கி.சீலதாஸ் – அன்வார் பிரதமராவுடன் அலுவககத்திற்கு செருப்புடன் வந்தார். அதோடு அரசாங்கம் வழங்கிய S600 சொகுசு வாகனத்தையும் வேண்டாம் என்றார். ஆனால், அவர் ஏன் ஒரு விலையுந்த காலனியுடன் பவனி வந்தார்!
இரண்டு அபூர்வமான சம்பவங்கள் மலேசியர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கக்கூடும். இது ஒருவருக்குக் கொடுக்கப்படும் பரிசு பற்றியதாகும். பரிசு கொடுப்பது ஒன்றும் புதிய பண்பாடு அல்ல. ஆனால், அரசு ஊழியர்கள் பொது மக்களின் தேவைகளைக் கவனிக்கும் பொறுப்புடையவர்கள்.
எனவே, தங்கள் காரியம் துரிதமாகச் செய்து கொடுக்க கேட்டுக்கொள்ளும்போது ஏதாவது பரிசு கொடுப்பது இயல்பாக இருக்கலாம். லஞ்ச ஒழிப்பு இலாகாவின் அறிக்கையின்படி இனாமாகக் கொடுக்கப்படும் பல பொருட்கள் பரிசுகளாகச் கருதப்படும் என்று குறிப்பிடுகிறது. அவற்றில் குறிப்பாக பணம், வெளிநாட்டுப் பயணச் செலவு, ஒரு நிறுவனத்தில் பங்கு போன்றவை பரிசுகளாகக் கருதப்படுமாம். அவை லஞ்சமாகவும் கருதப்படும்.
இந்தக் காலகட்டத்தில் பல அரசு அலுவலகங்களில் பரிசு கொடுப்பதும் பெறுவதும் தவறு என்ற அறிக்கையைக் காணலாம். எனவே, ஏதாவது அரசு காரியம் கைகூட வேண்டுமென்ற நோக்கத்துடன் பரிசு கொடுக்கப்பட்டால் அது ஊழலாகக் கருதப்படும். தங்களுக்கு ஆதரவாக இருப்போருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பதவிகளை அள்ளி வீசுவார்கள்.
இதை எந்த ரகத்தில் சேர்ப்பது? இப்படிப்பட்ட நடவடிக்கையும் ஊழல் நடவடிக்கை என்று சொல்லுவதில் என்ன தவறு? ஊழல் தடுப்புத்துறை இதைக் கவனத்தில் கொள்ளாதது அதிசயம்தானே!
புருவங்களை உயர்த்தியது
நம் நாட்டுச் சுல்தான்கள், மாமன்னர் யாவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது இயல்பு. அவர்கள் நாடு திரும்பும் போது ஒரு வேளை சில பரிசுகளை வாங்கி வந்து தங்கள் மாநில உயர் நிர்வாகிகளுக்குக் கொடுப்பது ஒன்றும் வியப்பானதல்ல. இதுவும் இயல்பு எனலாம் ஆட்சியாளர்கள் ஊழல் வழியாகக் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படாது என்று நினைக்கலாம். நம்மை வியப்பில் ஆழ்த்திய இரு சம்பவங்களைக் கவனிப்போம். மாட்சிமை தாங்கிய ஜொகூர் சுல்தான் இபுராஹீம் சுல்தான் இஸ்கந்தர் இருவருக்குத் தந்த பரிசுகள் மலேசியர்களின் புருவங்களை உயர்த்தியது.
முதலில் டத்தோ ஹவிஸ் காஜி ஜொகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார். இவரின் முப்பாட்டனார் தான் டத்தோ ஓன் ஜஃபார். அவர் ஜொகூரின் மந்திரி புசாராகச் சேவையாற்றியவர். அதற்கு முன்பு ஓனின் தந்தையும் ஜொகூர் மந்திரி புசாராக இருந்துள்ளார். ஹவிஸின் தாத்தா தான் முன்னாள் பிரதமர் துன் உசேன் ஓன். நல்ல உயர்வான அரசியல் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவர் ஹவிஸ். ஹவிஸின் தந்தை காஜி ஒரு வழக்குரைஞர். என் நெருங்கிய நண்பர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
மந்திரி புசார் ஹவிஸூக்கு ஜொகூர் சுல்தான் விலையுயர்ந்த காலணியைப் பரிசளித்தார். ஜொகூர் அரண்மனைக்கும் டத்தோ ஓன் ஜஃபார் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது வரலாற்று உண்மை. அந்தத் தொடர்பு இன்று கூட நீடிக்கிறது எனலாம். ஹவிஸின் உறவினர்களை எடுத்துக்கொண்டால் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின், டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
அடுத்து பதினைந்தாம் பொதுத் தேர்தல் முடிந்ததும் சில நிலையற்ற நாட்களுக்குப் பிறகு டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் பிரதமராக நியமிக்கப்பட்டது நினைவிருக்கும். அன்வருக்கும் விலையுயர்ந்த காலணியை ஜொகூர் சுல்தான் அன்பளித்ததாகச் செய்தி வெளியாயிற்று.
அரசாட்சி எப்படி இருக்க வேண்டும்
சாதாரண நண்பர்களிடையே, உறவினர்களிடையே பரிசுகள் பரிமாறிக் கொள்வது விசித்திரமானதாகக் கருதப்பட மாட்டாது. இவ்விரு காலணி அன்பளிப்புகள் வெறும் அன்பளிப்பு மட்டும்தான் அல்லது அதில் ஏதாவது செய்தி மறைந்திருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது ஓர் அற்புதமான நிகழ்ச்சி மனக்கண் முன் வந்து நின்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகியால் படைக்கப்பெற்ற இராமாயணக் காவியம் தான் அது. மன்னன் தசரதரின் மைந்தன் இராமனின் வாழ்வை நினைவுபடுத்தியது.
தந்தை தசரதர் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு இராமர் பதினான்கு ஆண்டு வனவாசம் மேற்கொள்ளும்போது தமது இளவல் இலக்குமணனும் மனைவி சீதாவும் உடன் சென்றனர்.
வரப் புதல்வன் இராமரின் வனவாசத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் தசரத மன்னர் மரணத்தைத் தழுவுகிறார். இராமரின் மற்றொரு இளவல் பரதன் வரவழைக்கப்பட்டு அரசு பொறுப்பை ஏற்கும்படி வற்புறுத்தப்பட்டபோது அண்ணன் இராமர் துறவாழ்வை மேற்கொண்டு காட்டில் வாழும்போது அரியணை எதற்கு என்று மறுத்துவிடுகிறான்.
பரதன் தன் அண்ணனைத் தேடி புறப்பட்டு அதிர்ஷ்டவசமாக அவரின் இருப்பிடமான சித்திர கூட மலையை அடைந்து அவரைக் கண்டு இராமர் தந்த அரசர் தர்மத்தைப் பற்றிய விளக்கங்களைப் பெறுகிறான். வால்மீகி இராமாயணத்தின் நூறாம் படலத்தில் இராமர் பரதனிடம் கேட்கும் கேள்விகள் அரசாட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
நூற்றைந்தாம் படலத்தில் தருமத்தைப் பற்றிய விளக்கம். அதில் “உயர் பதவியில் இருப்பவர்கள் கீழே விழுகிறார்கள். சேர்க்கை எல்லாம் இறுதியில் பிரிந்து போகும், உயிரின் முடிவு மரணம். உப்புக் கடலைச் சென்றடையும் யமுனை நதியின் தூய நீர் கடலுடன் கலந்துவிடுகிறது. யமுனையின் தூய நீர் தனது இழந்த தூய்மையைத் திரும்பப்பெற இயலாது என்ற தத்துவ விளக்கமும் காண முடிகிறது. சத்தியத்தைத் தவறக்கூடாது என்பதையும் நூற்றொன்பதாம் படலத்தில் விவரிக்கிறார்
இராமர் தந்த இரு பாதுகை
இராமர். ஆகமொத்தத்தில், நல்ல ஆட்சி எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிய இராமர் நாடு திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படி பரதனின் வற்புறுத்தலை ஏற்க மறுக்கிறார்.
அண்ணனின் மன உறுதியையும் வாக்கு தெளிவையும் உணர்ந்த பரதன் தாம் பதினான்கு ஆண்டுகள், அதாவது இராமரின் வனவாச காலத்தின் போது இராமர் போல் ஆட்சி புரிய சம்மதித்து அதற்கு அடையாளமாக இராமர் அணிந்திருந்த பாதுகையைக் கேட்டு பெற்றுக் கொள்கிறான் பரதன். இராமர் தந்த இரு பாதுகைகளையும் தமது சிரத்தில் தாங்கி கொண்டு அயோத்திய நாட்டை அடைந்தான்.
இராமரின் தர்மத்தை அவர் அணிந்திருந்த பாதுகையைச் சின்னமாகக் கொண்டு பரதன் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராமர் வனவாச வாழ்க்கையை முடித்துக் கொண்டு அயோதிக்குத் திரும்பியதும் யாதொரு மனச்சங்கடமும் இல்லாமல் ஆட்சியை அண்ணனிடம் ஒப்படைக்கிறான் பரதன். நவீன காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்று வினவத் தோன்றும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதே தர்மம் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.
இராமனின் பாதுகை தர்ம ஆட்சிக்கு வழி கோலுகிறது என்பதை உணரும்போது, ஜொகூர் சுல்தான் மந்திரி புசார் அவிஸ் ஓனுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீமுக்கும் பரிசளித்த பாதுகைகள் எதைக் குறிக்கின்றன? ஆட்சிக்கு ஒரு கெடு இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஆட்சியில் தர்மம் இருக்க வேண்டும், நீதி நெறிகள் பேணப்பட வேண்டும் என்பனபோன்ற ஆட்சி தர்மங்களைச் சுல்தான் நினைவுபடுத்தினாரா? பாதுகை என்ற சொல் தேசிய மொழியில் காலணி என்றுதான் விளக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ படுக்கா பகிண்டா என்பது எதை விளக்குகிறது? பரதன் சுமந்த ஆட்சிப் பொறுப்பை விளக்குகிறதா?
நல்ல ஆட்சி
ஶ்ரீ படுக்கா பகிண்டா என்பதற்கு விளக்கமளிப்போர் நவீன முறையில் அது அரசின் அறிக்கை என்கிறார்கள். இந்த விளக்கம் வரலாற்று உண்மைக்குப் புறம்பானதாக இருக்கிறது எனின் தவறாகாது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இராமாயண காவியத்தை “வாயாங் கூலிட்” என்ற நிழல் பொம்மையாட்ட நாடகம் நாடெங்கும் பிரசித்திப்பெற்ற கலையாகும். அது இராமாயணத்தைப் பற்றிய நாடகத்தை நடத்திக் காட்டியது. இந்தக் கலை இன்றைக்குத் தமது மவுசை இழந்துவிட்ட போதிலும் இராமாயணம் இந்த நாட்டுக்குப் புரியாத காவியம் அல்ல என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.
ஜொகூர் சுல்தானுக்கு இராமாயணம் தெரிந்திருக்காது என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில், இராமன்-பரதன் சகாப்தத்தை மனதிற்கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போதும், ஆட்சியில் இருக்கும் போதும் பழங்கால அறநெறியை நினைவுபடுத்தும் நோக்கமா என்பதும் உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால், நல்ல ஆட்சி நிலவ வேண்டும். ஆட்சிக் காலத்திற்கும் கெடு உண்டு. ஆட்சி நிரந்தரமற்றது என்பதை உணர்த்தும் செயலா காலணி அன்பளிப்பு? புரியாதப் புதிர்! ஆனால், அதிலும் நல்ல இரகசியம், நல்ல அறம் விளக்கும் செய்தியும் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளலாம். இப்படி ஒரு வியாக்கியானத்திற்கு இடம் உண்டு.