகரமான தீர்ப்பானது நாட்டின் அரசியல் பாதையில் புது திருப்பத்தைக் காணும் என்ற நம்பிக்கையைத் தந்தது.

நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்றும், இரண்டு ஆண்டுகளில் சிறையில் வாழ்ந்து கொண்டிருந்த டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் பிரதமராவார் என்ற உறுதியும் நாட்டுக்கு அளிக்கப்பட்டது. இது நம்பிக்கை கூட்டணி கண்ட ஒப்பந்தமாகும்.

மகாதீர் அம்னோவில் இணைந்து பல வருடங்களாகிவிட்டன. பழைய அம்னோவின் பதிவு ரத்து பெறும்போது அக்கட்சியின் தலைவராக இருந்தவர். புது அம்னோ (அம்னோ பாரு) உதயம் பெற காரணியாக இருந்தவர். நாட்டின் பிரதமராக இருபத்திரண்டு ஆண்டுகள் இருந்தவரிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அமைச்சரவைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் முழு அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர்களை நியமித்தபோது நிதி அமைச்சராக ஜனநாயகச் செயல் கட்சியைச் சார்ந்த லிம் குவான் எங் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்தை நம்பிக்கை கூட்டணியின் முக்கிய கட்சியான நீதிக்கட்சி அதிருப்தி தெரிவித்தது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரஃபி ரம்லி வெளிப்படையாகவே தமது அதிருப்தியை வெளியிட்டார். அன்வார் இபுராஹீம் கூட தமது அதிருப்தியை அம்பலப்படுத்தினார். ஜனநாயகச் செயல் கட்சியைக் காட்டிலும் அதிக தொகுதிகளைப் பெற்றிருந்த நீதிக்கட்சிக்கு நிதி துறை ஒதுக்கப்படுவதே நியாயம்!

நிதி அமைச்சு மிகவும் முக்கியமான அமைச்சாகும். மற்ற அமைச்சர்கள் தங்கள் திட்டத்திற்கான நிதியைப் பெற நிதி அமைச்சரின் ஆசீர்வாதம் (ஒப்புதல்) பெற வேண்டும். ஒரு அமைச்சரின் திட்டத்திற்கு நிதி ஒதுக்கலாமா வேண்டாமா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் நிதி அமைச்சரிடம் உண்டு என்று கூட சொல்லலாம். எனவே, மகாதீர் லிம் குவான் எங்கை நிதி அமைச்சராக நியமித்தபோது ஏதோ ஒரு உள் காரணம் இருந்தது என்பதைக் காலம் கற்பித்த பாடமாகும்.

ஜனநாயகச் செயல் கட்சி தமக்கு நிதி துறை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. அவ்வாறு வலியுறுத்தியிருந்தாலும் அதை மறுக்கும் அதிகாரம் பிரதமருக்கு (மகாதீருக்கு) உண்டு. அமைச்சரின் நியமனம் பிரதமரைப் பொருத்ததாகும்.

ஒரு வரலாற்று நிகழ்வைக் கவனிப்போம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் சுயாட்சி அரசு நிறுவப்பட்டது. அதில் அகில இந்திய காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் லீக் பங்குபெற்றன. அமைச்சரவை நியமனத்தைப் பற்றிப் பரிசிலிக்கும்போது பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் நிதி அமைச்சை முஸ்லிம் லீக்கிற்கு விட்டுக்கொடுத்தது.

அரசு நிர்வாக அனுபவம் இல்லாத காங்கிரஸ்வாதிகள் இந்த முக்கியமான நீதித்துறையை விட்டுக்கொடுத்ததைக் குறிப்பிடுகையில், காங்கிரஸ் அமைச்சர்கள் கொண்டுவரும் எந்தத் திட்டத்திற்கும் நிதி தேவைப்படும். அந்த நிதியை நிர்வகிக்கும் அதிகாரம் முஸ்லிம் லீக் கட்டுப்பாட்டில் இருந்தது. காங்கிரஸ் அமைச்சர்களின் திட்டத்திற்கான நிதியை ஒதுக்குவதில் அக்கறை காட்டாதது மட்டுமல்ல மறுக்கப்பட்டது.

எனவே, விரக்தி கொண்ட காங்கிரஸ் அமைச்சர்கள் முஸ்லிம் லீக்கிடம் குடித்தனம் செய்ய முடியாது. பிரிவினைத்தான் தீர்வு என்ற முடிவுக்கு வந்தனராம். இந்தியாவின் பிரிவினைக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், கல்வி அமைச்சருமான மெளலானா ஆசாத். (காண்க: India Wins Freedom).

நிதி அமைச்சின் தனிப்பட்ட அதிகாரத்தை அறியாதவர் அல்ல மகாதீர். அவரும் ஒரு காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அம்னோவை அழித்த மகாதீர், புது அம்னோவையும் அழிக்கத் துணிந்தவர். நேற்று முளைத்த நம்பிக்கை கூட்டணியை அழிக்க நிதி அமைச்சு பயன்படும் என்று கருதினாரா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்.

ஆனால், காலங்காலமாக ஜனநாயகச் செயல் கட்சியை எதிர்த்தவர் பொறுப்பான நிதித்துறையை அக்கட்சிக்கு விட்டுக்கொடுத்தது ஒரு சூழ்ச்சி திட்டம் என்று நினைப்பதில் நியாயம் உண்டு.

நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்குக் கொடுக்கப்பட்டதானது அவர் தமது விருப்பப்படி செயல்பட்டு பங்காளி கட்சிகளுக்கு இடையூறு வழங்குவார் என்ற நம்பிக்கை எழுந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. இடம் தரவில்லை. ஆனால், எதிர்தரப்பினர் கையில் இருக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதில் அவரின் அணுகுமுறை சரியானதாகப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அவர் அதை உணர்ந்துவிட்டார் என்று கூட சொல்லலாம்.

ஆகமொத்தத்தில், தமது செல்வாக்கைப் பலப்படுத்த மகாதீர் மேற்கொண்ட சகுனித்தனம் வெற்றி கண்டது எனலாம். மகாதீர் மட்டும் ஒப்பந்தப்படி நடந்து கொண்டிருந்தால் நம்பிக்கை கூட்டணி கவிழ்ந்திருக்காது.